என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியில் போலீசார் நேரில் சென்று விசாரனை செய்த காட்சி.
சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை போலீசார் நேரில் விசாரணை
- 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார்.
- சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி சிறுமி கீழே விழந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர்.
அப்போது சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை செய்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இரவு பள்ளிப்பாளையம் வந்து சிறுமியிடம் தீ காயம் எப்படி ஏற்பட்டது? யாராவது சூடு வைத்தார்களா? எனவும், அவரது பெற்றோரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.






