search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனியில் நெருக்கடி முற்றுவதால் மதுரையை மகனுக்கு பெற்றுத்தர ஓ.பன்னீர்செல்வம் திட்டம்
    X

    தேனியில் நெருக்கடி முற்றுவதால் மதுரையை மகனுக்கு பெற்றுத்தர ஓ.பன்னீர்செல்வம் திட்டம்

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
    • மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    மதுரை:

    2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏராளமான சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது ஆதரவினை அளித்த போதிலும் பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இருந்தபோதிலும் வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜெயல லிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி. மு.க. தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தனித்துவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். 10 தொகுதிகள் வரை பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை வைத்து தான் தனக்காக பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி அதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது தலைமையிலான அ.தி.மு.க.வின் பயணத்தை இந்த தேர்தலில் வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறார்.

    அதேவேளையில், தென் மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா. ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார். பா.ஜ.க.வுடன் அமைத்துள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அவ்வாறு நிறுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அந்த தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மகேந்திரனை களமிறக்க முடிவு செய்து அதற்கான வேலை களையும் தொடங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் கொடுக்கும் 'அடி' தங்களுடன் மீண்டும் மோதக்கூடாது என்பதை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ரவீந்திரநாத்தை தோற்கடித்து அதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வரும் அ.தி.மு.க. அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது.

    இதுபோன்ற காரணங்கள் அறிந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றி தான் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மேலிடத்திலும் இதுபற்றி ஆலோசித்து வருகிறார்.

    மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் பேராதரவுடன் மற்ற சமு தாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற் சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி களமிறங்குவதால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் கணித்துள்ளார்.

    அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அவரது ஆதரவாளர்களும் வரவேற்று உள்ளனர்.

    Next Story
    ×