search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டண உயர்வு"

    • திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டிங் அசோசியேஷன் சங்கத்தின் 18-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூர் இடுவம்பாளையம் டெக்பா கலையரங்கத்தில் நடந்தது.

    இதில் புதிய மிஷின்கள் வாங்க அரசு மானியம் பெறுவது குறித்த விளக்க உரையை (எப்.சி.ஏ) (எல்.எல்.பி.) அரசப்பன், மற்றும் வாரா கடன் பற்றிய விழிப்புணர்வை வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். தீர்மானத்தில், பிரின்டிங் தொழில் என்பது மதிப்பு கூட்டில் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகும். ஆகவே தமிழக அரசு தாங்கள் ஏற்றிருக்கும் மின் கட்டண உயர்வை விலக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து பிரிண்டிங் நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு அவர்களின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டும். திருப்பூரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பிரிண்டிங் சேவை செய்திட வேண்டும். திருப்பூர் நகரின் வளர்ச்சிக்காக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் டெக்பா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.  கூட்டத்தில் தமிழ்நாடு அளவிலான டைஸ் மற்றும் கெமிக்கல் வியாபாரிகளின் மாநாட்டை திருப்பூரில் நடத்துவது, டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருப்பூரின் வெளியே குடோன் அமைப்பது. நீண்ட நாள் நிலுவை தொகையை விரைவில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் அதிக நாள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல பொதுக்குழுக்கூட்டம் திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வால், கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் உயரும். ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்வு போன்றவையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். வியாபாரிகள் 1 வாரம் முதல் அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் பொருட்களை வாங்கி ரொக்கப்பரிவர்த்தனை செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது.
    • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வில் சலுகை கேட்டு சென்னையில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நூல் விலை உயர்வு, உற்பத்தி செய்த காடா ஜவுளிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால் விசைத்தறி தொழில் முற்றிலும் அழிந்துவிடும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    எங்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி நல்ல பதில் கூறுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் விசைத்தறி தொழிலுக்கு சலுகை அளித்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பகண்டைகூட்டுரோட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு்ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் பிரபு, அழகுவேலுபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற ப்படவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க.அரசு ரத்து செய்துள்ளது.

    மின்கட்டணத்தை குறைப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு தற்போது மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை மின் கட்டணம் உயரும். இதுதவிர விலைவாசியும், பஸ் கட்டணமும் உயரபோகிறது. ஆகவே உடனடியாக மக்களை வஞ்சிக்கும் மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு வாபஸ் பெற வேண்டும் என மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினர். முன்னதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, துரைராஜ், தேவேந்திரன், நகர செயலாளர் பாபு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

      நாகர்கோவில்:

      தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் வலியுறுத்தியும் அனுமதி இன்றி டாஸ்மார்க் மதுபான பார் நடத்துவதை கண்டித்தும் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

      அமைப்புச் செயலாளர் பச்சைமால். மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அனைத்துலக எம்ஜி.ஆர் மன்றம் கிருஷ்ண தாஸ், இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜ் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பரமேஸ்வரன், நாகர்கோவில் மாநகராட்சி பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின், விசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

      அ.தி.மு.க ஆட்சியில் தான் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இலவச லேப்டாப் போன்ற எண்ணற்ற திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு உன்னதத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

      ஏழை எளிய மக்களை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது.மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண 2024-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நல்லாட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      ஆர்ப்பாட்டத்தில் அவை தலைவர் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம்,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், அணி செயலாளர்கள் ஜெயசீலன்,ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன் சுந்தரநாத்,ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோஜ்,தோவாளையூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், சந்துரு, வடிவை மாதவன், ரெயிலடி மாதவன், கோட்டார் கிருஷ்ணன், வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், முன்னாள் குளச்சல் தொகுதி செயலாளரும் குளச்சல் நகராட்சி கவுன்சிலருமான ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரவீந்திரவர்சன், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மண்எண்ணை விளக்குகளுடன் வந்திருந்தனர். அவர்கள் அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

      • ராமநாதபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
      • கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      ராமநாதபுரம்

      அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட அ. தி. மு. க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் மண்டபம் ஒன்றியம் (மேற்கு) செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் பாரதி நகர் பஸ் நிலையம் முன்பாக தி.மு.க.அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

      மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ முத்தையா, முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட அதிமுக இணை செயலாளர் கவிதா சசிக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர்கள் ஜமால் (பரமக்குடி), பால்பாண்டியன் (ராமநாதபுரம்), ஜகுபர் உசேன் (கீழக்கரை) ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கருப்பையா, ஜானகிராமன், குப்புசாமி, லோகிதாசன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புதுமடம் தர்வேஸ், செந்தில்குமார், சரவணகுமார், ராம்கோ தலைவர் சுரேஷ், முன்னாள் ராமநாதபுரம் நகர செயலாளர் வரதன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் செல்வராஜ் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட அ.தி.மு.க., ஒன்றிய, நகரம், பேரூர் செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள், கிளை, வார்டு செயலாளர்கள், கட்சியில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர்.
      • ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

      திருப்பூர் :

      தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் சோமனூர் பகுதி தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-

      கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருபுறம் பஞ்சு விலை உயர்வு, மறுபுறம் துணிக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து நூல்களை வாங்கி துணி உற்பத்தி செய்யும் போது ஆர்டர்கள் இல்லை எனக்கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கே துணிகளை கொள்முதல் செய்கின்றனர்.இதனால் மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டதால் விசைத்தறிகளும் இயங்குவதில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் முடங்கிவிடும். பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்க வேண்டியது வரும். அதனால் விசைத்தறி மற்றும் ஜவுளித்தொழில் நலன் கருதி மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

      • ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துவது ஏழை மக்களின் வாழ்வை மோசமாக்கும்.
      • மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும்.

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

      தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

      இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

      மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன.

      மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.

      உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர்.

      ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது.

      மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.

      எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

      • 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.
      • குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

      சென்னை:

      தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

      * தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும்.

      * 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.

      * குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
      • குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம்.

      திருப்பூர் :

      கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

      8 ஆண்டுகளாக ஒப்பந்த படி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தினால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

      • குறைதீர்க்கும் கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
      • தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ேகட்டுக்கொண்டனர்.

      மதுரை

      தமிழக அரசு மின்கட்டண உயர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. இதையொட்டி மாவட்டம் தோறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

      மதுரை தல்லாகுளம் திருமண மண்டபத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் குறைகேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

      இந்த கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் 'மின் கட்டண உயர்வு தேவையற்றது. இதனால் நாங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

      எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ேகட்டுக்கொண்டனர். மக்களின் கருத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

      • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
      • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

      மங்கலம் :

      அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

      விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

      • காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது.
      • கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது.

      காங்கயம் :

      திருப்பூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொழிலுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரம், கலால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்கு, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

      காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது. நாங்கள் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் தொழிலானது தென்னை விவசாயத்தை சார்ந்து அதை ஊக்குவிக்கும் தொழிலாக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் வாராக்கடன்கள் அதிகரித்து எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது.

      தற்போது உள்ள சூழ்நிலையில் தேங்காய் எண்ணெயின் விலையை விட பாமாயில் எண்ணெய் விலை குறைவாக உள்ளது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெயை வாங்கி பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறு மின்சார கட்டணத்தை உயர்த்தும் போது நாங்கள் அதன் சுமையை தேங்காய் எண்ணெய் விலையின் மீது வைக்கும்போது தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசு வெளிநாடுகளில் இருந்து பாமாயில் எண்ைணயை இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வினியோகம் செய்து வருகிறது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்து பாமாயில் பயன்பாட்டிற்கு அதிகப்படியாக மாறி வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரம் குறைந்துள்ளது.

      தமிழக அரசு தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து எங்கள் தொழிலை ஊக்குவித்து வரும் இந்த வேலையில், தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பை அளிக்கிறது. நாங்கள் அரவை கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் போது குறைவான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

      இதனால் தென்னை விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உபயோகித்து வரும் மின் இணைப்புகளுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மின்சார கட்டணம் உயர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

      ×