search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் பதற வைக்கும் வீடியோ வெளியானது
    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

    கடந்தாண்டு மணிப்பூரில் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து மணிப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணையில், ஆறு நபர்கள் மற்றும் ஒரு சிறார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில்,

    "மணிப்பூரில் வன்முறையின் போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், வாகனத்தை எடுக்க சாவி இல்லை எனக் கூறியுள்ள போலீசார், கலவரக் கும்பலிடமே இருவரையும் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

    • மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
    • ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.

    • 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.

    2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

    அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு வாரங்களில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சிக்குழுவால் பலர் படுகொலை.
    • கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் மணிப்பூரில் ஆங்காங்கே மோதல் வெடித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கிராம பாதுகாப்புக்கு குழு இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளத்தாக்கின் கிராம பாதுகாப்பு குழுவான அரம்பை டெங்கோல் (AT) என்ற குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.-க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறையில் தலைவர்கள் நிலை என்ன? என்பது தெளிவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மரம் வெட்டுபவர்கள், கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள், இரண்டு போலீஸ் கமாண்டோஸ் ஆகியோர் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.

    இதனால் மத்திய அமைச்சகம் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு நேற்று இரவு மணிப்பூர் வந்துள்ள நிலையில் அரம்பை டெங்கோல் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    கங்லா கோட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே நாகா பழங்குடியின தலைவர்கள் உள்பட 35 எம்.எல்.ஏ.க்கள் 25 குகி கிளர்ச்சி குழுக்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளளது. எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மக்களுடன் ஆலோசித்து, அதன்படி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் சொல்லும் நடவடிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து பா.ஜனதா அரசை கவிழ்ப்பது எனத் தகவல் தெரிவிக்கிறது. மணிப்பூர் சட்டசபை 60 எம்.எல்.ஏ.க்களை கொண்டதாகும்.

    குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாதுகாப்புப்படை முழு அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    • மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்த வண்ணம்தான் உள்ளது.
    • பிஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் அதிகரிப்பு.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மைதேயி- குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு பிரிவினரிடையேயான மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்த நிலையில் ஏராளமானோர் அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ராணுவம், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை வெடித்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனால் பதட்டம் நிலவியது.

    இந்நிலையில் மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். தாரா சிங், இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) ஆகிய 4 பேரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கும்பலால் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டம் ஹாடக் பைலென் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் ஆயுதமேந்திய குழு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தாராசிங் மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கும்பி- தவுபால் மாவட்டத்தில் உள்ள வாங்கூவில் இரு பிரிவனருக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு மணிப்பூரில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.
    • சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து கடந்த மே மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகும் சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் நேற்று முன் தினம் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து, சூரசந்த்பூர் மாவட்ட கலெக்டர் தருண் குமார், சூரசந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இங்கு 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.

    • கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
    • மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.

    கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இடையில் செப்டம்பர் மாதத்தில் சில நாட்கள் மட்டும் இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் அடுத்தடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே சமூக வலைத்தளங்கள் வழியாக வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை (புதன்கிழமை) வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் பிறப்பித்து உள்ளார்.

    • மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதில் 180 பேர் பலியானார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கேம்சந்த் யும்னம் வீடு நோக்கி கையெறி குண்டு வீசிய சம்பவம் நேற்று நடந்தது. அவரது வீடு, இம்பாலில் யும்னம் லெய்கை பகுதியில் உள்ளது. வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், திடீரென வீட்டை நோக்கி கையெறி குண்டை வீசினர்.

    நல்லவேளையாக, பிரதான வாயிலுக்கு சற்று முன்பே குண்டு கீழே விழுந்து வெடித்து விட்டது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தினேஷ் சந்திரதாஸ் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். வெடிகுண்டு சிதறல்கள் பட்டதால், அவர்களுக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் பார்வையிட்டார். குண்டு வீச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தலைமை செயலாளர் வினீத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்டங்கள், நிறுவனங்கள், இடங்கள், துணை கோட்டங்கள் ஆகியவற்றின் பெயரை சிலர் மாற்றுவதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி மாற்றுவது, தற்போதைய சூழ்நிலையில் இரு சமூகங்களுக்கிடையே பிளவை உருவாக்கும்.

    சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடும். எனவே, இதுபோன்று பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும்.
    • சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

    இந்நிலையில் 2 மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்கள் தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.

    தற்போது 4 பேரும் கைதான சுராசந்த்பூர் தான் மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும். இங்கு தான் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பரவியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இரண்டு சிறார்களும் கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது..

    இதுதொடர்பாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங், தனது எக்ஸ் வலைதளத்தில், "ஒரு பழமொழி சொல்வது போல், ஒருவர் குற்றம் செய்துவிட்டு தலைமறைவாகலாம், ஆனால் அவர்கள் சட்டத்தின் நீண்ட கைகளில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்கு மரணதண்டனை உட்பட அதிகபட்ச தண்டனையை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    • பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
    • போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு மணிப்பூர் அரசாங்கம் நிறுத்தி வைத்தது.

    இதன்படி மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை இன்றோடு நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் மேலும் 5 நாட்களுக்கு(6-ந்தேதி வரை) நீட்டித்து மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
    • மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்றிரவு முழுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இன்று காலை முதலே மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பதற்றமான சூழல் தான் நிலவியது.

    தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • இம்பாலில் நேற்று இரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இம்பால்:

    மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் பிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனா்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஆயுதமேந்திய கும்பலிடம் அவா்கள் பிணைக்கைதிகளாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே, 'மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இக்கொடூர குற்றத்தில் தொடா்புடைய அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்' என்று மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல்-மந்திரி அலுவலகம் நோக்கி செல்ல முயன்றபோது அவா்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 45 போ் காயமடைந்தனா். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நேற்று இரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சூழலில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு இன்றும் மாணவ-மாணவிகள் இம்பாலில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 25 முதல் 30 போ் காயமடைந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவ-மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ×