search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பறக்கும் படையினர் சோதனை: குமரி மாவட்டத்தில் இன்று ரூ.4,12,900 பறிமுதல்
    X

    பறக்கும் படையினர் சோதனை: குமரி மாவட்டத்தில் இன்று ரூ.4,12,900 பறிமுதல்

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.
    • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    நேற்று மாலை வரை நடந்த சோதனையில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் உண்ணாமலை கடையில் ரூ.1.50 லட்சமும், கொல்லங்கோடு பகுதியில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் ரூ.15 லட்சத்தில் 96 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டி குளம் பகுதியில் பறக்கும் படையினர் தாசில்தார் ராஜாசிங் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் பேக் ஒன்றில் ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்தார். அந்த பணம் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. மேலும் உரிய ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.62,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் ரூ.50,800 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை மாவட்டம் முழுவதும் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 71 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படையினர் மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

    Next Story
    ×