என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் மலைப்பாதையில் கூட்டம், கூட்டமாக சுற்றிய காட்டு யானைகள்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
- மனித-வனஉயிரின மோதலின் நெருக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில், கடந்த சில நாட்களாக குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் இரவிலும் பகலிலும் கூட்டம்-கூட்டமாக சாலையை கடந்து செல்லும் காட்சிகள், வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நேற்று இரவு முதலில் ஒரு யானை வந்தது. பின்னர் 2-3 யானைகள் வரிசையாக வந்து சாலையை கடந்தன. இதனை பார்த்த நாங்கள் வாகனத்தை நிறுத்தி அதிர்ச்சியுடன் பார்த்தோம்" என்கிறார் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற பயணி.
"ஒரு பக்கம் இதுஒரு அரிய காட்சி. ஆனால் இன்னொரு பக்கம், யானைகள் திடீரென சாலைமீது வரும்போது எதையும் கணிக்க முடியாது என்பதால் பயமாக உள்ளது" என்கிறார் பஸ் டிரைவர் ஒருவர்.
மேலும் காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. வனத்துறையினரும் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"யானைக் கூட்டங்கள். உணவு மற்றும் குடிநீரை தேடி இடம்பெயருவது சகஜம். பர்லியார் அருகே உள்ள காட்டுப் பகுதிகள் தற்போது பசுமையாக இருப்பதால் காட்டு யானைகள் அங்கு இடம்பெயர்ந்து வருகின்றன" என்று வனஅதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே வனவிலங்குகள் சாலைகளைக் கடப்பது அவர்களின் இயற்கை வாழ்விடங்கள் குறைந்துவிட்டதற்கான வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. யானைகளுக்கான இடைநிலைக்காடுகள் குறைந்தது, சாலைகள் விரிவாக்கம், வனப்பகுதியில் மனித நடமாட்டம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக யானைகள் தற்போது வேறுபட்ட பாதைகளை தேடத் தொடங்கி உள்ளன.
பர்லியார் பகுதியில் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள், இயற்கையின் உண்மையான அசைவைக் காட்டும் அரிய தருணமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில், இது மனித-வனஉயிரின மோதலின் நெருக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
வனவிலங்குகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், சாலைகளில் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம். காட்டு உயிர்களுக்கு அவற்றின் வலசைப்பாதை என்பது மிகவும் அவசியம் என்று ஊட்டி வனஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.






