search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஆர் பாலு"

    • அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது.
    • பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர்.

    * அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுக்கிறார்.

    * பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர்.

    * நாளைக்கு எங்களையும் சஸ்பெண்ட் செய்வார்கள்.

    * அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது.

    * விசாரணை நடத்துவதாக கூறுகின்றனர். என்ன விசாரணை நடத்த போகிறார்கள் என தெரியவில்லை.

    * பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 301 பேரில் 176 பேர்தான் பணியில் உள்ளனர்.

    * பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நாளை மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

    இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், சுமார் 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு பதில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பார் என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியை பலப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்து இந்த கூட்டத்தை கூட்டுவதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

    நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களது கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    5 மாநில தேர்தலில் கவனம் செலுத்திய காங்கிரசை இருவரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்கள் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மத்திய மந்திரியிடம் வழங்கப்பட்டது.
    • இந்தச் சந்திப்பின்போது மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    புதுடெல்லி:

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை

    விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முரளிதரன் உடன் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு நேரில் சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

    அந்தக் கடிதத்தில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய இணை மந்திரி முரளிதரன், மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    • ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் தி.மு.க.வால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை.
    • நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    கோவை:

    தமிழக பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை இன்று மீண்டும் தொடங்குகிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு இருந்து இன்று மாலை 4 மணிக்கு அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டி.ஆர்.பாலு, கவர்னரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். கவர்னரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது. தி.மு.க. அரசு சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பஸ் நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர்.

    மக்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் கட்டுவது பெரிய விஷயம் அல்ல. இது சாதனை அல்ல. எனவே கவர்னரை டி.ஆர். பாலு ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கவர்னர் தனது வேலையை செய்கிறார். அவரை ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி என டி.ஆர். பாலு கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார். டி.ஆர். பாலு எம்.பி. சீட் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வாறு பேசுகிறார். கவர்னரை வம்பிற்கு இழுக்கும் போக்கை தி.மு.க.வினர் கைவிட வேண்டும்.

    பாரதியார் பற்றி பேச தி.மு.க. தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை தி.மு.க.வினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை. பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர். பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள். வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருக்கிறது. பாரதியார் பற்றி நாடகம் போடுவதை முதலமைச்சர், நிறுத்தி கொள்ள வேண்டும்.

    நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். 50 லட்சம் கையெழுத்து வாங்கி என்ன நடக்க போகிறது?

    ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் தி.மு.க.வால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை.

    நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை.

    எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? பெருஞ்சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் கனவு இருக்கலாம்.

    தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி வர வேண்டும்.

    பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார்.

    திராவிடம் என்பது என்ன என தி.மு.க.வினருக்கே தெரியாது. அது முட்டாள்தனமான பொய் வாதம்.

    நடிகை கவுதமியை நேற்று சந்தித்தேன். அவர் எனக்கு நண்பர். பிரச்சனை எதுவும் இல்லை. கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.
    • பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு? செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதா வருகிற 18-ந்தேதி கூட உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என்றார்.

    மேலும், பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அதே நேரம் இந்தியா என்ற பெயரை உச்சரிக்க பா.ஜ.க. பயப்படுகிறது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
    • அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, 'இந்தியா' குறித்து தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு கூறியதை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியுள்ளனர்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சை தவறாக மேற்கொள் காட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • மணிப்பூரில் பாஜக அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங். எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
    • மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

    பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

    தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

    திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசும்போது, "மணிப்பூரில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையில் 143 பேர் பலியாகியுள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, அந்த மாநிலத்துக்கும் செல்லவில்லை. அதேசமயம், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்துகொண்டனர்" என்றார்.

    மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

    மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே வலியுறுத்தினார். 

    • அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • இதில் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவர விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    விலைவாசி உயர்வை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.

    மணிப்பூர், விவகாரம், பொது சிவில் சட்டம், ஒடிசா ரெயில் விபத்து ஆகியவை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

    • டி.ஆர்.பாலு முன்னதாகவே நீதிமன்றத்தில் வந்து சத்திய பிரமாணம் செய்து விட்டு சென்று இருக்கிறார்.
    • பா.ஜ.க. வழக்கறிஞர்கள் அணி பலமாக இருப்பதை இன்றுதான் பார்த்தேன்.

    சென்னை:

    தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும், 10 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் தனக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியது தவறானது என்றும் அவதூறானது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

    எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு அண்ணாமலை இன்று ஆஜராக உததரவிட்டிருந்தது. இதன்படி அவர் கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தி.மு.க. பைல்ஸ் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டதில் இருந்தே தி.மு.க.வினர் கோபத்தில் உள்ளனர். டி.ஆர்.பாலு முன்னதாகவே நீதிமன்றத்தில் வந்து சத்திய பிரமாணம் செய்து விட்டு சென்று இருக்கிறார். 3 நிறுவனத்தில் மட்டும்தான் பங்கு தாரராக இருக்கிறேன் என்று டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.

    பா.ஜ.க. வழக்கறிஞர்கள் அணி பலமாக இருப்பதை இன்றுதான் பார்த்தேன். மீண்டும் ஆகஸ்டு மாதம் 3-வது வாரம் ஆஜராக சொல்லி இருக்கிறார்கள்.

    தி.மு.க. ஊழல் பட்டியல் சம்பந்தமான பாகம்-2 தயாராக உள்ளது. கவர்னர், டி.ஜி.பி. ஆகியோரிடம் கொடுப்பதா? அல்லது பொது வெளியில் வெளியிடுவதா? என்பது பற்றி பின்னர் அறிவிப்பேன்.

    பினாமி பெயரில் வாங்கி இருக்க கூடிய சொத்து பட்டியல்கள் இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

    ஊழல் பட்டியல் பாகம்-2 பாதயாத்திரைக்கு முன்பு ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும்.

    நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் தி.மு.க.வினருக்கு சொந்தமானவர்கள்தான். ரத்த சொந்தமும் இருக்கிறது. இது சம்பந்தமான புகைப்படங்களும் உள்ளன.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கில் நாளை ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் நாளை (14-ந்தேதி) ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு அண்ணாமலை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராகிறார்.

    • பா.ஜனதா ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலம் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.
    • 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் கொரட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில், அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, நடிகர் நாசர், நக்கீரன் கோபால், பேராசிரியர் அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி பேசுகையில், பா.ஜனதா ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலம் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கே சரியில்லை. அங்கு மந்திரி வீட்டுக்கே பாதுகாப்பு கிடையாது. இன்றைய தினமும் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் தலித் மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வீடு இல்லாத மக்கள் உட்பட பலர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இது போன்ற மிக மிக மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் நாட்டில் இருக்கக்கூடிய பிரதமர் இதுவரை ஒரு வார்த்தை கூட அது பற்றி கூறவில்லை.

    15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த போது உள்துறை அமைச்சர் இது புகைப்படத்திற்காக மட்டும்தான் என்று கிண்டல் செய்கிறார். எந்த அளவு தைரியம் இருந்தால் இப்படி பேசுவார்கள். அவருக்கு நாவடக்கம் தேவை. 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம். 50 ஆண்டுகள் ஒரு கட்சிக்கு தலைவனாக இருந்த ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையில் ஒன்று கூடி என்ன முடிவு செய்கிறார்களோ அதைத்தான் கவர்னர் பின்பற்ற வேண்டும். அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் நான்கு மணி நேரம் கூட அவர்களால் ஒரு நிலையில் இருக்க முடிய வில்லை. நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரும் என்று நினைக்க வேண்டாம் முன் கூட்டியே டிசம்பர் மாதத்தில் கூட வர வாய்ப்பு இருக்கிறது என்றார். கூட்டத்தில் ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ, மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் டி. எஸ். பி. ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×