என் மலர்
வழிபாடு

2026 New Year rasi palan- தனுசு முதல் மீனம் வரை 4 ராசிபலன்களுக்கான புத்தாண்டு ராசிபலன்
- தன்னம்பிக்கை நிறைந்த தனுசு ராசியினருக்கு 2026ம் ஆண்டு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
- உழைப்பினால் காரியம் சாதிக்கும் மகர ராசியினருக்கு 2026ம் ஆண்டு. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தெய்வ நம்பிக்கையில் சிறந்த தனுசு ராசியினரே
தன்னம்பிக்கை நிறைந்த தனுசு ராசியினருக்கு 2026ம் ஆண்டு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
மே மாதம் வரை சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். விழிப்புடன் செயல்பட வேண்டிய வருடம். அர்த்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவின் தாக்கம் இருப்பதால் தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம்.
பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும்.மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்படுத்தினால் வளமான எதிர்காலம் உண்டு. ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. தடை பட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்
ஆண்டு முழுவதும் தனுசு ராசிக்கு 4ம் மிடமான சுகஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும். ஜூன் மாதத்தில் குரு பார்வை சனி பகவானுக்கு கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தம் இல்லாத குற்றத்தில் சிக்கியவர்கள் வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்கள் விற்று விடும்.
பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். சிலருக்கு புதிய மனை வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் ராகு பகவானும் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள். டிசம்பர் 5, 2026 முதல் ராகு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சுரிப்பார்கள். ஆற்றலுக்கும், திறமைக்கும் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் நடக்கும்.ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும்.
புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும். முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. சிலருக்கு மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.
மூலம்
நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும் வருடம். இதுவரை இருந்த பயம் அகலும்.வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும்.நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். பிரதோஷ வழிபாடு செய்யவும்.
பூராடம்
சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் வருடம். மே மாதம் வரை ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வையிருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும். புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும்.
பெண்கள்,அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும்.ஆஞ்சநேயரை வழிபடவும்.
உத்திராடம் 1
பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.தந்தையுடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும். அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. புதியதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும்.
வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சி பலிதமாகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். பிறரின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். பெரிய பொருள் உதவிகள் கிடைக்கும். சுவாமி ஐயப்பனை வழிபடவும்.
பரிகாரம்: வியாழக்கிழமை மாலை லட்சுமி குபேரர் வழிபாடு செய்வதால் செல்வ வளம் கூடும்.
உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகர ராசியினரே...உழைப்பினால் காரியம் சாதிக்கும் மகர ராசியினருக்கு 2026ம் ஆண்டு. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். வசீகரமான தோற்றம் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் பலமும் உண்டாகும். அனைவரும் வியக்கும் வகையில் வாழ்க்கை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும்.
குருவின் சஞ்சார பலன்கள்
மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் மே மாதம் வரை குரு பகவான் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். ஜூன் மாதம் முதல் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைந்து ராசியை பார்ப்பார். ஆன்ம பலம் பெருகி சுறுசுறுப்பாக தைரியத்துடன் இருப்பார்கள். குடும்ப உறவுகளை குறிப்பாக உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வதால் கவலைகள் குறையும். இதனால் உடலில் இருந்த நோய்கள் நீங்கும் மன சஞ்சலங்கள் கவலைகள் கஷ்டங்கள் நீங்கி புதிய தெம்பு பிறக்கும். உங்கள் செல்வாக்கு கண்டு உறவினர்கள் கண் திருஷ்டி ஏற்படும். தடைப்பட்ட திருமண வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
தடைபட்ட பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நிறைவேறும். சிலருக்கு அவ்வப்போது ஞாபக சக்தி குறையும். கண், காது, மூக்கு தொடர்பான பாதிப்புகள் வரலாம். அடமானத்தில் இருந்த வீடு, வாகனம், நிலபுலன், நகை அனைத்தும் மீண்டு வரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் குடும்ப பாரத்தை சுமக்க நேரும். திருமணத் தடை அகலும். அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.சிலர் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் துவங்கலாம்.
சனியின் சஞ்சார பலன்கள்
2026ம் ஆண்டு முழுவதும் வெற்றி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பார். மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும். தொழில் வளம் சிறக்கும்.அரசாங்க, வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். தொழிலில் சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தாராள தனவரவு வந்து கொண்டே இருக்கும்.கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் வாங்க, வீடு கட்டும் பணி தொடர தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.
சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். புத்திர பிராப்தம் கிட்டும்.வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். சிலர் மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், சகோதர, சகோதரிகள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். சிலர் பிள்ளைகள் உயர் கல்வி அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர் செல்லலாம்.
ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானும் அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார்கள். தடை தாமதமான முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். சொத்து, சுகம், தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கும். குடும்ப சுமை குறையும். வீண் பிடிவாதம், முன் கோபம் குறையும். தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள்.
இடப்பெயர்ச்சி செய்ய நேரும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல் வாதிகள் கவனமாக திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலம் .வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு பகவான் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து எட்டாம் இட கேது மூலம் வம்பு வழக்கை வீட்டு வாசலில் நிறுத்துவார். வாக்குறுதியே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.
உத்திராடம் 2,3,4
மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம். உங்களின் பேச்சுத் திறமையால் பிறரை ஈர்க்கும் சக்தி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற அனைத்தும் சீராக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். திருமண யோகம் தாமதப் பட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு வேலை மாற்ற எண்ணம் அதிகரிக்கும்.
புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய அப்பார்ட்மென்டில் விரும்பிய வீடு கிடைக்கும்.உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். போதுமான பணம் கிடைத்தாலும் செலவுகளும் மிகுதியாக இருக்கும். திருமணத் தடை நீங்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். இந்த வருடத்தில் திருமண முயற்சி கைகூடும். கால பைரவரை வழிபடவும்.
திருவோணம்
வாழ்க்கையில் செட்டில் ஆகும் காலம் வந்துவிட்டது. உங்களின் லைப் ஸ்டைல் மாறப் போகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். இதுவரை வேலை இன்மை மற்றும் தொழில் ஏற்ற இறக்கத்தால் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சலை சந்தித்த உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போகிறது. உங்களின் திடீர் வளர்ச்சி அண்டை அயலார் மற்றும் உற்றார் உறவினர்கள் மத்தியில் தனி அந்தஸ்த்தை பெற்றுத்தரும்.
பேச்சை தொழிலாக கொண்ட பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு மகிழ்வை தரும். வேற்று மத , இன அல்லது மொழி பேசுபவர்களின் நட்பு கிடைக்கும் அல்லது வாழ்க்கைத் துணை கிடைக்கலாம். அந்நிய மொழியை கற்பதில் ஆர்வம் மிகும். அந்நிய மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். பால்ய வயது குழந்தைகளுக்கு பேச்சு வருவதற்கு கால தாமதம் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது கேட்பது நல்லது.
அவிட்டம் 1, 2
அசுப பலன்கள் குறைவாகவும் சுப பலன்கள் அதிகமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் செயல்பட்டு லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தை, இன்சூரன்ஸ் உயில் சொத்து மூலம் ஆதாயம் கிட்டும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம். திருமணம் நிச்சயமாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும்.பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள். கவனக்குறைவான செயல்களால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சினை ஏற்படும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். உடல்நிலை தேறும்.
வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். பொது வாழ்வில் இருப்பவர்களின் வெளிப்படையான பயமற்ற கருத்துகள் மக்கள் மத்தியில் நன் மதிப்பை அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. குலதெய்வத்தை வழிபடவும்.
பரிகாரம்: பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவபெருமானையும் வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே...
அனுபவ அறிவால் வெற்றி பெறும் கும்ப ராசியினருக்கு 2026ம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள் பொறுப்புடன் செயல்படு வீர்கள். கடந்த கால கஷ்டங்கள் விலகும். எண்ணங்களில் பிரம்மாண்டம் இருக்கும். லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.புகழ் அந்தஸ்து கவுரவம் உயரும். சிந்தித்து செயல்பட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குரு பகவான் மே மாதம் 2ம் தேதி வரை வரை பஞ்சம ஸ்தானத்திலும் ஜூன் மாதம் முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் நின்று பலன் தருவார். சுமார் ஐந்து மாத காலங்களுக்கு ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் சுப பலன்கள் கூடிவரும். திருமணம் குழந்தை பிராப்தம் போன்றவற்றில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குல தெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும்.ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள்.அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலை மாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பல மடங்கு நன்மையான பலன்கள் நடக்கும்.
வருமானம் உயரும். விண்ணப்பித்த வீடு வாகன கடன் கிடைக்கும். நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி உறுதி. பணப்பற்றாக்குறையால் அவமானங்களை சந்தித்த நீங்கள் பொருளாதாரத்தை பெருக்க பல புதிய வழிகளை தேர்ந்தெடுப்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும்.தாயின் அன்பும் ஆதரவும் நல் ஆசியும் கிட்டும். தாயாருக்கும் இருந்த உடல் ரீதியான மனரீதியான தொந்தரவுகள் நீங்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்
ராசி அதிபதி சனி பகவான் இந்த 2026ம் வருடம் முழுவதும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதுவரை சமுதாயத்திற்கு வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டிற்கு சென்று வருவீர்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். ஆனால் பண வரவில் தடை தாமதம் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது.
குடும்ப பிரச்சனைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம்.அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். பூர்வீக சொத்து அல்லது தாய் வழி சொத்து வீடு, கட்டிடம் நிலம் போன்றவற்றில் இருந்த எல்லைத் தகராறு சீராகும். பாகப் பிரிவினையால் மன சங்கடம் சீராகும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவீர்கள். அந்தஸ்தை விமர்சிக்கும் விதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் முயற்சி வெற்றி தரும்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்தில் கேதுவும் நிற்கிறார்கள்.டிசம்பர் 5, 2026 முதல் 12ம்மிடத்தில் ராகுவும் 6ம்மிடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். ராசியில் ராகு நிற்பதால் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் தவறான தொழில் முதலீட்டில் ஈடுபட நேரும்.சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை தந்து தவறான பெரிய முதலீட்டில் வம்பு வழக்குகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை.
விசுவாசமான வேலையாட்கள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நம்பகமான வேலையாட்கள் இன்மை உங்களுக்கு நிம்மதியின்மையை தரும்.உடன் வேலை பார்பவர்கள் தாங்கள் செய்த தவறை உங்கள் மேல் திருப்பி விடலாம்.மேலாதிகாரியிடம் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனை இல்லாமல் இந்த காலகட்டத்தை கடக்க முடியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.சிலர் குடியிருக்கும் வீட்டை சகாய விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் விலங்குகளை கவனமாக பராமரிக்க வேண்டும்.
அவிட்டம் 3, 4
சுப பலன்கள் அதிகரிக்கும் வருடம். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும்.
தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும்.வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
சதயம்
குடும்பத்தில் நிம்மதி கூடும் வருடம். ராசி அதிபதி சனி பகவான் தன தன ஸ்தானத்தில் தன லாபாதிபதி குருவின் பார்வை பெறுவதால் தன யோகம் சிறப்பாக அமையும். கணவன், மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் அதிகமாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். சிலருக்கு மறுமண யோகம் ஏற்படும்.
உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும்.அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.சிலருக்கு கடல் கடந்து வேலை செய்யும் யோகம் உண்டாகும். வம்பு, வழக்குகளில் இருந்து மீள்வீர்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்.
பூரட்டாதி 1, 2, 3
தடைகள் விலகும் வருடம். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடி வில் வெற்றியும் உண்டாகும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள்விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தொழிலில்உண் டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும்.
சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள். செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். ராசி அதிபதியை குரு பார்ப்பதால் கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் கூடும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாழக்கிழமை ஸ்ரீ லட்சுமி குபேரரை வழிபடவும்.
பரிகாரம்: ஸ்ரீ வராகி அம்மனை வழிபட வாழ்க்கையில் எந்தவித தடங்கலும் வராது.
நல்ல உள்ளம் படைத்த மீன ராசியினரே...எதிர்பார்த்த இலக்கை அடைய விரும்பும் மீன ராசியினருக்கு 2026ம் ஆண்டு செல்வாக்கை உயர்த்தி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.
குருவின் சஞ்சார பலன்கள்
மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் வருடத் துவக்கத்தில் மே மாதம் வரை 4ம் இடத்திலும் ஜூன் மாதம் முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவம் நடைபெறும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் தாய் வழிச் சொத்து விஷயத்தில் சிறு சலசலப்பு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும்.
கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும்.சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்
மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனிபகவான் ஜென்ம ராசியில் ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பார். புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும். திருமணத்திற்கு இந்த வருடம் நாள் குறிக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.
சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். ஜென்மச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
2026ம் ஆண்டின் துவக்கத்தில் விரய ஸ்தானத்தில் ராகு பகவானும் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது பகவானும் நின்று பலன் தருவார்கள். டிசம்பர் 5, 2026 முதல் ராகு பகவான் லாப ஸ்தானத்திலும் கேது பகவான் பஞ்சமஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். ஜென்மச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் குரு பார்வை ராசிக்கு இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது. உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.
தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன அமைதி குறையும்.முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4
திருப்புமுனையான வருடம்.தொழில் முயற்சிகள் பலிதமாகும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். திருமணத்தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த வருடம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தியாக மனப்பான்மை மிகுதியாகும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.
உத்திரட்டாதி
கடமைகள் நிறைவேறும் வருடம். ராசிக்கு சனி குரு சம்பந்தம் என கோட்சார கிரகங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளது.இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசெளகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள்.
இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.மூத்த சகோதர,சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடவும்.
ரேவதி
அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் வருடம். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும்.
கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும்.நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட சிறப்பான பலன் உண்டாகும்.
பரிகாரம்: வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடு படுவீர்கள்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






