search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னரை ஒருமையில் பேசுவதை டி.ஆர். பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும்: அண்ணாமலை
    X

    கவர்னரை ஒருமையில் பேசுவதை டி.ஆர். பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும்: அண்ணாமலை

    • ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் தி.மு.க.வால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை.
    • நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    கோவை:

    தமிழக பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை இன்று மீண்டும் தொடங்குகிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு இருந்து இன்று மாலை 4 மணிக்கு அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டி.ஆர்.பாலு, கவர்னரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். கவர்னரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது. தி.மு.க. அரசு சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பஸ் நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர்.

    மக்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் கட்டுவது பெரிய விஷயம் அல்ல. இது சாதனை அல்ல. எனவே கவர்னரை டி.ஆர். பாலு ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கவர்னர் தனது வேலையை செய்கிறார். அவரை ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி என டி.ஆர். பாலு கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார். டி.ஆர். பாலு எம்.பி. சீட் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வாறு பேசுகிறார். கவர்னரை வம்பிற்கு இழுக்கும் போக்கை தி.மு.க.வினர் கைவிட வேண்டும்.

    பாரதியார் பற்றி பேச தி.மு.க. தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை தி.மு.க.வினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை. பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர். பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள். வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருக்கிறது. பாரதியார் பற்றி நாடகம் போடுவதை முதலமைச்சர், நிறுத்தி கொள்ள வேண்டும்.

    நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். 50 லட்சம் கையெழுத்து வாங்கி என்ன நடக்க போகிறது?

    ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் தி.மு.க.வால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை.

    நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை.

    எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? பெருஞ்சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் கனவு இருக்கலாம்.

    தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி வர வேண்டும்.

    பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார்.

    திராவிடம் என்பது என்ன என தி.மு.க.வினருக்கே தெரியாது. அது முட்டாள்தனமான பொய் வாதம்.

    நடிகை கவுதமியை நேற்று சந்தித்தேன். அவர் எனக்கு நண்பர். பிரச்சனை எதுவும் இல்லை. கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×