search icon
என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • முட்டை லாரியை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
    • உரிய ஆவணங்கள் இன்றி கொன்டு சென்ற ரூ.66 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் செல்வதற்காக வந்த முட்டை லாரியை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் முட்டை லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் நாமக்கல் திருமலைப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி முட்டைகளை விற்றுவிட்டு கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 160-யை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் கேரளாவில் முட்டைகளை விற்று விட்டு நாமக்கல்லுக்கு திரும்பி வந்த லாரியை சோதனை செய்ததில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல் திருமலைபட்டியை சேர்ந்த சின்னராசு என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 670 யை பறிமுதல் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த முட்டைகளை கேரளாவில் விற்றுவிட்டு வந்த லாரி டிரைவர் ராசிபுரத்தை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் உரியஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 260-யை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இன்று காலை சுமார் 9 மணியளவில் கேரளாவுக்கு முட்டைகளை ஏற்றி சென்று விற்பனை செய்துவிட்டு வந்த லாரி டிரைவர் ராசிபுரத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து வைத்திருந்த ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கேரளாவில் இருந்து முட்டைகளை விற்பனை செய்து விட்டு நாமக்கல் செல்வதற்காக வந்த முட்டை லாரியை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    இதில் முட்டை லாரியை ஓட்டி வந்த டிரைவர் சதீஷ்குமாரிடம் (32) இருந்து உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 850-யை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்த ரூ.25 லட்சத்து 87 ஆயிரத்து 940-யை பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் சேந்தமங்கலம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொன்டு சென்ற ரூ.66 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    • உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேப்போல் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை வெளியில் நிறுத்தக்கூடாது தங்களுக்கு வியாபாரம் செய்ய சிரமமாக இருப்பதாக கூறி வெளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் உழவர் சந்தை விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சந்தைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும், வெளியில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    மல்லூர் பகுதியில் சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
    • பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள போலீஸ் நிலைய சோதனை சாவடி அருகே நேற்று இரவு பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி வந்த முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கேரளாவில் முட்டைகளை விற்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாய் லாரியில் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என லாரி டிரைவர் திண்டமங்கலம் அருகே உள்ள பெரியகவுண்டமா பாளையத்தை சேர்ந்த நாகராஜனிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து அந்த பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • தேர்தல் பறக்கும் படையினர் சதீஷ் மறைத்து வைத்திருந்த ரூ5 லட்சத்து 40 ஆயிரத்து 800யை பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வாகன சோதனை நடத்திவருகின்றனர். மேலும் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல்உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள போலீஸ் சோதனைச் சாவடி பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி வேலுசாமி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது நாமக்கல் அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு வையப்பமலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (26) என்பவர் கேரளப் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வந்தார்.

    அப்போது பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேர்தல் பறக்கும்படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் சதீஷ் கேரளாவில் முட்டைகளை விற்று கொண்டு வந்த ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 800யை லாரிக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சதீஷ் மறைத்து வைத்திருந்த ரூ5 லட்சத்து 40 ஆயிரத்து 800யை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் இன்று அதிகாலை பரமத்தி அருகே ஓவியம் பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததை அடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர் .பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் பரமத்தி வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 6 லட்சத்து 49 ஆயிரத்து 800 யை ஒப்படைத்தனர்.

    இதே போல் நாமகிரிப்பேட்டை பஸ் நிலையத்தில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.92ஆயிரத்து 800-யை பறிமுதல் செய்தனர். மேலும் புதன் சந்தை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 88 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம் ரூ. 8 லட்சத்து 31 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.
    • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    நேற்று மாலை வரை நடந்த சோதனையில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் உண்ணாமலை கடையில் ரூ.1.50 லட்சமும், கொல்லங்கோடு பகுதியில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் ரூ.15 லட்சத்தில் 96 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டி குளம் பகுதியில் பறக்கும் படையினர் தாசில்தார் ராஜாசிங் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் பேக் ஒன்றில் ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்தார். அந்த பணம் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. மேலும் உரிய ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.62,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் ரூ.50,800 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை மாவட்டம் முழுவதும் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 71 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படையினர் மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

    • வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    பரமத்திவேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை லோடு ஏற்றிச் செல்ல வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் கேரளா எர்ணாகுளம் பாரிஸ் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் (27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் வைத்திருந்தார். இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை அதிகாரிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதுபோல் திருச்செங்கோடு- மோர்பாளையம் சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஆர்.புதுப்பட்டியையொட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் விழா நடைபெற்றது. கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக 45 ஆடுகள், 60 பன்றிகள், 25 சேவல்கள், 2 ஆயிரம் கிலோ பச்சரிசியை காணிக்கையாக வழங்கினர்.

    இந்த விழாவில் ஆட்டு இறைச்சி 500 கிலோ, கோழி இறைச்சி 75 கிலோ, பன்றி இறைச்சி 1300 கிலோ என மொத்தம் 1875 கிலோ இறைச்சியை கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு சமைத்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு விருந்து வழங்கினர். இந்த விருந்தில் புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து அசைவ உணவு சாப்பிட்டனர்.

    • வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
    • ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஆட்டு சந்தைக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.

    இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டுக்குட்டியானது 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. இன்று ஆட்டு சந்தையில் 1½ கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் மற்றும் ஜேடர்பாளையத்தில் வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் தலைமையில் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், பணியாளர்களின் சுத்தம், சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய்யப்பட்டது. ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட வெல்லம், நாட்டுசர்க்கரை மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் கூறுகையில், பிளாஸ்டிக் மட்டும் துணிக்கழிவுகள் போன்றவற்றை ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது. மேலும் வெல்லம் தயாரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆய்வு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

    • 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார்.
    • சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் 7 வயது சிறுமி நடக்க முடியாத நிலையில் மிகவும் சோர்வுடன் அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி சிறுமி கீழே விழந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர்.

    அப்போது சிறுமிக்கு கால், கை உள்ளிட்ட பல இடங்களில் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை செய்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இரவு பள்ளிப்பாளையம் வந்து சிறுமியிடம் தீ காயம் எப்படி ஏற்பட்டது? யாராவது சூடு வைத்தார்களா? எனவும், அவரது பெற்றோரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

    ×