search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்கிறார் டி.ஆர்.பாலு
    X

    இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்கிறார் டி.ஆர்.பாலு

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நாளை மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

    இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், சுமார் 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு பதில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பார் என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியை பலப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்து இந்த கூட்டத்தை கூட்டுவதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

    நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களது கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    5 மாநில தேர்தலில் கவனம் செலுத்திய காங்கிரசை இருவரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×