search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு"

    • இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

    ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    • புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை.

    கன்னியாகுமரி:

    ஆங்கில வருடமான 2023-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2024-ம் ஆண்டு மலர்ந்து. இந்த புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

    அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.

    மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்துக்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. அதனையே சுற்றுலா பயணிகளால் பார்க்க முடிந்தது.

    கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 2024-ம் ஆண்டு என்னென்ன நடைபெறும் என சில கணிப்புகளை கணித்து தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும்.

    புதுடெல்லி:

    எதிர்காலத்தை கணிக்கும் வல்லுனர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் மிக முக்கியமான நபராக கருதப்படுகிறார்.

    இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய 'லெஸ் ப்ரோபீடீஸ்' புத்தகத்தில் கவிதைகளாக எப்போது என்னென்ன நடக்கும் என குறிப்பிட்டுள்ளாராம். இவரது கணிப்புகள் புரிந்து கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும். இவரை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கூட இவரின் கணிப்புகள் சில சமயங்களில் கடினமாக இருந்தாலும் கூட இவரது ஏராளமான கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன.

    அந்த வகையில் அவர் 2024-ம் ஆண்டு என்னென்ன நடைபெறும் என சில கணிப்புகளை கணித்து தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில், ஒரு கடற்படை போர் நடக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால் பெரும் கடலை பயத்துக்கு உள்ளாக்குவார் என கூறியுள்ளார். இது தைவான் தீவுடனான சீனாவின் பதட்டத்தை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

    இதேப்போல அவரது புத்தகத்தில் ஒரு பத்தியில், தீவுகளின் ராஜா பலத்தால் விரட்டப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இது மூன்றாம் சார்லஸ் மன்னரை குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள்.

    இதேபோல சார்லஸ் மன்னரை பற்றிய ஒரு பத்தியில், விரைவில் ஒரு பேரழிவு காரணமாக போர் நடக்கும். அது முடிந்த பின் புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்டகாலம் பூமியை பாதுகாப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமீப ஆண்டுகளில் காலநிலை நெருக்கடி மிகவும் மோசமாக உள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் இது இன்னும் மோசமாகி விடும் என்று கணித்துள்ளார்.

    அவரது கணிப்புகளில் இருந்து ஒரு பத்தியில், வறண்ட பூமி மேலும் வறண்டு வரும். அதன் விளைவாக பெரும் வெள்ளம் ஏற்படும். உலகின் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும்.

    செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவரது கணிப்பின்படி, உலகம் விரைவில் போப் பிரான்சிற்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும். மிகவும் வயதான போப் ஆண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
    • மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.

    சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.

    அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.

    இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.

    விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வெரு ஆண்டும் மண்டல மறறும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27-ந்தேதி முடிவடைந்து கோவில் நடை சாத்தப்பட்டது.

    மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போன்று மகரவிளக்கு பூஜை காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பக்தர்களை சன்னிதானத்துக்கு செல்ல ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். இதற்காக நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் இன்று பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்ம பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி சரிதனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    • வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.
    • மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கோவை:

    2023-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 2024-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    2024-ம் ஆண்டு பிறந்ததையொட்டி கோவையில் மக்கள் முக்கிய பகுதிகளில் திரண்டு புதிய ஆண்டை ஆடல், பாடல்களை இசைக்க விட்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதலே கோவை வாலாங்குளத்தில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிய தொடங்கினர்.

    அங்கு பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இன்னிசை கச்சேரிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், லேசர்ஷோவும் நடத்தப்பட்டது. வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும் சின்னத்திரை நடிகர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிமிக்கிரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் செண்டை மேளம், ஆங்காங்கே செல்பி ஸ்பாட், பூ போன்ற அலங்கார உடை, பிரமாண்ட பாண்டா கரடி உள்ளிட்ட வேடங்களில் பொதுமக்களை குஷிபடுத்தினர்.

    குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. பல்வேறு நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

    இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கோவை வாலாங்குளக்கரையில், கண்ணை கவரக்கூடிய லேசர் ஷோ மற்றும் டிரோன் ஷோ நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண, வண்ண வடிவத்தில் ஜொலித்த இந்த நிகழ்ச்சி அங்கு திரண்டு இருந்த மக்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது. குறிப்பாக புத்தாண்டு பிறந்ததும் 15 நிமிடங்களுக்கு 250 டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது அங்கு குழுமியிருந்த மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    மக்கள் அதனை பார்த்து ரசித்து, தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அத்துடன் 300 வகையான வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டு, வாலாங்குளம் குளக்கரையே மின்னொளியிலும், லேசர் ஷோவிலும், வண்ண பட்டாசுகள் வெடித்தும் அந்த பகுதியே வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருந்தது.

    புத்தாண்டு பிறந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவிலான மக்கள் வாலாங்குளத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால், வாலாங்குளத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
    • சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள்.

    2024 புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், லாட்ஜ்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தனியார் அமைப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் இருந்தது. ஓட்டல்கள், லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    இன்னிசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், அறுசுவை உணவு என புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலாபயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது.

    இன்று காலையும் ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் கம்பளி ஆடை மற்றும் குல்லா அணிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

    சுற்றுலாபயணிகள் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.

    இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
    • வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    • வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.

    2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு 2024 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைகளுக்கு திரண்டுள்ளனர்.

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைக்குள் நுழையும் அனைவரையும் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர்

    கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்- சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடற்கரை சாலையில் சுற்றுலா துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலையும் மூடப்பட்டது.

    ×