search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா நாளை மதுரை வருகை
    X

    2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா நாளை மதுரை வருகை

    • பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
    • ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    நாளை (4-ந்தேதி) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். அங்கு போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்கிறார். அப்போது அவர் ரோடுஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.

    மாலை 6.45 மணிக்கு மதுரை திரும்பும் அவர் பழங்காநத்தம் பகுதி சந்திப்பில் நடைபெற உள்ள பிரமாண்ட பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். வெற்றி வியூகம் குறித்து பல்வேறு அறிவுரைகளை அவர் நிர்வாகிகளுக்கு வழங்குகிறார். பின்னர் இரவு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

    மறுநாள் (5-ந்தேதி) காலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்யும் அமித்ஷா, பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தென்காசி சென்று கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதையடுத்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார். அதன்பின் மதுரை திரும்பும் அவர் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    பிரதமர் மோடியின் 3 முறை தமிழக வருகையை அடுத்து அமித்ஷாவின் வருகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×