search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மத்திய மந்திரிகள் ஆய்வு
    X

    தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மத்திய மந்திரிகள் ஆய்வு

    • மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
    • ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது

    கிள்ளியூர் :

    இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க சாகர் பரிக்கிரமா என்ற யாத்திரையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோரப் பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த யாத்திரை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை இன்று குமரி மாவட்டம் தேங்காபட்டணம் வந்தடைந்தது. இந்த குழுவில் மத்திய மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் தேங்காபட்டணத்தில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவும், மாயமான மீனவர்களை தேட வசதியாக ஹெலிகாப்டர் தளம், விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ், துறைமுக மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினர்.

    இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறிய தாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக தேங்கா பட்டணத்தில் மீனவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிபடி மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்படுத்தினார். மீனவர் மேம்பாட்டுக்காக சுமார் ரூ38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்தியா இன்று மீன் ஏற்றுமதியில் 4-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தேங்காபட்டணம் பிரச்சினை சம்மந்தமாக கமிட்டி அமைத்து துறைமுகம் சீரமைக்கப்படும். இங்கு பொது மக்கள் அளித்த அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் கவுசிக், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், தொழில் அதிபர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மற்றும் மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தூத்தூர், வள்ளவிளை, குறம்பனை, வாணியக்குடி, குளச்சல், முட்டம் மீனவ கிராமங்களுக்கும் மத்திய மந்திரிகள் குழு சென்றது. அங்கும் மீனவர்களை சந்தித்து பேசினர்.

    தேங்காப்பட்டணம் துறைமுகம் வருவதற்காக மத்திய மந்திரிகள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் புறப்பட்டனர். அவர்களை வரவேற்று துறைமுகம் அழைத்து வருவதற்காக தனியார் படகுகள் கடலுக்குச் சென்றன. தேங்காப்பட்டணம் துறைமுகம் அருகே கடற்படை படகு வந்த போது காற்று அதிகமாக இருந்தது. அலையும் வேகமாக காணப்பட்டது. இதனால் கடற்படை படகில் இருந்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளால் துறைமுகத்திற்கு வரும் தனியார் படகில் ஏற முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் கடற்படை படகில் இருந்தபடி தவிப்புக்குள்ளானார்கள். இந்த சம்பவம் சிறிது நேரம அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×