search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர்ந்து கொட்டிவரும் கனமழை:  500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
    X

    தொடர்ந்து கொட்டிவரும் கனமழை: 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

    • தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுவையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று காலை மழை இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக இருண்டு காணப்பட்டது. நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலை வெளிச்சம் இன்றி இருண்டு காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். இதேபோல பல்கலைக் கழகமும் கனமழையை ஒட்டி விடுமுறை அறிவித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நகரையொட்டி உள்ள பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இப்பகுதிகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.


    முட்டளவு மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாய்க்கால்களில் மழைவெள்ளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

    நகர பகுதியில் உள்ள சில சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடியது. மழையினால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    Next Story
    ×