search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஞ்சோலை வனப்பகுதி"

    • கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
    • அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே கடுமையான வெப்ப அலை வீசி வருவதோடு வெயில் சுட்டெரிக்கிறது.

    இதனால் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் நேற்று திடீரென கோடை மழை பெய்தது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 2.40 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 58 அடியாக குறைந்துவிட்டது. அந்த அணைக்கு வினாடிக்கு 59 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையில் 70 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும், 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 9 அடியாகவும் உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் சுமார் 1 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் அங்குள்ள தேயிலை தோட்டங்கள், சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    கடந்த சில நாட்களாகவே அங்கு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வரும் நிலையில் இந்த திடீர் மழையால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது கோடை விடுமுறையின் காரணமாக நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு படையெடுத்து வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மாஞ்சோலைக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

    நேற்று மாலையில் அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. காக்காச்சியில் 23 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ×