search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    9-ந் தேதி ஸ்டிரைக் அறிவிப்பு: அமைச்சருடன் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?
    X

    9-ந் தேதி ஸ்டிரைக் அறிவிப்பு: அமைச்சருடன் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×