search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை"

    • 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
    • வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது.

    இந்நிலையில் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக லெட்சுமிபுரம், மாணிக்கபுரம் பகுதி சாலைகளில் கடந்து பத்தாங்கரை வழியாக செட்டிவிளை, வட்டன்விளை, வெள்ளான்விளை, பரமன்குறிச்சி கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

    கடந்த 45 நாட்களாக குடியிருப்பு பகுதிகளையும், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளாளன்விளை, வட்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    24 மணிநேரமும் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு, பகலாக தொழிலாளர்கள் பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை சாலையில் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ள நீரை சீயோன்நகர் தேரிப்பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வந்த நிலையில் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

    மேலும் பரமன்குறிச்சி-வெள்ளாளன்விளை, சீயோன்நகர், தண்டுபத்து, உடன்குடிக்கு நேரடியாக செல்ல முடியாமல் சுற்றி சென்று வந்தனர்.


    இதனையடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்ற முடியாமல் தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு பல ஆயிரம் டன் ராட்சத கற்களை கொண்டு சாலையை சீரமைத்தனர்.

    இதனால் போக்குவரத்து மட்டுமே நடந்து வருகிறது. எனினும் வெள்ளான்விளை, வட்டன்விளை பகுதியில் இன்றளவும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளான்விளையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஆலயத்தின் பகுதியிலும் தங்கியிருந்து வருகின்றனர்.

    விவசாயிகள் தென்னை, பனை, வாழை போன்ற தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், விவசாய பணியை தொடங்க முடியாமலும் உள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அந்த வெள்ளாளன்விளை, வட்டன்விளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்து வந்தனர். இச்சூழ்நிலையில் முதல்வரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்கப்பட்டு திருச்செந்தூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் ஒருபகுதியாக வெள்ளாளன்விளை பகுதியில் அவர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உலகநாதன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருச்சந்திரன், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றதலைவர் ராஜரெத்தினம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.

    விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.
    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.


    தற்போது தைப்பூச திருவிழாவிற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரை வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 8.2 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 7.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, அம்பை, ராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் ஒரு சில இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமழை, கடம்பூர், கயத்தாறு ஆகிய இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    • தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது.
    • சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும், தொடர் மழையினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இரவில் மழை பெய்யும்போது அதிக அளவு நீர் திறக்கப்படுவதும், பகலில் நீர் திறப்பு குறைவதுமாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1509 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1666 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வரும் 1,458 கனஅடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இதுதவிர தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது. இவ்வாறாக இன்று காலை நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை நீரானது ஆற்றில் செல்கிறது.

    மலை பகுதியில் தொடர்மழையால் சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு தடை நீடிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 35 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 31 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 37 மில்லிமீட்டரும் மழை பெய்து.

    மாவட்டத்தில் சேரன்மகா தேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 5 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4.5 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை கொட்டியது. அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

    தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 19 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் கொட்டும் தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    • காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு.

    தமிழகத்தில் நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை எதிரொலி மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    • ஏற்காட்டில் பனிப்பொழிவு, குளிர், மழை என்று சீதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் குளிர் நிலவி வருகிறது.

    மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுஇடங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இரவில் கடுங்குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    தொடர்ந்த பனிப்பொழிவு, குளிர் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஏற்காட்டில் திடீரென சீதோஷ்ண நிலை மாறியது. மழை வருவது போல் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவு, குளிர், மழை என்று சீதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனிப்பொழிவும் அதிகளவில் இருப்பதால் மலைப்பாதையில் வந்து செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கிறது.

    • தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுவையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று காலை மழை இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக இருண்டு காணப்பட்டது. நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலை வெளிச்சம் இன்றி இருண்டு காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். இதேபோல பல்கலைக் கழகமும் கனமழையை ஒட்டி விடுமுறை அறிவித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நகரையொட்டி உள்ள பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இப்பகுதிகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.


    முட்டளவு மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாய்க்கால்களில் மழைவெள்ளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

    நகர பகுதியில் உள்ள சில சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடியது. மழையினால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    • அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • இன்று கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வருகிற 10-ந்தேதி வரை (நாளைமறுநாள்) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்தள்ளது.

    • மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது.

    சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் கீழ்வேளுர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குளிர்ச்சியால் சூழல்.
    • கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, தாம்பரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே குளுமையான சூழல் உள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேலும் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
    • பாறைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், மகா ராஜபுரம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று பகலில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் நள்ளிரவில் பலத்த மழையாக கொட்டியது. தொடர்ந்து விடிய, விடிய நீடித்த மழை இன்று காலை வரை தொடர்ந்தது. நகர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடியது. ராஜபாளையம் பகுதியில் பெய்த மழையால் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியது.

    மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனார்கோவில் ஆற்றில் வழக்கத்தைவிட தண்ணீர் வரத்து சற்று அதிகமாக இருந்தது. இதனால் ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6-வது மைல் குடிநீர் தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், லாரி, பேருந்து, சிற்றுந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கூட தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், நதிக்குடி, சுப்பிரமணியபுரம், மம்சாபுரம், இடையன்குளம், ரெங்கசமுத்திரப்பட்டி, புலிப்பாறைபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்றில் வெள்ளம் வருவது தெரியாமல் அந்த வழியாக வந்த பெரும்பாலானோர் ஆற்றின் கரையில் கடந்து செல்ல முடியாமல் நின்றனர். தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால், வேறு வழியின்றி மாற்றுப் பாதை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மழை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காயல்குடி ஆறு வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றுடன் இணைகிறது. இதனால் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே வெம்பக்கோட்டை அணை நிரம்பிய நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெம்பக்கோட்டை அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெம்பக்கோட்டை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வெள்ளம் சென்றதால் சுற்றுவட்டார பகுதியிலிருந்து மழையே பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-

    ராஜபாளையம்-38, ஸ்ரீவில்லிபுத்தூர்-50, சிவ காசி-105, பிளவக்கல்-58, வத்திராயிருப்பு-26.80, கோவிலாங்குளம்-9.20, வெம்பக்கோட்டை-52.40. மாவட்டம் முழுவதும் 343.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.
    • விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டிய கன மழையால் களக்காடு தலையணையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    அணை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 36 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,753 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.29 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,980 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் மாஞ்சோலை நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதியில் இருந்தே சுமார் 2 மாதங்களாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து பார்வையிட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காக்காச்சியில் 52 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 48 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 51 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று காலையில் புலியருவி, ஐந்தருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் தடை நீடிக்கிறது.

    காலை முதல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடனா, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் அந்த அணைகளுக்கு வரும் நீரானது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×