search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் நாளை செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • சட்டசபை தொகுதிக்கும் தலா 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர்.
    • கலெக்டர், தேர்தல் பொது பார்வையாளர்கள், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (இ.வி.எம்), கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி. பேட் ஆகியவை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர்.

    இது தவிர ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான இ.வி.எம்.கள் பாதுகாப்பு அறையில் இருந்து வரிசைப்படி சரிபார்த்து அனுப்ப ஒரு மண்டல உதவி அதிகாரி, ஒரு அலுவலக உதவியாளர் குறைந்தபட்சம் 20 பேர் இருப்பார்கள்.

    இதுதவிர ஒரு தொகுதி க்கு ஒரு டைப் செய்பவர், ஒரு கம்ப்யூட்டர் பதிவாளர், 2 அலுவலக உதவியாளர்கள், போர்டில் எழுதுபவர், மைக்கில் அறிவிப்பாளர், பிரிண்டர்களில் நகல் எடுப்பவர்கள் தனியாக பணி செய்வார்கள்.

    இந்தப் பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலையிலும் 20 சதவீதம் கூடுதல் அலுவலர் பணியாளர் உடன் இருப்பார்கள். கலெக்டர், தேர்தல் பொது பார்வை யாளர்கள், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர்.

    ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தாசி ல்தார் நிலையில் ஏ.ஆர்.ஒ. க்கள் அவர்களுடன் உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறாக ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா 80 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி த்துறை, கல்வித்துறை, மத்திய அரசு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் நிறைவு செய்து தேர்தல் ஆணைய ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன்.
    • பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர் என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.

    இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரை நேற்று

    முகாம் அலுவலகத்தில்

    சந்தித்தேன்

    குறித்த நேரம் காலை 10.15

    நான் அடைந்த நேரம் 10.14

    முதலமைச்சர்

    வந்து வரவேற்ற நேரம் 10.15

    நேர மேலாண்மையில்

    சர்வதேச ஒழுங்கைக்

    கடைப்பிடிக்கிறார்

    40 ஆண்டுகளாய்ப்

    பார்த்தும் பழகியும் வருகிறேன்

    பருவம் கூடக் கூடப்

    பக்குவம் கூடிவருகிறது

    வயது கூடக் கூட

    மரம்

    வைரம் பாய்வது மாதிரி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காகவும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    சென்னை:

    பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் என தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அவ்வபோது சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
    • 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் அவ்வபோது சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன
    • இந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

    இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.

    காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது
    • அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

    • மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்
    • ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • வெள்ள நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 38,000 கோடி
    • உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வருபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி.

    இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

    நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி.

    ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

    தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது.

    எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.

    தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க.

    அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது
    • வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    • வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.
    • பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் மற்றும் பெண் தோழி இருவரும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அந்த பெண் தோழியை சரமாரியாக தாக்கினார். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

    இதை அந்த வழியாக வந்த வக்கீல் ஒரு தனது செல்போனில் வீடியோவாக பதிவேற்றினார். இதை கண்ட அந்த வாலிபர் சற்று சுதாரித்து கொண்டு எதுவும் நடைபெறாததது போல், மயங்கிய அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடகமாடினார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், வழக்கறிஞரையும் உதவிக்கு அழைப்பது போலும் நாடகமாடினார்.

    இதை செல்போனில் வீடியோ எடுத்த வழக்கறிஞர் மற்றும் அந்த வாலிபர் இருவரும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவத்தையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வாலிபரின் வண்டி எண்ணை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கும், பெண்ணும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், வாலிபர் ஏன் அந்த பெண்ணை தாக்கினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மீது ஏதேனும் தவறு இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள்.
    • அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும்.

    பொன்னேரி:

    பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். பனை மரத்தை ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைப்பதுண்டு.

    நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்கவும் பனை மரம் உதவுகிறது. இது வளர்ச்சி அடைய 15 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஆகும். பனைமரம் முழுமையும் பயனுள்ளதாகும். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து தென் மாவட்டங்களில் மழை இல்லாமல் காய்ந்து பட்டு போய் காணப்படுகின்றன.

    செங்கல் சூளை மற்றும் எரிப்பதற்கு பனை மரம் வெட்டப்பட்டு அழிந்து வருவதை கண்டறித்து தமிழக அரசு பனை மரத்தினை பாதுகாக்க நலவாரியம் மற்றும் கூட்டுறவு துறை அமைத்து, தமிழகம் முழுவதும் பனை விதைகள் விதைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் படுக்கபத்து கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் தாத்தா காலத்தில் இருந்தே பனைத்தொழில் செய்து வந்த நிலையில் அப்பகுதியில் மழை இல்லாததால் நிறைய பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் தொழில் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பழைய எருமை வெட்டி பாளையத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 480-க்கும் மேற்பட்ட பனை மரங்களுடன் இருந்த பனைமர தோப்பினை வாங்கி இழந்துபோன பனை மர தொழிலை மீண்டும் தொடங்கி உள்ளனர்.

    அரசு அனுமதியுடன் பனை மரத்தில் பதநீர் இறக்கும் தொழிலை செய்ய முடிவெடுத்த நிலையில் ராஜபாளையத்தில் இருந்து பனையேறும் தொழிலாளர்கள் 4 பேரை வரவழைத்து ஒரு நபருக்கு 25 பனைமரம் வீதம் 4 பேர் மூன்று வேளை பனை மரத்தில் ஏறி தினமும் காலை 80 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை பதநீர் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

    மீதமுள்ள பதநீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி விற்பனையும் செங்குன்றம், பொன்னேரி, தாம்பரம், சோழவரம், அம்பத்தூர், கொளத்தூர், மணலி, மீஞ்சூர் உள்ளிட்ட பல பகுதியில் பதநீர் வாங்க ஒரு நாளைக்கு முன்பாக ஆர்டர் கொடுத்து தினமும் பதநீர் வாங்கி செல்கின்றனர்.

    சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அதிகமான பேர் குடும்பமாக வாகனங்களில் வந்து நுங்குடன் சேர்த்து பதநீர் அருந்தி செல்கின்றனர்.

    இதுகுறித்து அகிலன் கூறியதாவது, பனைமரம் மிகச் சிறந்த மரமாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக பயன் தரக்கூடியது எனது தாத்தா காலத்தில் இருந்தே பனை தொழில் செய்து வருகிறேன்.

    காலப்போக்கில் பனையேறுவதற்கு ஆட்கள் இல்லாததால் குறைவாக காணப்பட்டதால் பனைமர தொழிலை பாதுகாக்கவும் இளம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லவும் ஊக்குவிக்கவும், கடந்த 2011 ல் தோட்டத்தினை வாங்கி ஆடு, மாடு, கோழி மற்றும் தோட்டம் அமைத்து கிராம சூழ்நிலை போல் காணப்படும் தோட்டத்தில் ஊரில் இருந்து 4 தொழிலாளர்களை வரவழைத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறேன்.

    பதநீர் பற்றி தெரியாதவர்களுக்கு குடிக்க இலவசமாக கொடுத்து அதனுடைய பயன்களை விளக்கி சொல்லி வருகிறேன். கடந்த 2 வருடமாக அரசு அனுமதியுடன் தொழில் நடத்தி வருகிறேன்.

    பனை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களும் பயன்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் மே, ஜூன் மாதம் வரை பதநீர் கிடைக்கும். இதில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் காணப்படுவதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். பதநீர் சாப்பிட்டவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படும். உடலை குளிர்ச்சி படுத்தக்கூடியது. ரத்த சோகையை போக்கும் எனவும் பேன் தொல்லை இருப்பவர்கள் தலையில் பதநீர் ஊற்றி குளித்தால் முழுவதும் நீங்கி விடுவதாகவும் வயிறு எரிச்சல் அல்சர் நீங்குவதாகவும் நுங்கு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு தணியும் உடல் குளிர்ச்சி தரும். அதிகமான சத்துக்கள் நிறைந்தது சுகர் இருப்பவர்கள் நுங்கு தோவினை சேர்த்து சாப்பிடும்போது சுகர் குறைகிறது.

    கோடை காலத்தில் உடலில் வேர்க்குரு இருப்பவர்கள் தேய்த்து குளித்தால் வேர்க்குரு நீங்குகிறது. கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். சுகர் இருப்பவர்கள் சாப்பிட்டால் சுகர் குறையும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் இரண்டே நாளில் குணமாகும் நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் ஜிங்க் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கோடை வெயிலில் தாக்கும் அதிகமான நோயான அம்மை நோய் வருவதை எளிதில் தடுக்கக் கூடியது சாலை ஓரங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளன. இவை ஒரிஜினல் பதநீர் தானா என சரி பார்த்து குடிக்க வேண்டும்.

    கருப்பட்டி போலியான கருப்பட்டி சாலை ஓரங்களில் விற்கப்படுவதாயிலும் போலிகளை கண்டறிந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்பிடும் பொருளில் சாலை ஓரங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வதால் வயிற்றுப்போக்கு அதிக சுகர் ஒவ்வாமை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் கடற்கரை ஓரங்களில் நடுவதற்கு கொடுத்தேன்.

    இதுகுறித்து பனைமரம் ஏறும் தொழிலாளிகள் பன்னீர், சண்முகம் கூறியதாவது:-

    அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும். தொழில் செய்ய தொழிலாளர்களுக்கு லோன் வசதி மற்றும் பென்ஷன் வழங்க வேண்டும். பனங்கருப்பட்டியை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும். கலப்படம் செய்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் கும்பல் வந்து விட்டதால் கருப்பட்டியை பரிசோதனை செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×