search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப் பள்ளி"

    • அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே 5-ந்தேதி நடக்கிறது.

    இதையடுத்து நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. மே 2-ந்தேதி வரை சுமார் 1 மாதம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 13,304 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மார்ச் 25-ந்தேதி முதல் மே 2 வரையிலான நீட் நுழைவு தேர்வு பயிற்சிக்கான அட்டவணையை ஆசிரியர்கள் ஏற்கெனவே தயாரித்துள்ளனர். மாணவர்களுக்கு தினமும் தேர்வுகள் நடைபெறும். நீட் நுழைவுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் 3 முழுமையான மாதிரி தேர்வுகளையும் எழுதுவார்கள்.

    மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக, நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய 4 பாடங்களையும் படிக்க உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 210 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.

    தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    • சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம்.
    • ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9-ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களின் பணி நிரந்தரம் மற்றும் மே மாத ஊதியம் வழங்கக்கோரி, சென்னை டிபிஐ., வளாகத்தில் கடந்த மே 22 -ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினோம். போராட்டம் மே 24 -ந் தேதி வரை நீடித்த நிலையில், பள்ளிகல்வித்துறை இயக்குநா், சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது 2022 - 23 ம் ஆண்டுக்கான மே மாத ஊதியம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க முடியாது என்று பள்ளி கல்வி திட்ட இயக்குநா் ஜூன் 9 -ந் தேதி தெரிவித்துள்ளாா்.

    எனவே போராட்டத்தின் போது அளித்த உத்தரவாதத்தின்படி மே மாதத்துக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வகுப்பறையின் பின்வரிசையில் அந்த குரங்கு சாதாரணமாக அமர்கிறது.
    • பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என டுவிட்டர் பதிவு.

    ஹசாரிபாக்:

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை.

    ​​மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் அந்த குரங்கு பின்வரிசையில் சாதாரணமாக அமர்க்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 


    அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது குறித்த புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகியது. பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என்று இது குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டது. 


    முன்னதாக சில குரங்குகள் இணைந்து மொபைல் போனைப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 18 லட்சம் பாரவையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. குரங்குகளும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • பெற்றோர்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகை பகுதியில் சுமார் 52 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை தச்சூர், பொற்படாக்குறிச்சி, ஏமப்பேர் காலனி, இந்திலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 224 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் 5 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தன. இதில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 2 வகுப்பறை கட்டடங்கள் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. மீதமுள்ள 3 வகுப்பறை கட்டிடங்களில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 6-ஆம் வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியர் அறை ஒரு கட்டத்திலும், 7- ஆம் வகுப்பு ஒரு கட்டிடத்திலும் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு பள்ளியின் முன் உள்ள வராண்டாவில் நடைபெறும் அவல நிலை உள்ளது.

    மேலும் இந்த 3 கட்டிடங்களில் 2க ட்டிடங்கள் தற்போது ஓடுகள் சேதமடைந்து மழை பெய்தால் ஒழுகும் நிலை உள்ளது. இவ்வாறு கட்டிடங்கள் வசதியில்லாமல் ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளதாகவும் மேலும் சில பெற்றோர்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டிட வசதி இன்றி மாற்று பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் விதமாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×