search icon
என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
    • கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி நாராயணன் (வயது 68)-ராஜேஸ்வரி(67). இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

    இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்தனர். பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தார். அவரை ராஜேஸ்வரி கவனித்து வந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாராயணன் பரிதாபமாக இறந்தார். இந்த துக்கம் தாளாமல் கதறி அழுத ராஜேஸ்வரியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குமாரபாளையத்தில் கண் கலங்க வைத்துள்ளது. நீயின்றி நானில்லை என சாவிலும் இணைபிரியாத தம்பதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.

    வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும், இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் இறந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
    • பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.

    ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.

    அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Untitled-3: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே விருப்பாச்சி நகரை சேர்ந்த சதீஷ் என்கிற கந்தசாமி (30), ஜெக்கேரியை சேர்ந்த முருகேசன் (46), ராசிபுரம் கத்தநாச்சம்பட்டியை சேர்ந்த தினேஷ் (29), அண்ணாநகர் காலனியை சேர்ந்த கார்த்தி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஓசூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 50 கிலோ எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 83 வழக்குகள் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 124 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக 19 குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 666 முடக்கப்பட்டு உள்ளது. அவர்களது சொத்துக்கள் முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • மாதேஸ்வரன் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.
    • கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரியபள்ளம் பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 18).

    இவர் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.

    நேற்று இரவு மாதேஸ்வரன் தனது உறவினரின் டிராக்டரை எடுத்துக்கொண்டு ஓட்டி பழகுவதற்காக அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள வயலில் டிராக்டரை ஓட்டி பழகும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    இதில் மாதேஸ்வரன் மேலே டிராக்டர் விழுந்ததால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது.
    • முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இம்மாதம் 4-ந் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. 5-ந் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.85 ஆனது. 6-ந் தேதி மீண்டும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.90 ஆனது. 7-ந் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 5 ஆனது. 8-ந் தேதி மீண்டும் 5 உயர்த்தப்பட்டு ரூ. 5.10 ஆனது.

    இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை-570, பர்வாலா-550, பெங்களூரு-565, டெல்லி-577, ஐதராபாத்-540, மும்பை-600, மைசூர்-552, விஜயவாடா-550, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-550.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 76 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இந்த மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் எந்திரம் வாங்குவதற்காக சுப்பிரமணி பெங்களூரு ஜெய் நகரைச் சேர்ந்த அசர் பாட்சா (32) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக தவணை முறையில் ரூ.30 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அசர் பாட்சா சி.டி.ஸ்கேன் எந்திரத்தை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி உத்தரவின்பேரில் வேலூர் போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்த அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (30) கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு இலக்கியா (9), அதன்யாஸ்ரீ (4 1/2), சபரீசன் (1 1/2) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை பரமத்திவேலூர் தாலுகா ஜமீன் இளம்பள்ளி அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வேலைக்கு வந்த வேலுசாமி தனது மனைவி வருகைக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். முனியப்பம்பாளையத்தில் இருந்து தனது குழந்தைகளுடன் கள்ளுக்கடை மேடு பஸ் நிறுத்தத்தில் வந்து சசிகலா இறங்கியுள்ளார்.

    அப்போது குழந்தை அதன்யாஸ்ரீ எதிர் திசையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது தந்தையை பார்த்ததும் ஜேடர்பாளையம்- சோழசிராமணி சாலையை கடக்க வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் வாகனம் எதிர்பாராத விதமாக குழந்தை அதன்யாஸ்ரீ மீது மோதியது.

    இதில் குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இம்மாதம் 4-ந்தேதி 5 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆனது. 5-ந்தேதி மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.4.85 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் விலை மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிர்தம், தேன், விபூதி , கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம்

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் கோவில், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

    அபிஷேகம்

    பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ர மணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜாசாமி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவில் பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
    • ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது.

     பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் வட்டாரத்தில் அண்ணா நகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, சோழ சிராமணி ஜேடர்பா ளையம், கோப்பணம்பா ளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கும் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்றைய ஏலத்தில் வெல்லம் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

    நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு ெதாடங்கி இரவு 8 மணி வரை, சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×