search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire department"

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
    • தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

    குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.

    அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.

    குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

    இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
    • தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன்.

    கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணியாற்றி வருகிறார்.

    மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

    தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    • நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
    • தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.

    இந்நிலையில், தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

    ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
    • தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    மதுரை:

    மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.

    நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

    இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.

    ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.

    இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    • சிவகாசியில் தீபாவளி பண்டிகையையொட்டி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர் நிலைகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    தாயில்பட்டி

    சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சிவகாசியில் காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத் தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.சி. எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

    சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசுகையில், பட்டாசு களை கையில் வைத்து வெடிக்க கூடாது, பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீரை ஊற்ற வேண்டும். தீக்காயத்திற்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து.

    உடலில் தீப்பற்றினால் ஓட முயற்சி செய்யக் கூடாது. கனமான போர்வை போன்ற துணிகளை போர்த்தி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் . உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். பருவமழை பெய்ய தொடங்கி உள்ள தால் நீர் நிலைகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    மழை நீரை பார்த்து குளங்கள் கண்மாய்களில் குளிக்க ஆர்வம் காட்ட கூடாது. முறையாக நீச்சல் தெரியாமல் நீரில் இறங்க கூடாது. நீர் நிலைகளில் பள்ளம் ஆபத்து இருப்பதை உணர வேண்டும். மேலும் மழை பெய்யும் போது இடி, மின்னல் ஏற்படும்போது மரதடியில் ஒதுங்க கூடாது. தரையில் அமர்ந்து குனிந்து நிலையில் உட்கார வேண்டும். செல்போனையும் உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
    • பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து கொண்டாட வேண்டும் என "விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி" என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய ரமேஸ்பாபு அதிகாரி தலைமையில் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் பட்டாசுகளை வெடிக்க தவிர்க்க வேண்டிய இடங்கள், வெடிக்கும் முறை, அதற்கான இடம், நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்தனர், பின்னர் அதற்கான விபரங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

    சென்னிமலை:

    தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னிமலை நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள், வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் சென்னிமலை அருகே இரட்டைபாலம் எல்.பி.பி. வாய்கால் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர். மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர் இதில் கிராம மக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிலையை எழுத்தர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

    • நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார்
    • சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த சின்ன பொன்னம்பூண்டி யை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார். அதை பொதுமக்களுக்கு தெரிவிக்க பொதுமக்கள் செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று ராமசாமி யின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.

    • நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
    • கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் வீரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிறகு, தீயணைப்பு பணியாளர்களால் வெள்ள அபாய பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தீப்பற்றிய இடத்தில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் காட்டு தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், அபாய வெள்ள பேரிடர் காலத்தில் எவ்வாறு தத்துரூபமாக காப்பாற்ற வேண்டும் என்று செயல்முறை விளக்கமாக பயிற்சியளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு மாவட்ட அலுவலர், திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன், திருப்பூர் மாவட்ட தீயணைப்பு பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, மதுகார்த்திக், செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார்.
    • உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.

    இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    ×