search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new year"

    • சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 9 குழந்தைகள் பிறந்தன
    • ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன.

    சென்னை:

    நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் ஒன்று கூடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் சிலர் தேவாலயங்கள், கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு கொடுத்தும் மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மதியம் வரை சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 29 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 9 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் ஆகும். இதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகளும், கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன.

    ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன. இதில் 6 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் ஆகும். நேற்று பிறந்த இந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

    ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    • வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர்.நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). இவர்கள் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி புதுவை கடற்கரைக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மோகனா, லேகா ஆகியோரது பள்ளி நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் நவீன் (15), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்த கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி சகோதரிகள் உள்பட 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    இன்று காலை மீண்டும் கடலில் இழுத்து செல்லப்பட்டு மாயமான 4 மாணவ-மாணவிகளையும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை.

    கன்னியாகுமரி:

    ஆங்கில வருடமான 2023-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2024-ம் ஆண்டு மலர்ந்து. இந்த புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

    அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.

    மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்துக்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. அதனையே சுற்றுலா பயணிகளால் பார்க்க முடிந்தது.

    கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 2024-ம் ஆண்டு என்னென்ன நடைபெறும் என சில கணிப்புகளை கணித்து தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும்.

    புதுடெல்லி:

    எதிர்காலத்தை கணிக்கும் வல்லுனர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் மிக முக்கியமான நபராக கருதப்படுகிறார்.

    இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய 'லெஸ் ப்ரோபீடீஸ்' புத்தகத்தில் கவிதைகளாக எப்போது என்னென்ன நடக்கும் என குறிப்பிட்டுள்ளாராம். இவரது கணிப்புகள் புரிந்து கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும். இவரை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கூட இவரின் கணிப்புகள் சில சமயங்களில் கடினமாக இருந்தாலும் கூட இவரது ஏராளமான கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன.

    அந்த வகையில் அவர் 2024-ம் ஆண்டு என்னென்ன நடைபெறும் என சில கணிப்புகளை கணித்து தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில், ஒரு கடற்படை போர் நடக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால் பெரும் கடலை பயத்துக்கு உள்ளாக்குவார் என கூறியுள்ளார். இது தைவான் தீவுடனான சீனாவின் பதட்டத்தை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

    இதேப்போல அவரது புத்தகத்தில் ஒரு பத்தியில், தீவுகளின் ராஜா பலத்தால் விரட்டப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இது மூன்றாம் சார்லஸ் மன்னரை குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள்.

    இதேபோல சார்லஸ் மன்னரை பற்றிய ஒரு பத்தியில், விரைவில் ஒரு பேரழிவு காரணமாக போர் நடக்கும். அது முடிந்த பின் புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்டகாலம் பூமியை பாதுகாப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமீப ஆண்டுகளில் காலநிலை நெருக்கடி மிகவும் மோசமாக உள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் இது இன்னும் மோசமாகி விடும் என்று கணித்துள்ளார்.

    அவரது கணிப்புகளில் இருந்து ஒரு பத்தியில், வறண்ட பூமி மேலும் வறண்டு வரும். அதன் விளைவாக பெரும் வெள்ளம் ஏற்படும். உலகின் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும்.

    செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவரது கணிப்பின்படி, உலகம் விரைவில் போப் பிரான்சிற்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும். மிகவும் வயதான போப் ஆண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
    • மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.

    சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.

    அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.

    இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.

    விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன.
    • வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும்.

    புதுச்சேரி:

    புத்தாண்டையொட்டி புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    புதுவையில் உள்ள மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ஓட்கா என 800-க்கும் மேற்பட்ட மது வகைகள் கிடைக்கும். புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மது கடைகளில் கூடினர்.

    புதுவையில் புத்தாண்டையொட்டி மது விற்பனையை கடந்த காலங்களில் இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி அளித்தனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு அளித்து கலால் துறை சிறப்பு அனுமதி அளித்தது. வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதியது.

    • கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.
    • சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு மக்கள் குவிகின்றனர்.

    புதுவையில் உள்ள தனியார் ஓட்டல்கள், கடற்கரைகள், திறந்த வெளி அரங்குகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்குகிறது.

    இதற்கு உள்ளாட்சித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து, கேளிக்கை வரி வசூலும் செய்கிறது. ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அனுமதியில்லை.

    ஆனால் கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்கவில்லை என சுற்றுலா பயணிகள் பலரும் புகார் தெரிவித்து சென்றனர்.

    இதனால் இந்த ஆண்டு உள்ளாட்சித்துறை அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவு திறந்தவெளி அரங்குகளில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் காற்றில் பறக்க விடப்பட்டது. 500 பேர் மட்டுமே கூடும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை அனுமதித்தனர்.

    சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    மது வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவோர் அறிவித்த மது வகைகளை வழங்காமல் நிறுத்தி விட்டனர். சிறிய பாட்டில் பீர் வகைகளை மட்டும் வழங்கினர். அதையும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலை இருந்தது.

    மதுவை விட உணவு வகைகளை பெற சுற்றுலா பயணிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

    இரவு 10 மணிக்கு மேல் மெனுவில் அறிவித்தபடி உணவு வகைகளையும் வழங்கவில்லை. இதனால் சில இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி தங்களுக்கு வழங்கப்பட்ட டேக்கை குறைந்த விலைக்கு பிறரிடம் சுற்றுலா பயணிகள் விற்று விட்டு சென்றனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்த புகாரும் தெரிவிக்க மாட்டார்கள். நமக்கேன் வம்பு? என சென்று விடுவார்கள் என்பதால்தான் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இதேநிலை நீடித்தால் வரும் காலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி விடும்.

    • புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர்.

    இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில் வீட்டுக்குள் நின்றபடியே அவர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

    வெள்ளை நிற உடையில் காணப்பட்ட ரஜினிகாந்த் இரு கைகளையும் மேலே கூப்பி, தனது பாணியில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். "பறக்கும் முத்தம்" கொடுத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தலைவா... தலைவா... என்று கோஷமிட்டபடியே ரஜினிக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ரஜினி கைகளை அசைத்த படியே சில நிமிடங்கள் நின்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றார். இதன் பிறகு ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு இருந்து கலைந்து சென்றனர்.

    • அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வெரு ஆண்டும் மண்டல மறறும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27-ந்தேதி முடிவடைந்து கோவில் நடை சாத்தப்பட்டது.

    மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போன்று மகரவிளக்கு பூஜை காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பக்தர்களை சன்னிதானத்துக்கு செல்ல ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். இதற்காக நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் இன்று பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்ம பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி சரிதனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    • தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
    • சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள்.

    2024 புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், லாட்ஜ்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தனியார் அமைப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் இருந்தது. ஓட்டல்கள், லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    இன்னிசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், அறுசுவை உணவு என புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலாபயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது.

    இன்று காலையும் ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் கம்பளி ஆடை மற்றும் குல்லா அணிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

    சுற்றுலாபயணிகள் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.

    இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×