search icon
என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.
    • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    நேற்று மாலை வரை நடந்த சோதனையில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் உண்ணாமலை கடையில் ரூ.1.50 லட்சமும், கொல்லங்கோடு பகுதியில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் ரூ.15 லட்சத்தில் 96 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டி குளம் பகுதியில் பறக்கும் படையினர் தாசில்தார் ராஜாசிங் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் பேக் ஒன்றில் ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்தார். அந்த பணம் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. மேலும் உரிய ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.62,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் ரூ.50,800 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை மாவட்டம் முழுவதும் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 71 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படையினர் மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

    • வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    பரமத்திவேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை லோடு ஏற்றிச் செல்ல வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் கேரளா எர்ணாகுளம் பாரிஸ் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் (27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் வைத்திருந்தார். இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை அதிகாரிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதுபோல் திருச்செங்கோடு- மோர்பாளையம் சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஆர்.புதுப்பட்டியையொட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் விழா நடைபெற்றது. கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக 45 ஆடுகள், 60 பன்றிகள், 25 சேவல்கள், 2 ஆயிரம் கிலோ பச்சரிசியை காணிக்கையாக வழங்கினர்.

    இந்த விழாவில் ஆட்டு இறைச்சி 500 கிலோ, கோழி இறைச்சி 75 கிலோ, பன்றி இறைச்சி 1300 கிலோ என மொத்தம் 1875 கிலோ இறைச்சியை கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு சமைத்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு விருந்து வழங்கினர். இந்த விருந்தில் புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து அசைவ உணவு சாப்பிட்டனர்.

    • வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
    • ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஆட்டு சந்தைக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.

    இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டுக்குட்டியானது 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. இன்று ஆட்டு சந்தையில் 1½ கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் மற்றும் ஜேடர்பாளையத்தில் வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் தலைமையில் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், பணியாளர்களின் சுத்தம், சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய்யப்பட்டது. ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட வெல்லம், நாட்டுசர்க்கரை மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் கூறுகையில், பிளாஸ்டிக் மட்டும் துணிக்கழிவுகள் போன்றவற்றை ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது. மேலும் வெல்லம் தயாரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆய்வு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

    • 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார்.
    • சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி சிறுமி கீழே விழந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர்.

    அப்போது சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை செய்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இரவு பள்ளிப்பாளையம் வந்து சிறுமியிடம் தீ காயம் எப்படி ஏற்பட்டது? யாராவது சூடு வைத்தார்களா? எனவும், அவரது பெற்றோரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கு ஏற்றுமதிக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.106 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

    • ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரிவில் இருந்து கொடைக்கானலுக்கு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 24 பயணிகள், 2 டிரைவர்கள், 1 கிளீனர் என மொத்தம் 27 பேர் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த பஸ் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே வந்த போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.

    இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்பக்கம் உள்ள சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் ஆம்னி பஸ்சின் கண்ணாடியை உடைத்து உள்ளே இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் விபத்து குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் பரமத்தி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இந்த விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஆரியசாகர் (25), சுஷ்மா (25), சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 21 பேர் மீட்கப்பட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார் கிரேன் எந்திரம் மூலம் ஆம்னி பஸ்சை ஓரமாக நகர்த்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன.
    • முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1970-ம் ஆண்டில் நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன. பல நேரங்களில் முட்டை விலை உயர்வும், சரிவும் தொடர்ந்து வந்தன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 24-ந் தேதி கோழிப்பண்ணை வரலாற்றில் முதன் முறையாக ஓர் முட்டை விலை ரூ.5.75 ஆனது.

    நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், ரூ. 5.75 ஆக இருந்த முட்டை விலை, மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்கு அதிக அளவில் முட்டை தேவை ஏற்பட்டுள்ளதாலும், தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதாலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாக முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 580 காசுகளாக இருந்தாலும் சேலத்தில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் 50 ரூபாயை கொடுத்து 10 முட்டை வாங்கியவர்கள் 7 முட்டைகளை மட்டுமே வாங்கி செல்கிறார்கள். மேலும் முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள உணவு பொருட்களில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது. முட்டை விலை தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ஆம்லெட் முட்டை தோசை, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி உள்பட பல உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆம்லெட் 15 ருபாய்க்கு விற்று வந்த நிலையில் சில கடைகளில் ஆம்லெட் விலை தற்போது 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல முட்டையால் தயாரிக்கப்படும் மற்ற உணவு பொருட்களின் விலையும் உயரும் நிலை உள்ளதால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) சென்னை 640, பர்வாலா 609, பெங்களூர் 620, டெல்லி 652, ஐதராபாத் 599, மும்பை 659, மைசூர் 625, விஜயவாடா 610, ஹொஸ்பேட் 590, கொல்கத்தா 675.

    இதற்கிடையே பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது . இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது . அதன்படி 98 ரூபாயாக இருந்த கறிக்கோழி 101 ஆக உயர்ந்தது. நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி பண்ணயைாளர்கள் கூட்டத்தில் முட்டை கோழி விலையை கிலோவுக் கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 88 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 80 ரூபாயாக குறைந்தது.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரிப்பு.
    • வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.

    புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை அதிகபட்சமாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு மட்டுமே முட்டை கொள்முதல் செய்யப்பட்டது.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
    • கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி நாராயணன் (வயது 68)-ராஜேஸ்வரி(67). இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

    இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்தனர். பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தார். அவரை ராஜேஸ்வரி கவனித்து வந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாராயணன் பரிதாபமாக இறந்தார். இந்த துக்கம் தாளாமல் கதறி அழுத ராஜேஸ்வரியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குமாரபாளையத்தில் கண் கலங்க வைத்துள்ளது. நீயின்றி நானில்லை என சாவிலும் இணைபிரியாத தம்பதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.

    வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும், இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் இறந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
    • பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.

    ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.

    அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×