search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students"

    • நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள்.
    • ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    புதுடெல்லி:

    தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது. முதல் முறையாக இவ்விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    சிறந்த கதை சொல்லல் விருது, ஆண்டின் பிரபல படைப்பாளி, பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி, தூய்மை தூதர் விருது, கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி உள்பட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் விருதுகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள். காலம் மாறும் போது, ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் போது, அதற்கு ஏற்ப மாற்றியமைப்பது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும்.

    அந்த பொறுப்பை இன்று பாரத மண்டபத்தில் இந்தியா நிறைவேற்றுகிறது. டேட்டா புரட்சியில் இருந்து மலிவான மொபைல் போன்கள் வரை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் பெருமை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் இளைஞர்களுக்குச் சேரும்.

    நான் மாணவர்களுடன் தேர்வு பற்றிய விவாதம் நடத்துவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பலர் கேலி செய்கிறார்கள். பிரதமர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்று நினைக்கிறார்கள்? எனக்குத் தெரியும். ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    ஆனால் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தை தவறாமல் செய்கிறேன்.

    இந்தியா, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி உலகத்துடன் கொள்ள 'இந்தியாவில் உருவாக்கம்' இயக்கத்தைத் தொடங்குவோம். பெண்கள் சக்தியை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு படைப்பாளிகளை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.

    தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.
    • சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.

    இதன்மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரையில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப்பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

    சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தாதிரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
    • நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.

    "எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.

    இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

    அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.

    இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.
    • 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர் எனவும் கூறப்பட்டது.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தமிழ் பாடத்தேர்வான இன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

    • பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
    • போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப் பொருள் புதுச்சேரி தாகூர் நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், தாகூர் நகரை சேர்ந்த இசை கலைஞர் சுசீந்திரன் (வயது 28) என்பதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் போதை 'ஸ்டாம்ப்' விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 போதை 'ஸ்டாம்ப்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த ஆஷிக் (23) என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்பை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆஷிக்கை கைது செய்து விசாரித்த போது, அவரது நண்பர் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்(22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.

    உடனே போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று, அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மருத்துவ மாணவர் ஆஷிக், டி.ஜே . நிகழ்ச்சியை பார்க்க செல்லும் போது சுசீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சுசீந்திரன் தனக்கு போதை ஸ்டாம்ப் வேண்டும் என்று ஆஷிக்கிடம் கேட்டுள்ளார்.

    அவர் தனது நண்பர் சந்தோசின், கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அதனை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே சந்தோஷ் தனது நண்பர் ஆஷிக்கை பார்ப்பதற்காக புதுச்சேரி வந்தார். அப்போது இவர்கள் 3 பேரும் சந்தித்து பேசினர்.

    பின்னர் காரில் சென்னை சென்று அங்கிருந்து 20 போதை ஸ்டாம்ப்களை வாங்கி புதுச்சேரி வந்தனர். அதில் 7-ஐ சுசீந்திரனிடம் கொடுத்தனர்.

    மேலும் 13 போதை ஸ்டாம்புகளை அவர்கள் பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
    • பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.

    பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
    • பொதுமக்கள் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 14-ந் தேதி பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி பிரதீப் என்ற 5-ம் வகுப்பு மாணவன் பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 6,754 பள்ளி வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.1.36 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.

    பள்ளி மாணவ-மாணவிகளை விதிமுறைகளை மீறி மிக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகமும் அவ்வப்போது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் பாதுகாப்பாக ஓட்டுகின்றனரா? சாலைவிதிகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? குழந்தைகளிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா? என்பதையும் விசாரித்து அந்தந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கோ அல்லது வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுக்கோ நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும் பொதுமக்களும் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம். மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலக எண்கள், செல்போன்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு விரிவான வழிமுறைகளை கொடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் துறையின் மூலம் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
    • கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது.

    நெல்லையில் கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் அதிகாலையில் பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் தொடக்கத்தில் லேசான சாரல் அடித்த நிலையில் படிப்படியாக மழை அதிகரித்தது. சுமார் 1 மணி நேரம் தச்சநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. டவுனில் சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டையில் அரை மணி நேரமாக பெய்த கனமழையினால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.

    பெரும்பாலான வாகன ஓட்டிகள் வண்ணார் பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நனையாமல் மழைக்கு ஒதுங்கி நின்றனர். காலையில் பெய்த மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் அவர்கள் பணிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு செல்லவும் தாமதம் ஏற்பட்டது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெய்த மழையில் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.

    மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 20 மில்லிமீட்டரும், நெல்லை யில் 7.40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணை பகுதியில் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதல் ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சிவகிரி பகுதிகளிலும் காலையில் இருந்து சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதி, திருச்செந்தூர் சாலை, கடற்கரை பகுதிகளில் இன்று காலை சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அதிகாலை 3 மணிக்கு சாரல் மழை தொடங்கிய நிலையில் 4 மணி அளவில் இடி-மின்னலுடன் ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் முள்ளக்காடு, பழைய காயல், ஆறுமுகநேரி, முத்தையா புரம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய மழையால் அவை தடைபட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டி னத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. 

    • புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

    குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

    இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

    2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    • தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும்.
    • நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது.

    கடுமையான போட்டி சூழலில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.

    குறிப்பாக தேர்வு நேரத்தில் கல்வி மற்றும் செயல்திறன் குறித்த அழுத்தத்தை மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலை மிக முக்கியமாக கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

    இதுபோன்ற அழுத்தம் மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வெகுவாக பாதிக்கிறது. தேர்வுக்கான தயார்நிலை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். படிப்புக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இடையில் ஒரு நியாயமான நல்ல சமநிலையை பராமரிப்பது மிக முக்கியமானது.

    உடற்பயிற்சி

    தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    வழக்கமான உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் படித்தவற்றை நினைவுபடுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் தேர்வு எழுதுவதற்கான செயல்திறனை மேம்படுத்த முக்கியமானவை.

    தேர்வுக்கு தயாராகும்போது, மாணவர்கள் ஆரோக்கியத்தை விட படிப்புக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். நடைபயிற்சி, யோகா போன்ற சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். மாணவர்கள் தங்கள் மனதை புதுப்பிக்க உதவி செய்யும்.

    நல்ல தூக்கம்

    நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மூளை செயல்பாட்டிற்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

    போதுமான நீர்ச்சத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்பதில் அக்கறையின்மை உள்ளது. திட உணவுக்கு சமமாக நீர்ச்சத்து முக்கியமானது. நீர்ச்சத்து இல்லாதது அறிவாற்றல் திறனையும், செரிமானத்தையும் வெகுவாக பாதிக்கும்.

    மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு சென்று காலையில் விழித்து சீரான தூக்க நடைமுறைகளைப் பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் முறையான தூக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் எப்போதும் சிறப்பான நினைவாற்றலுடன் படிக்க முடியும். நல்ல தூக்கம் என்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.

    தியானம்

    மன அழுத்தம், பதற்றம், பிற மனநல பிரச்சனைகளை கையாள மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதை முன்னுரிமையாக கொண்டிருக்க வேண்டும்.

    தேர்வுகளின்போது மன அழுத்தங்கள் குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பெற்றோர் அல்லது ஆசிரியர் அல்லது ஆலோசகர்களிடம் தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மாணவர்கள் சிக்கி கொள்ளாமல் அவர்களை திறம்பட கையாள வேண்டும்.

    தேர்வு மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தியானம் ஒரு கருவியாக இருக்கும். தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது, மனதை அமைதிப்படுத்தவும், கவன சிதறலை தடுக்கவும், பதற்றத்தை குறைக்கவும் உதவும்.

    நேர நிர்வாக யுக்தி

    கடைசி நிமிட பதற்றத்தை குறைக்க மாணவர்கள் படிக்கும் நேரத்தை நிர்வகிப்பதற்கான யுக்திகளை கையாள வேண்டும்.

    மின்னணு ஊடகத்தை அதிகமாக மாணவர்கள் சார்ந்துள்ளனர். செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுகின்றனர். இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

    இன்றைய காலகட்டத்தில் மின்னணு ஊடகம் இன்றியமையாததாகி விட்டது. தேர்வுக்கு மாணவர்கள் தாயாராவதற்கு சில மணி நேரங்களை சேமிக்க செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருப்பது மிக அவசியம் ஆகும்.

    வெற்றியை ஒருங்கிணைக்கும்

    தேர்வுகளின் போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வெற்றியை ஒருங்கிணைக்கும்.

    மாணவர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வது அவர்களின் கல்வி செயல்திறனை மேம்படுத்தும். இவை தேர்வு அறைக்கு அப்பால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துகிறது.

    தேர்வு மன அழுத்தத்தை திறம்பட கையாளுவதன் மூலம், நமது இளம் மாணவர்கள், தங்கள் திறனுக்கு ஏற்ப செயல்படுவார்கள்.

    இதன்மூலம் 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குகளை அடையும் வகையில் நம்பிக்கையான மற்றும் முன்னோக்கி செல்லும் இளைஞர்களாக உருவெடுப்பார்கள்.

    ×