search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை"

    • வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்
    • கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.

    அதன்படி இன்று, 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், கோவை, சேலம், ஊட்டி, நீலகிரி சுற்றுவட்டாரத்தில் கோடை மழை பெய்தது.

    வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோடை காலம் என்பதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும்.

    தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

    குறிப்பாக, தருமபுரி, திருத்தணி, திருப்பதூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும்.

    இன்று முதல் 6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், முதல் ஒரு வாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

    சென்னையை பொருத்தவரையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை.

    கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை.

    நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

    அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
    • துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், நடைமேடைகள், சுரங்க பாதைகள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கி போய் உள்ளது.

    தேங்கி கிடக்கும் மழைநீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் ஆறு போல ஓடியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து துபாய் வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

    துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இன்று 2-வது நாளாக தொடர்ந்து துபாயில் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரம் சூறாவளி காற்று வீசுகிறது. இடைவிடாத மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.

    துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சார்ஜாவில் மழையால் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    துபாய் போன்ற நகரங்களில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதுவரை கடும் வறட்சியால் செயற்கை மழையை உருவாக்கி வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது இயற்கை மழையால் தத்தளித்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கால நிலை மாற்றத்தால் வருங்காலங்களில் வளைகுடா நாடுகளில் வெப்பம் மேலும் அதிகரித்து வெப்ப சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.
    • சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை.

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றுமு், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேத வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இன்று வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்தி வந்த நிலையில், திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.

    இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால், சற்று வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல், ராசிபுரத்தில் வெளியில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு நடுவே திடீரென கோடை மழை பெய்தது.

    இதேபோல், சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை கொட்டியது.

    அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    • தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது
    • அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது.

    தற்போது அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    மே 4 ஆம் தேதி வரை டிமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் அதுவரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 04 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    துபாயில் கடந்த மாதம் உருவாகிய புயல் காரணமாக வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால், துபாய் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இடியுடன் கூடிய பெய்த பலத்த மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளது.

    துபாயில் பெய்த மழையைவிட இது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மேலும், துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேவை குறைக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் மோசமான வானிலை காரணமாக இன்று பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

    "மே 2 ஆம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து வரும் அல்லது புறப்படும் வாடிக்கையாளர்கள் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம்" என அமீரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • வாட்டி வதைக்கும் வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    • வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

    வாட்டி வதைக்கும் வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார். மே முதல் வாரத்திற்கு பின் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    TNL04010524: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது. இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது.

    இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

    சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அதே நேரத்தில் கொளுத்திய கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி யில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசியில் 16.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்த வரை கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயரும் அளவிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றாலும், மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் கோடை வெயிலால் வேகமாக குறைந்து வருகிறது. அந்த அணையில் தற்போது 27.40 அடி நீர் மட்டுமே இருக்கிறது.

    ராமநதி அணையின் நீர் மட்டம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது 84 அடி கொண்ட அந்த அணையில் 41.50 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும் 72.10 அடி கொண்ட கருப்பாநதியில் 39.37 அடி நீர் இருப்பும், மிகச்சிறிய அணையான குண்டாறு அணையின் நீர் இருப்பு 15.250 அடியாகவும் உள்ளது.

    • கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
    • அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே கடுமையான வெப்ப அலை வீசி வருவதோடு வெயில் சுட்டெரிக்கிறது.

    இதனால் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் நேற்று திடீரென கோடை மழை பெய்தது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 2.40 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 58 அடியாக குறைந்துவிட்டது. அந்த அணைக்கு வினாடிக்கு 59 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையில் 70 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும், 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 9 அடியாகவும் உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் சுமார் 1 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் அங்குள்ள தேயிலை தோட்டங்கள், சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    கடந்த சில நாட்களாகவே அங்கு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வரும் நிலையில் இந்த திடீர் மழையால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது கோடை விடுமுறையின் காரணமாக நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு படையெடுத்து வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மாஞ்சோலைக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

    நேற்று மாலையில் அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. காக்காச்சியில் 23 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
    • மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

    மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்குதல் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெரும்பாலான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கனமழையால் 11 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    அண்மையில் பெய்த கனமழையால் உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
    • விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

    ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.

    கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

    விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

    கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

    துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம் நடைபெற்றது. விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×