search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug stamp"

    • பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
    • போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப் பொருள் புதுச்சேரி தாகூர் நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், தாகூர் நகரை சேர்ந்த இசை கலைஞர் சுசீந்திரன் (வயது 28) என்பதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் போதை 'ஸ்டாம்ப்' விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 போதை 'ஸ்டாம்ப்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த ஆஷிக் (23) என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்பை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆஷிக்கை கைது செய்து விசாரித்த போது, அவரது நண்பர் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்(22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.

    உடனே போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று, அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மருத்துவ மாணவர் ஆஷிக், டி.ஜே . நிகழ்ச்சியை பார்க்க செல்லும் போது சுசீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சுசீந்திரன் தனக்கு போதை ஸ்டாம்ப் வேண்டும் என்று ஆஷிக்கிடம் கேட்டுள்ளார்.

    அவர் தனது நண்பர் சந்தோசின், கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அதனை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே சந்தோஷ் தனது நண்பர் ஆஷிக்கை பார்ப்பதற்காக புதுச்சேரி வந்தார். அப்போது இவர்கள் 3 பேரும் சந்தித்து பேசினர்.

    பின்னர் காரில் சென்னை சென்று அங்கிருந்து 20 போதை ஸ்டாம்ப்களை வாங்கி புதுச்சேரி வந்தனர். அதில் 7-ஐ சுசீந்திரனிடம் கொடுத்தனர்.

    மேலும் 13 போதை ஸ்டாம்புகளை அவர்கள் பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×