search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
    • கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது.

    நெல்லையில் கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் அதிகாலையில் பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் தொடக்கத்தில் லேசான சாரல் அடித்த நிலையில் படிப்படியாக மழை அதிகரித்தது. சுமார் 1 மணி நேரம் தச்சநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. டவுனில் சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டையில் அரை மணி நேரமாக பெய்த கனமழையினால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.

    பெரும்பாலான வாகன ஓட்டிகள் வண்ணார் பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நனையாமல் மழைக்கு ஒதுங்கி நின்றனர். காலையில் பெய்த மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் அவர்கள் பணிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு செல்லவும் தாமதம் ஏற்பட்டது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெய்த மழையில் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.

    மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 20 மில்லிமீட்டரும், நெல்லை யில் 7.40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணை பகுதியில் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதல் ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சிவகிரி பகுதிகளிலும் காலையில் இருந்து சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதி, திருச்செந்தூர் சாலை, கடற்கரை பகுதிகளில் இன்று காலை சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அதிகாலை 3 மணிக்கு சாரல் மழை தொடங்கிய நிலையில் 4 மணி அளவில் இடி-மின்னலுடன் ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் முள்ளக்காடு, பழைய காயல், ஆறுமுகநேரி, முத்தையா புரம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய மழையால் அவை தடைபட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டி னத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. 

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
    • கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்களும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருநள்ளாறு, புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்கிற விவரங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.


    அதேபோல் திருச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கடலூர், செஞ்சி, வந்தவாசி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக் கழக (டி.என்.எஸ்.டி.சி) பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், முன்பதிவு செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று பஸ் ஏறலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் இன்று கடும் குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் எங்கு சென்று பஸ் ஏறுவது என்பது தெரியாமல் திணறுகிறார்கள்.

    முன்பதிவு செய்த பயணிகளில் சுமார் 30 சதவீதம் பேர் இன்று கிளாம்பாக்கத்துக்கு செல்லாமல் கோயம்பேட்டில் பஸ் ஏறுவதற்காக வந்தனர். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்த பஸ்கள் அங்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உதவி மையங்களில் ஊழியர்கள் இல்லாததால் பஸ் ஏற வந்த பயணிகள் யாரிடம் சென்று விசாரிப்பது என்பது தெரியாமல் திணறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்த மற்ற கோட்டங்களின் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர். மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பலருக்கு கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் செயல்படுவது பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்றடைய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


    இது ஒருபுறம் இருக்க அரசு விரைவு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த பயணிகளை போனில் தொடர்பு கொண்டு பஸ் புறப்படும் இடம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் வருவதற்கு சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருந்து அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

    அதன்படி முன்பதிவு செய்த பயணிகளிடம் பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கிளாம்பாக்கத்துக்கு வந்து பஸ் ஏறுமாறு தெரிவித்தனர். அப்போது பல பயணிகள் தாங்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருப்பதாக பதில் அளித்துள்ளனர். இதனால் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு வருமாறு கூறியுள்ளனர். அந்தவகையில் ஏராளமான பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தாமதமாக வந்தனர். அப்படி தாமதமாக வந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக அதிகபட்சமாக சுமார் அரை மணி நேரம் வரை பஸ்கள் காத்திருந்தன. அதற்கு மேல் வராத முன்பதிவு செய்த பயணிகளை விட்டுவிட்டு அரசு விரைவு பஸ்கள் புறப்பட்டு சென்றன. பஸ்களை தவறவிட்ட பயணிகளுக்கு முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப் பட்டது. ஆனால் அவர்கள் அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்ல பஸ் கிடைக்காமல் தவித்தனர்.

    • சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
    • சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மணலி புதுநகர் அருகே விச்சூர் மற்றும் வெள்ளிவாயல் கிராம பகுதிகள் உள்ளன. இதை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணம் செய்வதற்காக மாநகர பஸ் வசதியில்லை.

    இதனால், இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என அனைவருமே விச்சூரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மணலி புதுநகருக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தான் மாநகர பஸ்சில் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது.

    அதேபோல், சோழவரம் செல்ல வேண்டுமென்றால் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள், பொன்னேரி நெடுஞ்சாலையில் இறங்கி, விச்சூர் அல்லது வெள்ளிவாயல் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு மாநகர பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவரத்தில் இருந்து வெள்ளிவாயல், விச்சூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்னைக்கு மாநகர பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஆனால் ஒத்திகைக்கு பிறகு இந்த வழித்தடத்தில் இதுவரை மாநகர பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    நாங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த வழித்தடத்தில் மாநகர பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது தொடர்ந்து பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றனர்.

    இதன் காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதால், எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் தற்போது 12 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமா னவர்கள் திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • கழிவு நீரேற்று நிலையத்தின் திறனையும் அதிகரிக்க வேண்டும்.

    வேளச்சேரி:

    வேளச்சேரி எல்.ஐ.சி. காலனியில் கழிவுநீரேற்று நிலையம் உள்ளது. இந்த பகுதிக்கு ஏ.ஜி.எஸ். காலனி, ராம் நகர், முருகு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர் செல்கிறது.

    இந்த கழிவு நீரேற்று நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரியில் அதிக மக்கள் தொகை இல்லாத போது அமைக்கப்பட்டது. தற்போது இந்த பகுதி பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் மற்றும் முக்கிய வணிக மையமாகவும் மக்கள்தொகை அதிகரித்தும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள கடிகார ஷோரூம் அருகே சாலையில் வெளியேறிய கழிவுநீரால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் இந்த சாலையில் அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து ஏ.ஜி.எஸ். காலனி குடியிருப்போர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, வாரத்தில் இரண்டு முறையாவது குறிப்பாக காலை நேரங்களில் 100 அடி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவு நீர் அதிக அளவு சேர்வதால் அதன் மூடி வழியாக பொங்கி வெளியே வருகிறது. தற்போது மழைநீருடன் கழிவு நீர் கலப்பதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவு நீர்செல்லும் கால்வாயில் உள்ள சிறிய குழாய்களை பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் கழிவு நீரேற்று நிலையத்தின் திறனையும் அதிகரிக்க வேண்டும். அருகில் 12 பம்பிங் நிலையங்கள் உள்ளன. ஆனால் அவை பெருகி வரும் மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை என்றார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வேளச்சேரி 100 அடி சாலையில் பிரதான கழிவுநீர்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதனை சரிசெய்து உள்ளோம். கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் - நெல்லிக்குப் பம் சாலை அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாதாள சாக்கடை உள்ளது. இங்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இத னால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் சாலை ஓர மாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளத்தில் தற்போது திடீரென்று மரக்கிளை வைக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது

    கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், தொடர் மழை பெய்து வரும் காரணத்தி னால் தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.ஆகையால் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி உடனடியாக திடீரென்று ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    • சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரையில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலை, சிவகங்கை சாலை, காவல் நிலையம் எதிர்புறம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன. நகர் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மாடுகளின் உரிமை யாளர்கள் வீடுகளில் இந்த மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மானாமதுரை நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    மானாமதுரை நகரில் சுற்றித் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அறிவிப்பை மீறி மாடுகள் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்தால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களி ளும், கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது. மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் மாடுகளை வைத்து பராமரிக்க வேண்டும். தெரு மற்றும் சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்றார்.

    • விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை
    • போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

    கோவை,

    கோவை மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் தலைமை அலுவலக டெப்போ, ஒண்டிப்புதூர், சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூருக்கு எண்ணற்ற அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாநகர அளவில் காந்திபுரம், டவுன்ஹால், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இருந்து தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் மேற்கண்ட அரசு பஸ்கள் சரியான நேரத்தில் குறித்த காலத்தில் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

    மேலும் நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த தக்காளி, கத்தரிக்காய், கீரை வகைகள் ஆகியவற்றை அரசு பஸ்கள் மூலம் உழவர் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    ஆனால் மேற்கண்ட பகுதிகளில் அரசு பஸ்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் சரிவர இயக்கப்படுவது இல்லை. எனவே விவசாயிகள் தோட்டத்தில் உள்ள விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்வது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்து உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோவை போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்து உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை கொண்டு செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு பஸ் போக்குவரத்து குறித்த நேரத்தில் வராததால் பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தற்போது கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 மாதங்களாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

    மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள், பல ஆயிரம் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை கூட தினமும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்படுகிறது.

    பொதுவாகவே லேசான மழை தூறல் ஏற்பட்டாலே நீலகிரியில் மின்தடை ஆவது சர்வ சாதாரணமான விஷயம் என மக்கள் பழகி விட்டனர். ஆனால் கடந்த இரண்டொரு மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்கள் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    • மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்‌.
    • தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி நகரில் அதிகாலை 12.30 மணியில் இருந்து திடிர் என மின்சாரம் தடைபட்டது.

    தூறல் மழையும் குளிரிலும் தவித்த மக்கள் மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

    மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் திருக்காட்டுபள்ளி நகர மக்கள் விடிய விடிய அவதிப்பட்டனர்.

    5மணி நேர மின்சார தடைக்கு பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைத்தது.

    இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரியவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பஸ்கள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன.
    • போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சிக்னலுக்கு அடுத்தபடியாக மலுமிச்சம்பட்டி சிக்னல் அமைந்து உள்ளது. இது நான்கு ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இதில் ஒரு ரோடு கேரளா, இன்னொரு ரோடு செட்டிபாளையம், 3-வது ரோடு கோவை, 4-வது ரோடு பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.

    மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியை சுற்றிலும் ஏராளமான சிறு-சிறு கிராமங்கள் உள்ளன.அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி மலுமிச்சம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    இதனால் கோவை-பொள்ளாச்சி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் செட்டிபாளையம்-மலுமிச்சம்பட்டி செல்லும் வாகனங்கள் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் எண்ணற்ற பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    அந்த கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் தங்களின் வாகனங்களை அப்படி-அப்படியே நிறுத்திவிட்டு செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசும் நிலையில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் தினமும் சிறு-சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

    மலுமிச்சம்பட்டி சிக்னலுக்கு எதிரில் புறக்காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வாகனங்களை கண்டுகொள்வதில்லை. போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

    மேலும் அங்கு ஒருசில நேரங்களில் டபுள்பார்க்கிங் போடும் வாய்ப்பு ஏற்படுவதால் வாகனத்தை எடுக்க முடியாமல் ஒருசிலர் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாகனஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

    பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பஸ்கள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன. அப்போது அவை தாறுமாறாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் ஒலி எழுப்புகின்றனர். இதனால் அந்த பகுதியில் எப்போதும் நாராசமான ஒலிகளை கேட்க முடிகிறது.

    எனவே போக்குவரத்து போலீசார் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனத்தை முறைப்படுத்தி நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் போக்குவரத்து சீராகும். பிறருக்கும் இடையூறு இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×