search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலை நடை நாளை திறப்பு: 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு நடக்கிறது
    X

    சபரிமலை நடை நாளை திறப்பு: 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு நடக்கிறது

    • சபரிமலையில் தங்க மேற்கூரை சீரமைப்பு பணி முடிந்தது.
    • 10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கருவறைக்கு மேல் பகுதியில் தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க மேற்கூரையில் 15 இடங்களில் மழைக்காலங்களில் லேசான நீர் கசிவு காணப்பட்டது. அதனை சீரமைக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. தொடர்ந்து சீரமைப்பு பணி கடந்த 29-ந்தேதி தொடங்கியது.

    திருவாபரணம் கமிஷனர் பைஜூ, தலைமை பொறியாளர் அஜித்குமார் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணியை கண்காணித்தனர். பி.பி. அனந்தன் ஆசாரி தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உள்ளன.

    கேரளாவில் வருகிற 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். மாத பூஜை காலங்களைப் போலவே நெய் அபிஷேகம், கலச பூஜை, களப பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடக்கிறது.

    கோவிலில் 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் 10-ந்தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×