search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strike"

    • அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவதும், இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும், அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஊதியக் குழு பேச்சுவார்த்தை, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தற்போது மேற்கொண்டு உள்ளனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. மக்களின் அச்சத்தினை போக்கும் வகையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு.
    • வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும்.

    பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், "8 வருட கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்" என என்றார்.

    • பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
    • இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் யாருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இதனை செயல்படுத்தும் போது இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் எரிபொருள் கேட்டு வருபவர்களுக்கும், பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த விஷயத்தில் சில நேரம் ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூட்டமைப்பு அறிவித்தது.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (1-ந்தேதி) காலை 6 மணி வரை கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டர்களால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், இந்த அவலத்திற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த விஷயம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பம்புகள் செயல்படும். இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 யாத்ரா எரிபொருள் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் கிழக்கு கோட்டை, விகாஸ்பவன், கிளமானூர், சடையமங்கலம், பொன்குன்னம், சேர்த்தலா, மாவேலிக்கரா, மூணாறு, மூவாட்டுபுழா, பரவூர், சாலக்குடி, திருச்சூர், குரு வாயூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன.

    • வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குளச்சல்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.

    நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,

    இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளைமீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சில விசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • திருமங்கலத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது.
    • 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து கோரிக்கை குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ-ஏ.ஐ.ஆர்.எப். தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபடுவதாக முடி வெடுக்கப்பட்டது.

    அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மன நிலையை அறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருமங்க லத்தில் ெரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்ட செயலாளர் எஸ்.எம்.ரபீக் வழிகாட்டு தலின் பேரில் சிவகாசி கிளை பொறுப்பாளர் ஜோதிராஜா, கிளைச் செய லாளர் ஹரிநாராயணன், பொருளாளர் முத்துவேல், உதவிச் செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    மதுரை அழகப்பன் நகர் ெரயில்வே கேட்டில் இருந்து விருதுநகர் வரை உள்ள ெரயில்வே நிலையங்கள் ெரயில்வே கேட் பகுதியில் பணியாளர்களிடம் அலுவலர்களிடம் கருத்து கேட்பு எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்கத்தினர் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).

    மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.

    இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    • தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
    • எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார்.

    இதில் செயலாளர் மலர்விழி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர்.

    போராட்டத்தில் ராமாயி, ஜெயபாரதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
    • மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகா சபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-

    ரெயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாமர, ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம்.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய பென்சன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல், ஓய்வு பெறும்போது கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.

    தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர். ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரெயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.எப்.யில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷியா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரித்து கொடுக்க உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகிற 21, 22-ந் தேதி மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.

    இதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கண்டோன்மென்ட் பகுதி மத்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதிகள் 7 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பள உயர்வு கோரி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் 8 ஊழியர்களை ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்துள்ளார். இதனை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

    • வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தருமபுரி:

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
    • மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை.

    கோவை,

    தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி கோவையிலும் கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் 2,500 லாரிகள் ஓடவில்லை.

    இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்கி வந்தன. ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது 2.50 லட்சம் எண்ணிக்கையிலான லாரிகள் மட்டுமே இயங்குகின்றன.

    லாரி தொழில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

    அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்ற கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். அதன்படி, மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×