search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stalin"

    • தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை.
    • இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.

    போதைப்பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.

    தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

    குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும், அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.

    இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • மத்திய அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MOEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளேன்.

    தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

    தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.

    பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.

    இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.

    எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிவிட வேண்டும்.

    எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.
    • இரு தரப்பு பிரதிநிதிகளை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில், " இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.

    காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.
    • முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னை:

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாவி இருக்கிறது என்ற உடனேயே தமிழர்களை திருடர்கள் என்று கூறினார்கள் என்று பொய் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே....

    இன்று கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.... இன்று நம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு அணையை உங்கள் கூட்டணியைச் சார்ந்த கேரளா அரசு முழுவதுமாக களவாட நினைக்கிறது உங்களிடமிருந்து பதில் என்ன?

    முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

    இதுதான் உங்களின் தமிழ்ப்பற்றா?

    தமிழர்கள் மீதான பற்றா?

    தமிழ்நாட்டு உரிமையை பாதுகாக்கும் நிலைமையா?

    உங்கள் மவுனம் கலையுமா?

    வழக்கம்போல் கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
    • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

    இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

    அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

    கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021" வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
    • பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி சமூகநலத்துறையில் பல சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.

    ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியதால் தாயுமானவராகப் போற்றப்படுகிறார்.

    மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3.லட்சம் வீதம் ரூ.27 லட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் தொகை வழங்கினார்.

    கொரொனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.23 கோடியே 149 லட்சம் வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021" வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    விடியல் பேருந்து திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை, சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் முதல்வர், பணிபுரியும் மகளிர் விடுதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் கொள்கை, திருமண நிதி உதவித்திட்டம், திருநங்கைகள் நலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதால் முதலமைச்சரை மனமாரப் பாராட்டுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
    • நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

    காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் அடங்கிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

    இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை.
    • முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை கண்டிக்கதக்கது. இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும். மின் இணைப்புடன் ஆதார்கார்டை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    தி.மு.க.தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என சொல்லலாம். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவிக்கவேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை. பா.ம.க.விற்கு தமிழ்நாடு குறித்த பெருங்கனவு உள்ளது. எங்களுக்கு 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம். அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம்.

    பாசனதிட்டங்களை நிறைவேற்றாத ஆட்சியாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.காமராஜர் காலத்தில் அணைகள் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகள் ஒரு டி. எம். சி. கொள்ளளவுகூட இல்லை.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 700 ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும். தெலுங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 24-25 -ம் ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ 2500 கோடி செலவாகும். இது சாத்தியமானதுதான். முல்லை பெரியாறு புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. வருகிற 28-ந் தேதி சுற்றுசூழல் குழு விவாதிக்க உள்ளது கண்டிக்கதக்கது. உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

    முல்லை பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன். முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் திருவம்பலபுரம் கிராமம் தோட்டபள்ளி அருகில் நேற்று அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த சந்தனகுமாரி மற்றும் முத்துச்செல்வி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    சென்னை:

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழகத்தில் முதல் முறையாக அமைகிறது. கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன் வந்துள்ளார்கள்.

    சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோடி தமிழர் இன வெறுப்பை காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.
    • ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தனது அரசியல் தன் இலாபத்துக்காக பன்னிரண்டு கோடி தமிழ்த்தேசிய இன மக்களையும், அவர்களது வரலாற்றுத்தாயகமான தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகிற்கு நாகரீகத்தையும், பண்பாட்டையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தந்த மரபார்ந்த இனம் தமிழ்ப்பேரினமாகும். மானத்தையும், வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி, அறத்தின் வழிநின்று வாழ்கிற பெருங்கூட்டத்தினர் தமிழர்கள் நாங்கள்.

    அத்தகைய இனக்கூட்டத்தின் மீது போகிறப் போக்கில் திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும்.

    தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வருகிறபோதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒரிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதெனும் துணிவில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்குகிறாரா பிரதமர் மோடி? இவ்வளவு நாட்களாக இசுலாமிய மதவெறுப்பை உமிழ்ந்துப் பரப்புரை செய்தவர், இப்போது அத்தோடு சேர்த்து தமிழர் இன வெறுப்பையும் காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.

    ஆகவே, தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பாஜகவானது தமிழ்நாட்டில் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    ×