search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி துறைமுகம்"

    • வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குளச்சல்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.

    நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,

    இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளைமீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சில விசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
    • ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது

    கிள்ளியூர் :

    இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க சாகர் பரிக்கிரமா என்ற யாத்திரையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோரப் பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த யாத்திரை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை இன்று குமரி மாவட்டம் தேங்காபட்டணம் வந்தடைந்தது. இந்த குழுவில் மத்திய மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் தேங்காபட்டணத்தில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவும், மாயமான மீனவர்களை தேட வசதியாக ஹெலிகாப்டர் தளம், விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ், துறைமுக மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினர்.

    இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறிய தாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக தேங்கா பட்டணத்தில் மீனவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிபடி மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்படுத்தினார். மீனவர் மேம்பாட்டுக்காக சுமார் ரூ38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்தியா இன்று மீன் ஏற்றுமதியில் 4-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தேங்காபட்டணம் பிரச்சினை சம்மந்தமாக கமிட்டி அமைத்து துறைமுகம் சீரமைக்கப்படும். இங்கு பொது மக்கள் அளித்த அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் கவுசிக், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், தொழில் அதிபர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மற்றும் மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தூத்தூர், வள்ளவிளை, குறம்பனை, வாணியக்குடி, குளச்சல், முட்டம் மீனவ கிராமங்களுக்கும் மத்திய மந்திரிகள் குழு சென்றது. அங்கும் மீனவர்களை சந்தித்து பேசினர்.

    தேங்காப்பட்டணம் துறைமுகம் வருவதற்காக மத்திய மந்திரிகள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் புறப்பட்டனர். அவர்களை வரவேற்று துறைமுகம் அழைத்து வருவதற்காக தனியார் படகுகள் கடலுக்குச் சென்றன. தேங்காப்பட்டணம் துறைமுகம் அருகே கடற்படை படகு வந்த போது காற்று அதிகமாக இருந்தது. அலையும் வேகமாக காணப்பட்டது. இதனால் கடற்படை படகில் இருந்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளால் துறைமுகத்திற்கு வரும் தனியார் படகில் ஏற முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் கடற்படை படகில் இருந்தபடி தவிப்புக்குள்ளானார்கள். இந்த சம்பவம் சிறிது நேரம அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலெக்டரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
    • கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்

    நாகர்கோவில் :

    கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், முஞ்சிறை ஒன்றிய காங்கிரஸ் கவுன்சி லர் பேபி ஜான், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் செய லாளர் சூசைராஜ், தூத்தூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஜின் உள்ளிட்டோர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம், மீன் பிடிதொழிலையே வாழ்வாதாரமாக கொண்ட மேற்கு கடற்கரை கிராமங்fளில் வாழும் மீனவ மக்களுக்காக அமைக்கப்பட் டது. இந்த துறைமுகத்தின் கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 3 கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி, ரூ.116 கோடி என மொத்தம் ரூ.253 கோடிக்கான அர சாணை பிறப்பித்து ஒப்பந்தம் கோரப்பட்டு துறைமுகம் மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென இந்த பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் கற்கள் கொட்டப்பட்டு துறைமுக மறு சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் தொடர்ந்து கடலில் போடப்பட்ட கற்கள் அனைத்தும் கடலுக்குள் அடித்து செல்லப்பட் டுள்ளது. இதனால் துறைமுக நுழைவாயில் வழியாக மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மீன வர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்கு துறை முக கட்டமைப்பு பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    தேங்காப்பட்டணம் துறைமுக மறுகட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக் கும் என்று கூறி பணிசுள் நடக்காமல் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடல் சீற்றம் அதிகமாக இல்லை.

    எனவே துறைமுக கட்டு மானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும். மீண்டும் மீன வர்கள் உயிரி ழப்பு ஏற்படாத வகையில் கட்டமைப்புகளை மேற் கொள்ள வேண்டும். இந்த பணிகளை காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். துறைமுக மறு சீரமைப்பு பணிக்காக கற்கள் பிரச்சினை ஏற்பட் டது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் துறைமுக கட்டுமான பணிக்கு கற்கள் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 42 மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக வெளியூர்களில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மது கடத்திக் கொண்டு வந்து மது விற்கப்படுவதாக கன்னியாகுமரி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் அனுமதி இல்லாமல் மது விற்றுக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் விற்பதற்காக மறைத்து வைத்திருந்த 42 மது பாட்டில்களை போலீசார் கண்டு பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து அந்த 42 மது பாட்டில்களையும் அவர்கள் மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் பெயர் சதீஷ்குமார் (வயது 38) என்பதும், நெல்லை மாவட்டம் திருக்கணங்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இன்னொருவர் பெயர் அய்யப்பன் (40) என்பதும், நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி
    • 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது

    கன்னியாகுமரி :

    மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    ஆனால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து விசைப்படகுமீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சில அனுமதி கேட்டு கடந்த 4 நாட்களாக சின்னமுட்டத் தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை யிட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்க வில்லை.

    இருப்பினும் சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்க செல்ல முடிவு செய்தனர்.அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    முதல் நாளான நேற்று ஒரே நாளில் 295 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த விசைப்ப டகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

    தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொ ழுவை, நெடுவா, முட்டி, கணவாய், நவரை, அயிலை போன்ற உயர் ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்த உயர் ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இதனால் 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது. தடை நீங்கி கடலுக்கு சென்றமுதல் நாளே ரூ.2கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம்

    நாகர்கோவில், ஜூன்.10-

    குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் இனையம் மண்டலங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய தேங்காபட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. ஓரளவு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட மணல் திட்டுக்களாலும், கடல் அலை சீற்றத்திலும் சிக்கி அடிக்கடி விபத்துக்கள் நடந்தன..

    இதனை தொடர்ந்து மீனவர்களின் நலன் கருதி, துறைமுக முகத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், பல முறை சட்டமன்றத்திலும், முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து மத்திய அரசு நிதியும் கோரப்பட்டது. அதன்பிறகு மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகள் பொறியாளர்கள் அளித்த திட்ட வரைபடத்தின் அடிப்படையில் தொடங்கபட்டு நடந்து வந்தது. ஆனால் இந்த பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக மீனவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது தொடர் முயற்சியின் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளுக்கு மூன்றாம் கட்டமாக, ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் பொறியாளர்கள் அளித்த திட்ட வரைபடத்தின் அடிப்படையில் நடந்து வந்தது.

    தற்போது வரை சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் பாறைகள் கொட்டப்பட்டு துறைமுக மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், கடலில் போடப்பட்ட கருங்கல்கள் அனைத்தும் கடல் சீற்றத்தினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். இதனால் துறைமுக மறு கட்டமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகும். இதனால் வரும் மாதங்களில் துறைமுக நுழைவாயில் வழியாக மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் பெரிய கருங்கற்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்காக பெரிய கருங்கற்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசும், மீன்வளத்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து துறைமுக மறுகட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து மீனவர்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அலைதடுப்பு சுவர் பணிக்கு தினசரி 40 லோடு கற்கள் கொண்டு வரப்படுகிறது.
    • இந்த பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் மீன்பிடி துறை முகம் உள்ளது.

    இப்பகுதியில் இருந்துகடலுக்கு செல்லும் மீனவர்கள் அடிக்கடி அலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன.எனவே இங்குள்ள அலைதடுப்பு சுவரை நீட்டித்து தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களின் கோரிக்கைப் படி தேங்காய்பட்டினம் பகுதியில் அலைதடுப்பு சுவர் நீட்டிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அரசு அறிவித்துள்ள முறைப்படிதான் நடை பெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு தேங்காய்பட்டினம் சென்றனர்.

    அங்கு நடந்த ஆய்வில் அலைன்மென்ட் சரிபார்க்க ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது, இது குறித்து தலைமை பொறியாளர் கூறும்போது, அலைதடுப்பு சுவர் பணிக்கு தினசரி 40 லோடு கற்கள் கொண்டு வரப்படுகிறது. இதனை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த பணிகள் அரசால் ஒப்பளித்தபடி தான் நடக்கிறது. இதனால் மீனவர்கள் கவலைப்பட தேவையில்லை, என்றார். மேலும் இந்த பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாகர்கோவில் மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறை முக திட்ட உபகோட்ட உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் மற்றும் உதவி செயற்பொறியா ளர்கள் சுடலையாண்டி, மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்கப்படும்.
    • கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதும், நாகூர் கீழப் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கைகள்.

    சட்டமன்றத்தில் இது குறித்து நான் பலமுறை பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சரிடமும் கோரிக்கை கடிதம் அளித்தேன்.

    நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 05-04-2023 அன்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

    இதற்காக நாகை தொகுதி மக்களின் சார்பில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித்தால் மீனவ மக்களுக்கு மிக பாதுகாப்பாக அது அமையும்
    • மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுக விரிவாக்க பணிகள் உட்பட பல்வேறு கோரிக்கை குறித்து முதல் வரை சந்தித்து குமரி மாவட்ட மக்கள் சார்பாக. விஜய்வசந்த் எம்.பி மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் துறைமுக விரிவாக்க பணிகள் நடந்து வருவதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித் தால் மீனவ மக்களுக்கு மிக பாதுகாப்பாக அது அமையும். அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

    குமரிமாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடுவதற்கு கேரள அரசுடன் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும்.

    வனத்துறை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து ரப்பர் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ரப்பர் மரங்களை வெட்டி மாற்றுவதற்கு கேரள அரசு கொண்டு வந்ததுபோல் சட்ட திருத்தம் வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள சிறார்களும், இளைஞர்களும் விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு அரங்கம் தேவை. மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் ஒரு தொழில்நுட்ப பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழையின் போது மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • மழைக்காலங்களில் கருவாடு காய வைப்பதற்கு தனி இடம் அமைத்து தரவேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரரா ஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் துறைமுக மீன்வளத்துறை வளாகத்தில் மீன்பிடி படகுகளுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.

    வடகிழக்கு பருவமழையின் போது மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பாதுகாப்பான முறையில் படகுகளை நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.முன்னதாக புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார்.

    இக்கூட்டத்தில் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் வடிகால் வசதி, மழைக்காலங்களில் கருவாடு காய வைப்பதற்கு தனி இடம் அமைத்து தரவேண்டும், மல்லிப்பட்டினம் பகுதிகளில் சாலைகள் சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஹபீப் முகமது வைத்தார்.

    சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 23 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • அதிகாரிகள் கண் துடைப்பிற்காக சாதாரண இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர் என குற்றம் சாட்டினார்கள்.

    கன்னியாகுமரி:

    தேங்காப்பட்டணம் மீன் பிடித்துறைமுகத்தில் தூத்தூர், இனயம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் 850 விசைப்படகுகள், ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட வள்ளங்கள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் மீன்பிடித் துறைமுகம் சரியான முறையில் கட்டமைப்பு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. காரணம் வருடத்தில் இரண்டுமுறை ஏற்படும் கடல் சீற்றத்தால் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் குவியல்கள் ஏற்படுவதால், மீனவர்களின் படகுகள் முகத்துவார பகுதியில் எழும்பும் கடலலையில் சிக்கி படகுகளும், வள்ளங்களும் கவிழ்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் கடந்த நான்காண்டுகளில் மட்டும் சுமார் 23 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆதலால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை மறுக்கட்டமைப்புடன் சீர் செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மீனவர்கள் துறைமுக முகத்துவாரத்தில் மண் அள்ளும் பணியை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி, முகத்து வாரத்தில் மண் அள்ளும் பணி துவங்கும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மாட்டோம் என சொல்லி நுழைவாயில் பகுதியில் கறுப்பு கொடி கட்டி அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகள் மீன் வாங்குவதற்கும், மீன் விற்பதற்கும் வரவில்லை.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 30 லட்சம் மதிப்பில் மணல் உறிஞ்சும் தற்காலிக இயந்திரம் நேற்று தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தது. கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் இருந்து அவசர தேவைக்காக இந்த இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ள தாக தெரிகிறது. உடனே இயந்திரத்தை பொருத்தும் பணியும் துவக்கபட்டது. எந்திரம் முழுவதும் பொருத்தி முடிந்த உடன் இரண்டு தினங்களில் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் உறிஞ்சி அகற்றும் பனி துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால் இந்த தற்காலிக மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வந்தது மீனவர்களை ஏமாற்றும் செயல் என மீனவர்களில் ஒரு தரப்பினர் பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காரணம் மணல் உறிஞ்ச ட்ரெட்ஜ்ஜர் என கூறப்படும் இயந்திரம் தான் பயன்படுத்துவது வழக்கம். இது நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்படும். ஆனால் அதிகாரிகள் கண் துடைப்பிற்காக சாதாரண இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர் என குற்றம் சாட்டினார்கள். மட்டுமின்றி, ட்ரெட்ஜ்ஜர் எந்திரத்தை கொண்டு வராவிட்டால் வரும் செவ்வாய் முதல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    அதேநேரம் குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரடி கென்னடி கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக ஒருசிலர் இந்த பிரச்சனையை தூண்டி விடுகின்றனர். அதிகாரிகள் அறிவித்த படி விரைவான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. அதையும் மீறி போராட்டம் நடத்துவது மீனவர்களை பாதிக்கும் செயல். துறைமுக கட்டுமான பணிகளிலும் முடக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த போராட்டத்துக்கு பெரும்பான்மை மீனவர் கள் எதிர்க்கின்றனர். குறிப்பாக மீன்பிடித் துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், தொழிலா ளர்கள் ஆதரவு இல்லை என கூறினார்.

    அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது.-

    11-ந்தேதி பூந்துறை மீனவர் இறப்பினை தொடர்ந்து நடந்த போராட்டத்தின் விளைவாக மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறு தியின் படி, அலை தடுப்பு சுவர் பணிகள் அடுத்த தினம் துவங்கப்பட்டது., மணல் அள்ளுவதற்காக குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கத்தில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ப்பட்டு தற்காலிக மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரெஜ்ஜர் எந்திரம் கொண்டு வர வேண்டும் என்றால் நாகபட்டணத்தில் இருந்து கொண்டு வர வேண்டும், அதற்கு அரசின் உத்தரவு மற்றும் அரசு நிதி குறைந்த அளவு 2 கோடி ஒதுக்க வேண்டும்.

    அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்து, அது தேங்காப்பட்டணம் வந்து சேர வேண்டும் என்றால் 3 மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அதனால்தான் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் ட்ரெஜ்ஜர் இயந்திரம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் விரைந்து நடந்து வருகிறது. மட்டுமின்றி துறைமுக பனி முடியும் போது நிரந்தர ட்ரெஜ்ஜர் எந்திரம் அமைக்க படும் என கூறினார்கள்.

    • காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர்.
    • தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    கன்னியாகுமரி, ஆக.12-

    தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    இதனை சீரமைக்க கோரி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து மறு சீரமைப்புக்காக ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது.

    இதற்கிடையில் கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் விபத்துகள் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்டு வந்தது. ஒரே நாளில் பல படகுகள் கவிழ்வதும், உடைந்து சேதமடைவதும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (வயது 48) என்ற மீனவர் பலியானார். இதை தொடர்ந்து பூத்துறை மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் போராட்டம் முடிவுக்கு வரும் வரையிலும் துறைமுகத்தில் மீன் இறக்குதல் உள்ளிட்ட எந்த பணியும் செய்வதில்லை எனவும், இனயம், தூத்துர் மண்டலத்தை சேர்ந்த 15 மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிப்பது எனவும், பெரு நிறுவனங்கள் உட்பட கடைகள் அனைத்தும் அடைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுடன் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று உடனடியாக துறைமுக பணி ஆரம்பிக்கப்படும் என மீன்வளத் துறை இணை இயக்குனர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் பணிகள் தொடங்க அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர்.

    காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    ×