search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharapuram"

    • தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை, கூலி தொழிலாளி.
    • பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா்.

     தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை (வயது 23), கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகில் ராஜ் (60) என்ற முதியவா் வசித்து வருகிறாா்.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவா் வீட்டில் இல்லாதபோது மேற்கூரையைப் பிரித்து அவரது வீட்டுக்குள் நுழைந்த நாட்டுதுறை, பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா். இது குறித்து தாராபுரம் குற்றப் பிரிவில் ராஜ் புகாா் அளித்தாா்.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார்நாட்டுதுறையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • வீட்டில் திருடிய கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம், நெய்க்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகாா்த்திகேயன் (வயது 31). இவா் நெய்க்காரன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.இந்நிலையில், வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். நேற்று காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதேபோல நெய்க்காரன்பாளையத்தை அடுத்துள்ள புதூா் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் தங்கவேல் (44) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், புதூா் பிரிவு அடுத்துள்ள ஆலாம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சதீஷ்குமாா் (24) என்பவரது இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ. 67ஆயிரத்தை மா்ம நபா்கள் ஒரே இரவில் திருடிச் சென்றுள்ளனா்.

    இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளா்கள் புகாா் அளித்தனா்.வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயம், தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தாராபுரத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே அந்த கும்பல் காங்கயம், தாராபுரம் பகுதியில் தங்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. எனவே கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காங்கயம், தாராபுரம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடி சென்றனர்.
    • பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

    தாராபுரம் :

    தாராபுரம் எல்லிஸ் நகர் டி.எஸ். எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 67), பால் வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் கார்த்திக். இன்று காலை விஜயன் பால் வியாபாரம் செய்ய வீட்டிலிருந்து சென்று விட்டார். விஜயலட்சுமி உழவர் சந்தைக்கும் கார்த்திகேயன் வாக்கிங் சென்று விட்டனர்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அரை பவுன் கம்மல் மற்றும் 60 கிராம் மதிப்புள்ள வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் அதே பகுதி பத்மாவதி நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கிரில் கேட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

    தாராபுரம் ஆர் .கே .ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மனைவி தேவிகா . இவர்களது வீட்டில் கதவை உடைக்கும் முயன்ற போது தேவிகா கையை வைத்து தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த கொள்ளையன் கதவை உடைக்காமல் அவரது கையை கத்தியால் கீறி விட்டு தப்பி ஓடி விட்டான். தாராபுரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

    • ரபிதீன் பெங்களூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
    • வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளாா்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் ரபிதீன் (வயது 45). இவா் பெங்களூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரபிதீன் கொளத்துப்பாளையம் வந்துள்ளாா்.

    பின்னா் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளாா். இதனிடையே அவரது தம்பி பாரூக் ரபிதீன் வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இது தொடா்பாக தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.அப்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா, பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர் , ஐந்து சாலை சந்திப்பு மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆறு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பிறகு தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 11 பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முத்துவல்லி மற்றும் தலைவர்களிடத்தில் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முஸ்லிம் ஜமாத்தாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார். அதற்கு ஜமாத்தாரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சுல்தானிய பள்ளிவாசல், மரக்கடை பள்ளிவாசல், கண்ணன் நகர் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் போது தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி தாராபுரம் வட்டாரத்திற்குட்பட்ட குண்டடம், மூலனூர், தாராபுரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதியில் உள்ள குக்கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் 31-ந் தேதி காலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அன்று அதிகாலை முதல் 10 மணி வரை விநாயகர் சிலைக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி மதியம் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அமராவதி ரவுண்டானாவில் வெளியூரிலிருந்து வரும் விநாயகர் சிலைகள் ஒன்று திரண்டு கடைவீதி, பூக்கடை வீதி வழியாக என்.என்.பேட்டை சென்று பழைய அமராவதி ஆற்று பாலம் அருகே ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    விநாயகர் சிலை வேண்டுவோர் தாராபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
    • 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

    தாராபுரம் :

    விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில், பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா, பெரியகடை வீதி, டி.எஸ்.காா்னா் 5 சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.இதைத் தொடா்ந்து, தாராபுரம் சுற்றுவட்டார 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • கடந்த மாதம் ஒன்றிய செயலாளர் பதவிக்காலம் நிறைவு பெற்றது.
    • தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது

    தாராபுரம் :

    தி.மு.க., அமைப்பு தேர்தலில் தாராபுரம் ஒன்றிய செயலாளராக கடந்த 5 ஆண்டு காலமாக எஸ்.வி.செந்தில்குமார் பணியாற்றி வந்தார்.

    கடந்த மாதம் ஒன்றிய செயலாளர் பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது .இதில் தாராபுரம் ஒன்றியத்தில்தி.மு.க. செயலாளராக ஏற்கனவே பணியாற்றி வந்த எஸ்.வி.செந்தில் குமாரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி மீண்டும் ஒன்றிய செயலாளராக வெற்றி பெற்றார்.

    இதையடுத்து நேற்று திருப்பூர் வந்த தி.மு.க. தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவரின் பணி சிறக்க வேண்டுமென எஸ்.வி. செந்தில்குமாருக்கு முதல் -அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

    • குடித்துவிட்டு 2-வது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
    • தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

    தாராபுரம் :

    தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது42) தொழிலாளி, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறினார். அப்போது வேலைக்கு சென்ற இடத்தில் 2-வதாக ராஜிவை திருமணம் செய்து கொண்டு மகன், மகளுடன் வசித்து வந்தார். சிவகுமார் தினசரி குடித்துவிட்டு வந்து 2-வது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று மாலையில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

    அதிர்ச்சி அடைந்த மனைவி கதவு சாவித் துவாரம் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கியுள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயங்கி இருந்தார். சிறிது நேரத்தில் சிவகுமார் இறந்துவிட்டார் இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சின்னப்புத்தூா் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • பண்டைய மக்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    தாராபுரம் :

    திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பொறியாளா் சு.ரவிகுமாா், க.பொன்னுசாமி ஆகியோா் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூா் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.இந்த ஆய்வில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனா்.

    இது குறித்து பொறியாளா் ரவிகுமாா் கூறியதாவது: - பண்டைய தமிழகத்தில் வீரம் காட்டிப் போா் புரிந்து மாண்ட மறத்தமிழா்கள் நினைவாக நடுகற்கள் எடுத்து அவற்றுக்குப் பூச்சூடிப் படையலிட்டு வழிபட்ட மரபை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு வழிபட்டால் மாண்ட வீரா்களின் ஆன்மா தமக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் பண்டைய மக்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நமது சங்க இலக்கியங்கள் இந்த நடுகற்கள் நடும் இடங்களாக நீா்நிலைகள், பண்டையப் பெருவழிகள், ஊா் மன்றம் மற்றும் சாலைகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றைச் சுட்டுகின்றன.

    இந்த கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது 50 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலமும், 30 செ.மீ. கனமும் உள்ள இந்த நடுகல் இங்குள்ள ஓா் ஆல மரத்துக்கு கீழ் உள்ளது. இதில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு மாவீரா்களின் ஓவியத்தில் முதல் மாவீரன் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ளாா். இரண்டாவது மாவீரன் தன் வலது கையில் ஈட்டியும், இடது கையில் கேடயமும் வைத்துச் சற்றே சாய்ந்தவாறு உள்ளாா். இந்த இரு வீரா்களின் அள்ளி முடித்த குடுமியும் மேல்நோக்கி உள்ளன. தோள் வரை தொங்கும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளனா். கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி போன்ற அணிகலன்களும், கைகளில் தோள்வளை மற்றும் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளனா்.

    இடையில் மட்டும் மடிந்த மிகவும் நோ்த்தியான ஆடை அணிந்துள்ள இந்த மாவீரா்கள் தங்கள் கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளனா். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்த நடுகல்லின் சிலை அமைப்பை வைத்துப் பாா்க்கும்போது இது சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். மேலும், இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் மற்றும் இரும்புக்கசடுகள் மூலம் சின்னப்புத்தூா் கிராம மக்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளா்ப்பு, வேளாண்மையுடன் வணிகமும் செய்துவந்ததை அறியமுடிகிறது என்றாா்.

    • டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பிட உள்ளன.

    1. டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர் மரபினர். முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. டூல் அண்டுடை மேக்கர் தொழிற் பிரிவு (பிடி. ஜே&எப்) கல்வித் தகுதி ஆகும்.

    2. வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. வயர்மேன் தொழிற்பிரிவு கல்வித் தகுதி ஆகும்.

    என்.டி.சி. ஆக இருப்பின் 3 வருட தொழிற்சாலை அனுபவம், என்.ஏ.சி. ஆக இருப்பின் இரண்டு வருட தொழிற்சாலை அனுபவமும் அதே தொழிற் பிரிவில் இருக்க வேண்டும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ. முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ. முடித்தவர்கள் டிப்ளமா ,டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம்-638 657 என்ற முகவரிக்கு வரும் 30.8.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இத்தகவலை தாராபரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் தெரிவித்துள்ளார்.  

    ×