search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு"

    • இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
    • ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். திருவனந்தபுரம், நெய்யாற்றின் கரை பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

    ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. இது மாற்றப்பட வேண்டும். அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.
    • தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு வீடு உத்தரவாதம் என்கிற அடிப்படையில் புதுவிதமான பிரசாரத்தை கையில் எடுக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் 8 கோடி வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு கேட்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

    இந்த பிரசார பயணம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பு தங்களது ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை பட்டியல் போட்டு எடுத்துச் செல்ல காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.

    இது தவிர சமூக ஊடகங்களை பயன்படுத்தியும் பிரசாரம் செய்ய காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர்.

    ஏப்ரல் 6-ந் தேதியில் இருந்து பிரசார பயணத்தின் போது வீடு வீடாக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் தமிழகத்துக்கு விரைவில் வர உள்ளனர்.

    இதையடுத்து தமிழக காங்கிரசார் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.
    • நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு வழங்கும் தின கூலியை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.

    நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டிற்கு 8.5 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 27 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கும் 319 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக அரியானாவில் 374 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 234 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    • விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
    • மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி நிபந்தனைகளின் அடிப்படையில் அரசின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர்.
    • அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும் என ஜெர்மனி அதிகாரி கருத்து.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தன்மீது கைது போன்ற கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

    அப்போது ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த, அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.

    நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் உயர் அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "இதுபோன்ற கருத்துக்கள் எங்களது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், எங்களது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிட உட்படுத்துவதாகவும் பார்க்கிறோம். சட்டம் அதன் வழியில் அதன் நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விசயத்தில் ஒருதலைபட்சமான அனுமானம் மிகவும் தேவையற்றதாகும்" எனத் தெரிவித்துள்ளது.

    • வாட்ஸ்அப் மூலம் "விக்சித் பாரத்" தகவல் அனுப்பும் மத்திய அரசு.
    • தேர்தல் நடத்தை விதியை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்.

    இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதை நோக்கி பயணிப்பதாகவும், இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

    மத்திய அரசு "விக்சித் பாரத்" என்ற அத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் திட்டம் பெயரில் தகவல் அனுப்புகிறது.

    தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் "விக்சித் பாரத்" தொடர்பான தகவலை நிறுத்துமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு தெரிவித்தோம்.
    • வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் ஏன் இங்கு வரவில்லை?

    பெங்களூரு:

    கர்நாடாக மாநிலத்தின் பெங்களூரு நகரில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, தேர்தல் கட்டுப்பாடுகளால் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் என்றதும் பிரதமர் மோடி ஓடோடி வருகிறார். வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

    கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அறிவித்தோம்.

    மாநில அரசு சார்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரி கடிதம் எழுதினோ.

    இதுவரை கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பிரதமர் மோடி ஒரு பைசா கூட வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
    • இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.

    பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. நிதி திரட்டி உள்ளது.
    • கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் பேசியது வெற்று முழக்கம்.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது.

    * ஊழலில் சிக்கியதால் மக்களை திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும்.

    * பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. நிதி திரட்டி உள்ளது.

    * நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் தேர்தல் நன்கொடை வழங்கியது எப்படி? தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டதா?

    * சீனா ஆக்கிரமிப்பை அகற்றாமல் வாய்மூடி மெளனம் காக்கிறது பா.ஜ.க.

    * பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திராவிடக் கட்சிகள் தான்.

    * கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் பேசியது வெற்று முழக்கம்.

    * கச்சத்தீவை மீட்க பா.ஜ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?

    * வெளிநாட்டில் சிக்கியிருந்த மீனவர்களை தமிழக அரசுதான் மீட்டது.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    • நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், உங்களின் ஆதரவே எனக்கு மகத்தான பலத்தை அளித்தது.
    • நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களது ஆதரவு, சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். இதற்காக அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:-

    நாட்டு மக்கள் அனைவருமே எனது குடும்பத்தினர். 140 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டோம். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமே மிகப்பெரிய சாதனையாகும்.

    பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. மின்சார வசதி, அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், குடிநீர், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு நிதியுதவி, பெண்களுக்கு உதவி உள்ளிட்ட பல திட்டங்கள் உங்களின் நம்பிக்கையின் காரணமாகவே சாத்தியமானது.

    ஜி.எஸ்.டி. அமலாக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370-வது பிரிவை ரத்து செய்தது, முத்தலாக் குறித்த புதிய சட்டம், மகளிர் இடஒதுக்கீடு, பாராளுமன்ற புதிய கட்டிடம் மற்றும் தீவிரவாதம், நக்சலைட்டு பிரிவினைவாதம் ஆகிய அனைத்தும் உங்கள் நம்பிக்கை ஆதரவால் சாதிக்க முடிந்தது.

    நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், உங்களின் ஆதரவே எனக்கு மகத்தான பலத்தை அளித்தது. நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களது ஆதரவு, சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ×