search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய புத்தாண்டு நிகழ்ச்சிகள்
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நள்ளிரவை தாண்டியும் கடற்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள்

    ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய புத்தாண்டு நிகழ்ச்சிகள்

    • கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.
    • சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு மக்கள் குவிகின்றனர்.

    புதுவையில் உள்ள தனியார் ஓட்டல்கள், கடற்கரைகள், திறந்த வெளி அரங்குகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்குகிறது.

    இதற்கு உள்ளாட்சித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து, கேளிக்கை வரி வசூலும் செய்கிறது. ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அனுமதியில்லை.

    ஆனால் கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்கவில்லை என சுற்றுலா பயணிகள் பலரும் புகார் தெரிவித்து சென்றனர்.

    இதனால் இந்த ஆண்டு உள்ளாட்சித்துறை அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவு திறந்தவெளி அரங்குகளில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் காற்றில் பறக்க விடப்பட்டது. 500 பேர் மட்டுமே கூடும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை அனுமதித்தனர்.

    சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    மது வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவோர் அறிவித்த மது வகைகளை வழங்காமல் நிறுத்தி விட்டனர். சிறிய பாட்டில் பீர் வகைகளை மட்டும் வழங்கினர். அதையும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலை இருந்தது.

    மதுவை விட உணவு வகைகளை பெற சுற்றுலா பயணிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

    இரவு 10 மணிக்கு மேல் மெனுவில் அறிவித்தபடி உணவு வகைகளையும் வழங்கவில்லை. இதனால் சில இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி தங்களுக்கு வழங்கப்பட்ட டேக்கை குறைந்த விலைக்கு பிறரிடம் சுற்றுலா பயணிகள் விற்று விட்டு சென்றனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்த புகாரும் தெரிவிக்க மாட்டார்கள். நமக்கேன் வம்பு? என சென்று விடுவார்கள் என்பதால்தான் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இதேநிலை நீடித்தால் வரும் காலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி விடும்.

    Next Story
    ×