search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய 4 பேரில் ஒரு மாணவி பிணமாக மீட்பு
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய 4 பேரில் ஒரு மாணவி பிணமாக மீட்பு

    • வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர்.நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). இவர்கள் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி புதுவை கடற்கரைக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மோகனா, லேகா ஆகியோரது பள்ளி நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் நவீன் (15), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்த கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி சகோதரிகள் உள்பட 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    இன்று காலை மீண்டும் கடலில் இழுத்து செல்லப்பட்டு மாயமான 4 மாணவ-மாணவிகளையும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×