என் மலர்
நீங்கள் தேடியது "சபரிமலை"
- செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரெயில்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
- மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு 2 ஆண்டுகள் ஆகும் என்று ரெயில்வே கணக்கிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் நடக்கும் மாதாந்திர பூஜையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
சபரிமலை வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சபரிமலைக்கு மெட்ரோ ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை இந்திய ரெயில்வே தொடங்கியுள்ளது.
செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரெயில்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சபரிமலை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை 2030-ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அடுத்த 30 ஆண்டுகளில் சபரிமலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய பாதை தேவைப்படும். ஆகவே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு 2 ஆண்டுகள் ஆகும் என்று ரெயில்வே கணக்கிட்டுள்ளது. மேலும் புதிய பாதைக்கு நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டால், 3 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் செயல்பட தொடங்கும் எனவும் ரெயில்வே கருதுகிறது.
சபரிமலைக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நங்கமாலி-எரிமேலி சபரி ரெயில் திட்டம் கடந்த 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்.
- புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்பனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
- பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர்.
- ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து வந்து செல்வார்கள். அது மட்டுமின்றி மாதாந்திர பூஜை காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். அதன்படி தமிழ் மாதமான புரட்டாசி மாதம் மற்றும் மலையாள மாதமான கன்னி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது.
ஐயப்பன்கோவிலில் நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் இன்று முதல் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகங்கள் மற்றும் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. காலையில் உஷ பூஜை, உதயாஸ்தமன பூஜை நடந்தது. காலை 5.30 மணி முதல் நெய்யபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். அதேபோன்று தற்போதும் சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றே குவிந்தனர். இதனால் பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்திருந்தது.
கொரோனா காலத்திற்கு பிறகே சபரிமலையில் தற்போது வரை ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பம்பை மற்றும் நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் செயல்பட்டன.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
அது தொடர்பாக தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் சபரிமலை வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இதனால் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வழக்கம்போல் சபரிமலைக்கு வந்து செல்லலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
- சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
- கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(17-ந்தேதி) திறக்கப்படுகிறது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அது தொடர்பாக தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கோழிக்கோட்டில் ஆறு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
- இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் மத்தியக் குழு ஆய்வு
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. நிபா வைரஸ் குறித்து மத்திய குழு கேரளாவில் ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு மாநில அரசுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு ஆணையர், சுகாதார செயலாளருடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு கேரள மாதத்தின் ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும். அந்த வகையில் நாளை நடை திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- அரவணை பாயசத்தின் மாதிரிகளை சோதனை செய்ய திருவிதாங்கோடு தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
- 200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அரவணை பாயசம், அப்பம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அரிசி, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் அரவணை பாயாசத்தை சபரிமலை வரக்கூடிய அய்யப்ப பக்தர்கள் விரும்பி வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் அரவணை பாயாசத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயின் தடயங்கள் இருப்பது இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அரவணை பாயாசம் விற்பனை செய்வதை நிறுத்த திருவிதாங்கோடு தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரவணை பாயசத்தின் மாதிரிகளை சோதனை செய்ய திருவிதாங்கோடு தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது. பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து சரிபார்க்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் சபரிமலையில் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட மீதமிருந்த அரவணை பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. 8 வெவ்வேறு இடங்களில் இருந்து 16 மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டன.
அதில் அரவணை பாயாசத்தின் மாதிரிகள் உண்ணக்கூடியதாக இருப்பதாவும், திருப்திகரமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய இணை இயக்குனர் பால சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.
- ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
- அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும்
- அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.
அய்யப்ப உருவ தத்துவம்
அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசன முறையாகும்.
இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை.
இந்நிலையில் உடல் வில் போல் ஆடும் தன்மையுடையது.
குதி கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.
இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மரந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும்.
அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுரபைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.
ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த சின் முத்திரையை "அறிவடையாளம்" என்பர்.
இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல்,
பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.
மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம் பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.
அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார்.
அய்யப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும்.
- சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார்.
- நாளைமறுநாள் மலையாள வருடத்தின் முதல் நாளாகும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(16-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார்.
நாளை வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. நாளை மறுநாள்(17-தேதி) முதல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன.
நாளைமறுநாள் மலையாள வருடத்தின் முதல் நாளாகும். இதனால் அன்றைய தினம் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெறும். மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ந்தேி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது.
- ஆவணி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த பூஜைக்கான நெற்கதிர் கட்டுகள் அச்சன்கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது.
51 நெற்கதிர் கட்டுகள் பட்டு வஸ்திரம் சுற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த நெற்கதிர்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் பம்பை கணபதி கோவிலில் பூஜை செய்யப்படுகிறது.
பின்பு விரதமிருந்து வரும் 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுகளும் சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது. அதனை பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவசம்போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து நாளை காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்படுகின்றன. நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பின்பு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இதையடுத்து ஆவணி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. மறுநாள்(17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 17-ந்தேதி அன்று ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
இதையடுத்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.