search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

    அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

    அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    • கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர்.
    • தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 97 குடும்பத்தினருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி தங்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றியும், கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கோடாங்கிபட்டியும் இணைந்துள்ளது.

    • மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
    • நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர்.

    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது தேனி மாவட்டம். தற்போது மீண்டும் அவரது ஆசிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் இங்கு போட்டியிடுகிறார். தமிழகத்தில் போதை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தி.மு.க.வினரே இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வருவதுதான் கொடுமை.

    மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதனை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அதனை அடியோடு நிறுத்திவிட்டனர். தாலிக்கு தங்கம் வழங்காததால் பல பெண்களின் திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது 1 பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தால் அந்த தங்கம் பெண்களுக்கு கிடைத்திருக்கும. மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்குவதாக தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பெண்களை தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என அவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர். தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பதிவு கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்திவிட்டனர். விலைவாசி கடுமையாக உயர்ந்த பிறகு ரூ.1000 கொடுத்து என்ன பயன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி விளம்பர பலகையும் வைத்தனர்.
    • மீண்டும் ஒரு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள கொட்டக்குடி மலைகிராமத்தில் அதிக அளவு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் புகார் வைத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை அந்த இடம் எங்கு உள்ளது என தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து வட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள மலை கிராமம் தேர்தல் புறக்கணிப்பு செய்யபோவதாக வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி விளம்பர பலகையும் வைத்தனர். தற்போது மீண்டும் ஒரு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
    • ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    நாளை (4-ந்தேதி) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். அங்கு போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்கிறார். அப்போது அவர் ரோடுஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.

    மாலை 6.45 மணிக்கு மதுரை திரும்பும் அவர் பழங்காநத்தம் பகுதி சந்திப்பில் நடைபெற உள்ள பிரமாண்ட பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். வெற்றி வியூகம் குறித்து பல்வேறு அறிவுரைகளை அவர் நிர்வாகிகளுக்கு வழங்குகிறார். பின்னர் இரவு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

    மறுநாள் (5-ந்தேதி) காலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்யும் அமித்ஷா, பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தென்காசி சென்று கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதையடுத்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார். அதன்பின் மதுரை திரும்பும் அவர் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    பிரதமர் மோடியின் 3 முறை தமிழக வருகையை அடுத்து அமித்ஷாவின் வருகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்தார்.
    • மதுரை பழங்காநத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.

    தேனி:

    தமிழக பாராளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். இதே போல அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்தார். மேலும் கோவையில் ரோடு ஷோவிலும் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

    மீண்டும் வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அமித்ஷா பின்னர் அங்கிருந்து தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். இதற்காக கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து பிற்பகல் 4 மணிக்கு பெரியகுளம் சாலையில் காரில் சென்று தேனி-பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கி திடலில் இருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பொதுமக்களை நேரில் சந்தித்து தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் அமித்ஷா பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.

    மதுரை பழங்காநத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் தேனி வருகையை முன்னிட்டு வடப்புதுப்பட்டி, பங்களா மேடு, தேனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேனியில் பிரசாரம் மேற்கொள்ள வருகை தருவது கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.
    • வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி:

    தேனி மாவட்டம், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மீன்பிடி ஏலம் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சக்கரைபட்டி கிராம பகுதியில் உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி நகர பொதுச்செயலாளர் பொன்மணி தலைமையில், மீனவர் பழனியாண்டி மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வைகை அணையில் மீன் பிடி ஏலத்தை ரத்து செய்ய கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி, நீரில் நின்று கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மீன் பிடி நிலத்தை ரத்து செய்யாவிட்டால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் தாலுகா, தென்கரை வருவாய் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, வைகை அணை நீரில் இறங்கி போராட்டம் நடத்தி வருபவரிடம் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தற்போது தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவம் வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.
    • கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றி வருகிறது. குறிப்பாக குரங்கணி, மரக்காமலை, ஏணிப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் பற்றி எரிந்த காட்டுத்தீயால் பல 100 ஏக்கர் சுற்றளவில் அரிய வகை மரம், செடி, கொடிகள், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகியவை அழியும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரங்கணி கொம்பு தூக்கி மலைப்பகுதியில் வனத்துறை அருகே உள்ள தனியார் தோட்டப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்து பிச்சாங்கரை புலம் பகுதி வரை பரவியது.

    காட்டுத்தீயை அணைக்க சென்ற வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தபொழுது அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் போடி புதூரில் வசித்து வரும் கண்ணன் (வயது 38) என்பவர் அப்பகுதியில் குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.

    ஏற்கனவே கடுமையான வெயில் காரணமாக காய்ந்து போன மரம், செடி, கொடிகள் எளிதில் தீ பற்றி வனப்பகுதியில் காட்டு தீ பற்றி உள்ளது.

    கண்ணனிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் தீ வைத்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் தற்போது தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் டாப் ஸ்டேஷன், உருவாக்குடி, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பெட்டிகள், வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

    இந்த சூழலில் ஆங்காங்கே சமூக விரோதிகளின் செயல்பாடுகள் காரணமாக காட்டுத்தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • தேர்தல் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு, புது பஸ்நிலையத்தில் நவீன மனிதர்கள் அமைப்பை சேர்ந்த வாலிபர்கள் ஆண்டவர், ஜெயராஜ், உதயசூரியன் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி போதும் மோடி, பை பை மோடி என்று பதாகைகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் உதயசூரியன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக கோசம் எழுப்பிய வாலிபர்கள் அதற்கு முன்பே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்ட வாலிபர்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
    • ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான்.

    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

    நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

    • கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
    • போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கர்ணன் (வயது70). இவர் கே.கே.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும் நிலக்கிழாராகவும் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கர்ணன் வீடு மற்றும் கம்பத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்த நிலையில் இன்று காலை வரை நீடித்தது. பின்னர் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இதுபோன்று நிதி நிறுவனங்களில் அதிக அளவு பணம் பெற்று பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து போடிக்கு வந்த தனியார் வாடகை வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருந்த ஒரு சூட்கேசில் ரூ.20 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செவ்வந்தி வீரன் (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

    இவர்கள் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கி அதனை மாத தவணையாக கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த வேதனையடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த தனது கணவர் மற்றும் மகனிடம் இது குறித்து அவர் கூறி கதறி அழுதார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானமாக பேசியதால் இனிமேல் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து 3 பேரும் விஷ மருந்தை குடித்தனர்.

    இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ×