search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாரத் பெயர் மாற்றும் விவகாரம்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
    X

    'பாரத்' பெயர் மாற்றும் விவகாரம்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    • இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 9, 10-ந்தேதிகளில் ஜி-20 சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.

    ஜி-20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக அவர் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு அனுப்பி உள்ளார்.

    வெளியுறவு அமைச்சகம் தயாரித்து வழங்கிய அந்த அழைப்பிதழ் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அதில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் "பாரத ஜனாதிபதி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல ஜி-20 மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் 26 பக்க சிறு புத்தகத்திலும், "பாரதம்-ஜனநாயகத்தின் தாயகம்" என்று அச்சிடப்பட்டுள்ளது.

    இதற்கு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் மத்திய அரசு இதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

    இதற்கிடையே இன்று இந்தோனேஷியா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பற்றிய அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் பெயரை இந்தியா என்றும் பாரதம் என்றும் அழைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2 பெயர்களையும் பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் அதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாரதம் என்று பெயர் மாற்றும் நடவடிக்கை இருக்காது என்று மத்திய அரசு மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். என்றாலும் எதிர்க்கட்சிகள் பாரதம் பெயரை மத்திய அரசு அதிரடியாக மாற்றக்கூடும் என்று சந்தேகிக்கின்றன.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இந்தோனேஷியா நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் முன்பு அவசரமாக மத்திய மந்திரி சபை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பாரதம் பெயர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் பற்றியும் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தெரிய வந்துள்ளது.

    மத்திய மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடந்தது. அந்த கூட்டத்தில் பொருளாதார ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜி-20 மாநாட்டை நடத்தி முடித்ததும் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×