என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தில்லா புத்தாண்டு - சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு
- சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
- நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான 'ஹாட் ஸ்பாட்'டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இரவு 12 மணியை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகார முள் 12 மணியை தொட்டவுடன், 'ஹாப்பி நியூ இயர்' என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், 'கேக்' வெட்டியும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
மெரினா கடற்கரையில் வழக்கமான ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் குறைந்திருந்த நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 'டிரோன்' கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், வீலிங் சாகசம் செய்பவர்கள், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும் வகையில் சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் நேற்றிரவு 10 மணி முதல் மூடப்பட்டன. புத்தாண்டு தினமான இன்று கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை மாநகரில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் விபத்துகளோ, குற்ற செயல்களோ எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு சென்னையில் எந்த இடத்திலும் விபத்தால் உயிரிழப்பு, குற்றச்சம்பவங்கள் நடக்கவில்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






