என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி, குன்னூரில் சாரல் மழையால் கடுங்குளிர் - பகலிலும் ஒளிரும் விளக்குகளுடன் செல்லும் வாகனங்கள்
    X

    ஊட்டி, குன்னூரில் சாரல் மழையால் கடுங்குளிர் - பகலிலும் ஒளிரும் விளக்குகளுடன் செல்லும் வாகனங்கள்

    • கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
    • குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.

    அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.

    குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

    மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×