search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK"

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சுயேட்சையாக போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை சுவற்றில் ஒட்டும் பணி நடந்தது.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,

    வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ வந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்படும் என்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் நாளை முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், அதிமுக தேர்தல் பத்திரம் மூல ரூ.6.05 கோடி நன்கொடை வாங்கியுள்ளது. அதில், 4 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.

    அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார். அதில், அதிமுக ஆட்சி நடைபெற்ற 2019- ம் ஆண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் நிதி அளித்தது தெரிய வந்துள்ளது.

    திமுக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பில் திமுகவுக்கு ரூ.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடியும், சந்திரசேகர் ராவ்-ன் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ரூ.1,322 கோடியும் நிதி பெற்றுள்ளது

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக ரூ.656 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது

    • தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக தே.மு.தி.க. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று அ.தி.மு.க. குழுவினர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் கடந்த 6-ந் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று பேச்சு நடத்தினார்கள். இப்படி 2 கட்ட பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறி நீடித்துக் கொண்டே செல்கிறது. 10 நாட்களாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நேரடியாக நடைபெறாத நிலையில் இரு தரப்பினரும் ரகசியமாக சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிற 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

    இது தொடர்பாக நேற்றே இரு தரப்பிலும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இன்று நேரில் சந்தித்து பேசி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க. தரப்பில் இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். எனவே இன்று தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்று நம்புகிறோம் என்றார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தே.மு.தி.க.வும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

    அதே நேரத்தில் மேல்சபை எம்.பி. பதவி கண்டிப்பாக வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதில் தான் இழுபறி நீடிக்கிறது.

    இதனால் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவி கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாக மாறி உள்ளது.

    • அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.

    இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

    பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.
    • கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம் பெற்ற கட்சிகளுக்கு புதுச்சேரியில் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் அவ்வளவாக இல்லை.

    கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெறும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கூட்டணியின்றி தனித்து விடப்பட்ட புதுச்சேரி அ.தி.மு.க.வினர் தவித்து வருகின்றனர்.

    • இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்
    • முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை

    நேற்று சென்னையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்" எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.

    அப்போது, "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்களை கைப்பற்றுகிறார்கள் என்றால் அதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் இப்படி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.

    தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம் சாட்டுகிறோம். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    • 2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.
    • வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.

    இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். 2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.

    ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் நிலவியது.

    இருப்பினும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடை பெற்று வந்துள்ளது. 7 எம்.பி. தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க. கேட்டுள்ளது.

    இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3-வது கட்டமாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதன் பின்னர் 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்து போட உள்ளனர்.

    பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
    • மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    மதுரை:

    2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏராளமான சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது ஆதரவினை அளித்த போதிலும் பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இருந்தபோதிலும் வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜெயல லிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி. மு.க. தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தனித்துவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். 10 தொகுதிகள் வரை பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை வைத்து தான் தனக்காக பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி அதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது தலைமையிலான அ.தி.மு.க.வின் பயணத்தை இந்த தேர்தலில் வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறார்.

    அதேவேளையில், தென் மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா. ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார். பா.ஜ.க.வுடன் அமைத்துள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அவ்வாறு நிறுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அந்த தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மகேந்திரனை களமிறக்க முடிவு செய்து அதற்கான வேலை களையும் தொடங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் கொடுக்கும் 'அடி' தங்களுடன் மீண்டும் மோதக்கூடாது என்பதை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ரவீந்திரநாத்தை தோற்கடித்து அதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வரும் அ.தி.மு.க. அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது.

    இதுபோன்ற காரணங்கள் அறிந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றி தான் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மேலிடத்திலும் இதுபற்றி ஆலோசித்து வருகிறார்.

    மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் பேராதரவுடன் மற்ற சமு தாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற் சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி களமிறங்குவதால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் கணித்துள்ளார்.

    அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அவரது ஆதரவாளர்களும் வரவேற்று உள்ளனர்.

    • அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், யாருடன் கூட்டணி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
    • 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

    கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு பொன்னாடை அணிவித்து கூட்டணியை உறுதி செய்தனர்.

    இதன் பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்தினர். இதன் பின்னர் பேட்டி அளித்த அவர்கள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், யாருடன் கூட்டணி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    இதனால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா மறுத்துள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் அது தொடர்பான தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க.வுடன் 3-வது கட்ட பேச்சு வார்த்தையை நடத்த தே.மு.தி.க. தயாராகி வருகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க.வினர் கூறும் போது, அ.தி.மு.க.வின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். அவர்கள் கூப்பிட்டதும் 3-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

    3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையின் போது அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    • வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது.
    • கலைஞர் அருங்காட்சியகத்துக்கு சென்ற வடிவேலு அதனை புகழ்ந்து பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்தார். தி.மு.க. கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் விஜயகாந்த், அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். இந்த கூட்டணி வெற்றியும் பெற்றது.

    வடிவேலுவின் பிரசாரம் எடுபடாமல் போனது. தி.மு.க. கூட்டணி தோல்வியையே தழுவியது. இதன் பின்னர் வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது. "இனி எனக்கு அரசியலே வேண்டாம்" என்று வடி வேலுவும் ஒதுங்கினார்.

    அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் வடிவேலு காமெடியாகவே பதில் அளித்து விட்டு நழுவுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் வடிவேலு சமீப காலமாகவே தி.மு.க. வுடன் நெருக்கமாக உள்ளார். கருணாநிதி தொடர் பான நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மெரினாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்துக்கு சென்ற வடிவேலு அதனை புகழ்ந்து பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இதைத் தொடர்ந்து வடிவேலு 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அவருடன் பேசி வருவதாகவும் தெரிகிறது.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் களத்தில் வடிவேலு தி.மு.க.வை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது போன்று வடிவேலு பிரசாரத்தில் ஈடுபடும் பட்சத்தில் மத்திய அரசையும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை விமர்சித்தும் வடிவேலு பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதிகள் கேட்டுள்ளன.
    • தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதிகள் கேட்டுள்ளன.

    ஆனால் தி.மு.க. தரப்பில் தமிழகத்தில் 5 புதுவையில் ஒன்று என 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறிவிட்டனர். அந்த எண்ணிக்கையை உயர்த்தி வழங்கும்படி காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் வரவில்லை. இது காங்கிரஸ் நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடகூடாது என்ற மனநிலையில் இருக்கும் தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும், 9 தொகுதிகள் முடிவாகி விட்டது என்றெல்லாம் தகவல்களை கசிய விடுகிறார்கள்.

    ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    டெல்லி மேலிடத்துடன் தி.மு.க. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் சென்று பேச்சை தொடரவில்லை. இதனால் காங்கிரஸ் மேலிடமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காக்கின்றன.

    இந்நிலையில் இந்த தேர்தலில் மாற்றி யோசிப்போம். அ.தி.மு.க. தரப்பில் நமது கூட்டணியை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். மறைமுகமாக காங்கிரசுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க. பக்கம் போகலாம் என்ற கருத்தை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் முன் வைத்துள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு சென்றால் 16 தொகுதிகள் வரை கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் குறைவது மட்டுமல்ல. சில தொகுதிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் கட்சிக்குள்ளும் பிரச்சினை வரும். எனவே கூட்டணியை மாற்றுவதே சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    இதே போல்தான் 2014 தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தை சிக்கல் கடைசி வரை எந்த தெளிவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கடைசியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தது. அதே நிலை இந்த தேர்தலிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மேலிடத்துக்கு தகவல்கள் அனுப்பி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க.வுடன் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவரை அமைதியாக இருக்கவும் அதன் பிறகு தி.மு.க. எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றவும் காங்கிரஸ் யோசித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ×