search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி தந்தை-2 மகள்கள் பலி: பொதுமக்கள் மறியல்
    X

    தண்டவாளம் அருகே சிதறி கிடக்கும் பலியானவர்களின் உடல்கள்.

    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி தந்தை-2 மகள்கள் பலி: பொதுமக்கள் மறியல்

    • பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).

    மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.

    இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    Next Story
    ×