என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குன்னூர்"
- கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அருவங்காடு:
குன்னூர் பகுதியில் கிராமப்புறம் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டாலும், அவை எளிதில் தப்பித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றைக்கரடி குன்னூர் ஆர்செடின் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள சின்னப்பன் என்பவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றது.
தொடர்ந்து சமையலறையில் இருந்த உணவுகளை தின்று ருசிபார்த்தது. பின்னர் அங்கிருந்த சமையல் பொருட்களை சூறையாடியது.
இதற்கிடையே வீட்டில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த சின்னப்பன் உடனடியாக சமையலறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு கரடி நின்றுகொண்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அண்டை வீட்டாரிடம் நடந்த விஷயங்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டுக்குள் நின்ற கரடியை தீப்பந்தங்கள் காட்டி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்கு விரட்டியடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
- கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பென்காம் எஸ்ட்டேட் அடர்ந்த வனப்பகுதி அருகே அமைந்து உள்ளது.
இதனால் அவ்வப்போது இந்த பகுதியில் வனவிலங்குகள் உலா வருகின்றன. மேலும் அவை அங்கு வசிக்கும் பலரையும் தாக்கி விட்டு தப்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கரடிகள் தினமும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
அந்த நேரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விடுவதால், கரடிகள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் உள்ள குக்கரை திறந்து சாதத்தையும் சாப்பிடுகின்றன.
மேலும் கடைகளை உடைத்து அங்குள்ள எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை தின்றுவிட்டு சென்று விடுகின்றன. அதிலும் குறிப்பாக ஒருசில கரடிகள் இரவு நேரங்களிலும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தூக்கத்தை தொலைத்து இரவும் பகலுமாக தவியாய் தவித்து வருகின்றனர்.
இரவும் பகலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது.
பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவ்வப்போது தீப்பந்தங்கள் காட்டி விரட்டினாலும், கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
எனவே பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
நேற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குட்டைகள், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்குள்ள சில குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
தேவால-உப்பட்டி டவர் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த வாகனம் நகர்ந்ததால் காரில் வந்தவர் உயிர்தப்பினார்.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதம் அடைந்தன. பெரிதும், சிறிதுமாக 17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
காற்றில் 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடுடன் மாற்றிடம் வழங்கப்பட்டது.
இதனால் கூடலூரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். சாலையின் நடுவே பாயும் ஆற்றைக் கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால் தற்போது அங்கு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. மற்றொரு பகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகிறார்கள்.
மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, `நீலகிரியில் பெய்து வரும் மழையால் பெரியளவில் பாதிப்பில்லை. மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அப்பர் பவானி-72,
சேரங்கோடு-39,
ஓவேலி-28,
பந்தலூர், நடுவட்டம்-22,
பாடந்தொரை-18,
செருமுள்ளி-16.
- தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
- விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.
மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகள்.
- யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகளை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் ஒருவர் இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது சாலைப் பகுதிக்கு வந்து செல்கின்றன. இதில் ஒற்றைக் கொம்பு ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நடமாடி வருகிறது.
இந்த ஒற்றைக் கொம்பு யானை, காட்டேரி குடியிருப்பு பகுதி மற்றும் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் நடமாடியது. மேலும், சில நேரங்களில் சாலையில் நடமாடும் இந்த யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
எனவே ஒற்றைக் கொம்பு யானையால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 15 போ் கொண்ட வன ஊழியா்கள் பணி அமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக குன்னூா் வனச்சரகா் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளாா்.
- பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
- தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.
அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.
குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர்.
- யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர்.
அருவங்காடு:
குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம், கிரேக்மோர் உள்ளிட்ட பகுதியில், கடந்த ஒரு மாதமாக 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அவை காட்டுக்குள் செல்லாமல், தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளன. மேலும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் 5 காட்டு யானைகள் இன்று அதிகாலை 4 மணியளவில் நாக்குநெறி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் சமையல் எண்ணெயை குடித்து ருசி பார்த்தது. அந்த நேரத்தில் பழனியம்மாள் வீட்டில் எவரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் அந்த காட்டு யானைகள் பக்கத்தில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக விழித்துக்கொண்டு, வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்றனர்.
இதற்கிடையே கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். பின்னர் அந்த யானைகள் கூட்டம் வழக்கம்போல் அருகே உள்ள வனத்திற்குள் சென்றுவிட்டது.
எங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து மனுநீதிநாள் முகாம், வனத்துறை அலுவலகம் மட்டுமின்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து உள்ளோம். ஆனாலும் அந்த யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, எங்கள் பகுதியில் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகளை கும்கிகள் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
- ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.
தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.
நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
- தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்துவமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வ லர்களுக்கு வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், தாசில்தார் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
- நகரமன்ற துணை தலைவர் பா.மு.வாசிம் ராஜா தொடங்கி வைத்தார்
- நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி உள்ளிட்டோர் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம் குப்பை சேமிப்பு கிடங்கில், திடக்கழிவு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேமிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை குன்னூர் நகரமன்ற துணை தலைவரும், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளருமான பா.மு.வாசிம் ராஜா, நகர கழக செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான எம்.ராமசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தாசந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி, ராபர்ட், வசந்தி, செல்வி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- போக்குவரத்து பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருவங்காடு,
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழையும், பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாறு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குன்னூரில் இருந்து கோவைக்கு ஒரு சுற்றுலா காரில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண் குவியல், கற்களை அகற்றி சீர்படுத்தினர். இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்