search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும்.
    • 12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு.

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அந்த வகையில், என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும் என்று என்சிஇஆர்டி-ன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக "பாரத்" என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், பாட புத்தகங்களில் இந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • சனாதனம் தர்மம் விவகாரத்தில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?
    • ஆட்சி அதிகாரத்தைவிட, கொள்கைதான் முக்கியம்

    ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி, பேச்சை தொடங்கும்போதே பாரத் எனத் தொடங்கினார். மேலும், ஒவ்வொரு நாட்டின் பெயரை பிரதிநிதிப்படுத்தும் பெயர் பலகையில், பிரதமர் மோடியின் முன் பாரத் என வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாரத் நாட்டின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் இந்தியாவின் பெயர் ஏறக்குறை பாரத் என மாற்றடைய உறுதியாகிவிட்டது எனக் கூறலாம்.

    இந்த நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் பின்வருவாறு:-

    கேள்வி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதே?

    பதில்: வாழ்த்துகள் (சிரித்துக்கொண்டே) 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார்.

    கேள்வி: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக உங்களையும், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் பா.ஜனதா துணைத் தலைவர் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனரே?

    பதில்: திமுக கட்சியே அதற்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்களுக்கு ஆட்சியை பற்றி கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரித்தை விட கொள்கையே முக்கியம்.

    கேள்வி: சனாதனம் தர்மம் ஒழிப்பு காரணமாக ஆட்சியே போனால் பரவாயில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: ஆம். எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை.

    கேள்வி: மாநாட்டில் உங்களுடைய பேச்சு மட்டும் விமர்சனமாக்கப்படுகிறது. இது தனிமனித தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: தனி மனித தாக்குதல் கிடையாது. கொள்கை தாக்குதல்.

    இவ்வாறு குறிப்பிட்டார்.

    மேலும், "பா.ஜனதாவை விட்டுவிடுங்கள். என்னுடைய கேள்வி அ.தி.மு.க. பற்றியது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். கட்சியில் அண்ணா பெயர் உள்ளது. அண்ணாதான் அதிக அளவில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியுள்ளார். சனாதன தர்மம் விவகாரத்தில் அவர்களுடைய கருத்து என்ன? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்

    • ஒவ்வொரு அதிபரின் முன்பாக நாட்டின் பெயர் அட்டை வைக்கப்படும்
    • தங்கள் கூட்டணிக்கு அஞ்சி நாட்டின் பெயரையே மாற்றுவதாக எதிர்கட்சிகள் கூறின

    வரும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என ஒரு தகவல் சென்ற வாரம் வெளியாகியது. பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும், அவ்வாறு பெயர் மாற்றம் வருவதை ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரித்தனர்.

    ஆனால், இருபதிற்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை 2024 தேர்தலில் எதிர்க்கும் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், ஜி20 உறுப்பினர்கள் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் அதிபர்களும், பிரதிநிதிகளும் புது டெல்லிக்கு வந்தனர்.

    அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாடு சம்பந்தமாக 'இந்தியா' எனும் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய பெரும்பாலான அதிகாரபூர்வ பதிவுகளிலும் 'இந்தியா' எனும் வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சர்வதேச மாநாட்டு மையத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு உலக தலைவருக்கும் முன்பாக மேஜையில் அவரவர் நாட்டையும் குறிக்கும் விதமாக ஒரு அட்டை வைக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக உள்ள அட்டையில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி சார்பில் ஒரு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பிதழில் பாரத் நாட்டின் ஜனாதிபதி என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி சென்ற வாரமே எதிர்கட்சி தலைவர்கள் தொடங்கி வைத்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

    தற்போது பிரதமர் பாரத் நாட்டின் தலைவராக மாநாட்டில் அடையாளப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி நாட்டின் பெயர் மாற்றம் உறுதியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A.) என பெயரிடப்பட்டதால், பா.ஜ.க. நாட்டின் பெயரையே மாற்ற துடிப்பதாக அக்கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது.
    • இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    நியூயார்க்:

    டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதை ஐ.நா. ஏற்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், ''கடந்த ஆண்டு துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட முறையான கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம். அதுபோலவே இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்" என்றார்.

    • எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது
    • பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென இந்தியா மீது என்ன கோபம்?.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது. நாங்கள் Bharat என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கருத்து
    • மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை பரப்பி மக்களை குழப்பி வருகிறார்கள். இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை. ராகுல்காந்தி நடை பயணம் சென்றபோது அதற்கு பாரத் யோதார் என்றே பெயர் வைத்திருந்தார்.

    பாரத் என்ற பெயர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பெயர் தான். 2016-ம் ஆண்டில் இந்தியாவை பாரத் என அழைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு தெரிவிக்கையில், பாரத் என்று அழைக்க விரும்புவோர் பாரத் என்றும், இந்தியா என்று அழைக்க விரும்புவோர் இந்தியா என்றும் அழைக்கலாம். இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என தெளிவாக தெரிவித்ததுடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ல் எந்த மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை இல்லை' எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

    மீண்டும் 2020-ல் இதே வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பாப்டேவிடம் இந்தியா என்று அழைப்பதா, பாரத் என்று அழைப்பதா என்ற வழக்கு ஒன்று வந்தது. இந்த மனுவை ரிட் மனுவாக மத்திய அரசுக்கு அனுப்பியது. இதன் மீது மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-ன் படி பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதில் எந்தவித தவறும் இல்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டம் டாக்டர் அம்பேத்கார் அவர்களால் எப்போது வடிவமைக்கப்பட்டதோ, அப்போதே சட்டமன்ற அரசியலமைப்பு விதிகளின்படி இதுபற்றி விவாதம் வந்தது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாப்டே அனுப்பியிருந்த ரிட் மனு தொடர்பாக மத்திய அரசு பாரத் என்று அழைக்க முடிவு எடுத்திருக்கலாம். எனவே, இதன் வாயிலாக இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்று அழைப்பதில் எவ்வித தவறுமில்லை. இதை உணராமல் அரசியல் கட்சிகள் மக்களை குழப்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் மத்திய அரசு இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

    எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால் தான் இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி பாரத் என்று பெயரை மாற்றினாலும் அந்த பெயரிலேயே கூட்டணியின் பெயரை மாற்ற தயாராக உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரை பாரத் என்று குறிக்கும் வகையில் நல்லிணக்கம், நட்பு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை கொண்டு வரும் கூட்டணி (பாரத்) என மாற்றம் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஐநா சபையில் துருக்கி பெயர் கடந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது
    • முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலனை செய்யப்படும்

    இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில்

    ''துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்'' என்றார்.

    இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும்.

    • "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர் வலியுறுத்தல்.
    • ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இந்த விவகாரம் குறித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில், "இந்தியாவின் கருத்துக்கணிப்பு - ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி, தேர்தல் நாடகத்திற்காக நாட்டின் பெயரையும் மாற்ற நினைப்பவரின் பெயரை குறிப்பிடுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது.
    • பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது. 



    'பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்' என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது. ஆனால் அவர் கடந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இதனை முகப்பு படமாக வைத்திருப்பதே உண்மை நிலவரம் ஆகும். அப்போது முதல் தற்போது வரை டோனி தனது முகப்பு படத்தை மாற்றாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
    • தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிகள் ஆலோசனை நடத்தின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அல்லது முன்னாள் தலைவர் சோனியா இருவரில் ஒருவர் கடிதம் எழுதவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம், வேலைவாய்ப்பு பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, இமாச்சல பிரதேசம் மழை வெள்ள பாதிப்பு, பாரத் பெயர் மாற்றம் விவகாரம், அதானி விவகாரம் உள்பட 10 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இது தவிர இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதில் தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 9, 10-ந்தேதிகளில் ஜி-20 சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.

    ஜி-20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக அவர் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு அனுப்பி உள்ளார்.

    வெளியுறவு அமைச்சகம் தயாரித்து வழங்கிய அந்த அழைப்பிதழ் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அதில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் "பாரத ஜனாதிபதி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல ஜி-20 மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் 26 பக்க சிறு புத்தகத்திலும், "பாரதம்-ஜனநாயகத்தின் தாயகம்" என்று அச்சிடப்பட்டுள்ளது.

    இதற்கு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் மத்திய அரசு இதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

    இதற்கிடையே இன்று இந்தோனேஷியா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பற்றிய அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் பெயரை இந்தியா என்றும் பாரதம் என்றும் அழைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2 பெயர்களையும் பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் அதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாரதம் என்று பெயர் மாற்றும் நடவடிக்கை இருக்காது என்று மத்திய அரசு மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். என்றாலும் எதிர்க்கட்சிகள் பாரதம் பெயரை மத்திய அரசு அதிரடியாக மாற்றக்கூடும் என்று சந்தேகிக்கின்றன.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இந்தோனேஷியா நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் முன்பு அவசரமாக மத்திய மந்திரி சபை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பாரதம் பெயர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் பற்றியும் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தெரிய வந்துள்ளது.

    மத்திய மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடந்தது. அந்த கூட்டத்தில் பொருளாதார ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜி-20 மாநாட்டை நடத்தி முடித்ததும் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ×