என் மலர்
நீங்கள் தேடியது "Tamilnadu-election2024"
- தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.
- 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.
இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.
கரூர் தொகுதி ஜோதிமணிக்கு மீண்டும் ஒதுக்கப்பட உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.
திருச்சி தொகுதியை ம.தி.மு.க. விற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.
தி.மு.க. தரப்பில் இருந்து தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரசுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் மேலிட தலைவர்களிடம் இருந்து இசைவு வராததால் செல்வப்பெருந்தகை பேச்சு வார்த்தைக்கு போகாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நாளை மும்பையில் நடக்கும் காங்கிரஸ் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் செல்கிறார்கள். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திங்கட் கிழமை இறுதி செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்து இடுகிறார்.
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2 தொகுதிகள் மட்டுமே மாற வாய்ப்பு உள்ளது.
எனவே 18-ந்தேதி காங்கிரஸ், ம.தி.மு.க.விற்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
- அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.
இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.
பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
- 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.
மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.
திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.
நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்
நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.
மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.
கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்
திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்
சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.
உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.
இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த பட்டியலை மத்திய தேர்தல் குழு பரிசீலிக்கும். நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
- பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
- நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.
கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.
பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.
- அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
- தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கோவை:
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார்.
இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.
தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் வருகிறது. இதனால் தங்களுக்கு சாதமாக இருக்கும் என கருதி லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவும் களமிற ங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.
- தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
- இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
விழுப்புரம்:
தமிழகம்-புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி தேர்தல் பரப்புரைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வர உள்ளார். அவர் பேசுகிற பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட வந்திருந்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.என்கிற கட்சி 5, 6 ஆக உடைந்து போய் உள்ளது. இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் பிரசாரம் செய்ய உள்ளார் .
இவ்வாறு அவர் கூறினார்.
- தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
- பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
- தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.
அதற்கேற்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். இதனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூலமாக கமல் கட்சிக்கு குறிப்பிட்ட இடங்கள் கிடைக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைகூட கமல்ஹாசனுக்கு கொடுக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டு கொடுக்கவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போதே கமல்ஹாசனுக்கும் சேர்த்து தொகுதிகளை பேசி இருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்பதே அரசியல் நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இப்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியே காரணம் என்கிற எண்ணம் அக்கட்சியினர் மத்தியில் பரவலாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இழு பறிக்கு பிறகு கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
வருகிற 29-ந்தேதி கமல்ஹாசன் தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அன்று பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் மறுநாள் (30-ந்தேதி) சேலத்திலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஏப்ரல் 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் 3-ந்தேதி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் பிரசாரம் செய்கிறார். அன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பேசும் அவர் மறுநாளும் (7-ந் தேதி) சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலேயே பிரசாரம் செய்கிறார்.
இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மதுரையில் 10-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல் 11-ந் தேதி தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ஏப்ரல் 14-ந்தேதி திருப்பூரிலும், 15-ந்தேதி கோவையிலும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.
இறுதி நாளான ஏப்ரல் 16-ந்தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல்ஹாசன் அத்துடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்கள். தற்போது அவர்களது தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசன் தனது சுற்றுபயண திட்டத்தை வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய மறுத்திருப்பது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- சதர்ன் கிரவுன் அரங்கத்தில் பா.ம.க. நாளை நிகழ்ச்சி.
- ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
சென்னை:
பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
- டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அகில இந்திய அளவில் மோடி வழங்கக்கூடிய வாக்குறுதிகள், தமிழ்நாடு சம்பந்தமான வாக்குறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் வருகிறது. பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிக்கு தனி வாக்குறுதி வழங்கப்படும்.
கேள்வி:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளார். ஆனால் தமிழகத்தில் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை எழுப்புகிறது.
பதில்-டாக்டர் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழலுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து உள்ளார். மேலும் கட்சிக்கு வந்தவுடன் சீட்டு வாங்கவில்லை. தனி அங்கீகாரத்துடன் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதில் எப்படி தவறு சொல்ல முடியும். மேலும் பா.ம.க.வில் தனி திறமை உள்ள வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.
மேலும் சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மேயரான பட்டியலின பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவரை வெற்றி பெற செய்து உயர் பதவிக்கு கொண்டுவர போட்டியிட வைத்துள்ளோம். ஆனால் தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. இதுதான் சாதனையாகும். இதன் காரணமாக தான் கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க. தள்ளிவிட்டு உள்ளனர். ஆகையால் தங்கர் பச்சானுக்கு போட்டி யாரும் இல்லை.
கே-பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிக்கு அவர்கள் விருப்பப்படும் சின்னம் வழங்கப்பட உள்ளதா குற்றச்சாட்டு உள்ளதே?
ப:-தேர்தல் ஆணையத்திற்கு தனியாக விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே பதிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் யார் முன்னதாக சின்னம் கேட்டு பதிவு செய்கின்றார்களோ அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முதலில் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். மேலும் இவர்கள் கேட்பதற்கு முன்பாக யாரும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் நிற்கக்கூடிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவாகும். தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றங்கள் தெளிவான விளக்கம் மற்றும் உத்தரவு வழங்கி உள்ளனர்.
தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் புது புது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்து விட்டால் களத்தில் உறவினர்கள், அண்ணன், தம்பி என்று பார்க்கக்கூடாது. இங்கு நிற்கக்கூடிய தங்கர் பச்சான் பலமான வேட்பாளராக உள்ளார். மேலும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிற்க வைத்துள்ளனர். நான் ஐ.பி.எஸ். ஆக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கினேன். தற்போது அதனுடைய மதிப்பு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது. நான் தேர்தலில் நிற்பது நல்ல அரசியலுக்காகவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றேன். மேலும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளேன். அங்குள்ளவர்களிடம் சவால் விட்டு உள்ளேன். ஆனால் மற்ற கட்சியினர் இதனை சொல்ல தயாராக உள்ளனரா? நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது.
- பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ராசி இல்லாதவர், அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்சனை தீராது.
எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.
தற்போது பா.ம.க. கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும்வரை அவரை விடாது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரையே பார்க்க முடியும். மறைந்த விஜய காந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த தி.மு.க.வுக்கு தான் மனசாட்சி உள்ள தே.மு.தி.க.வினர் ஆதரவு கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரத்தில் அவர் பேசுகையில், பெண்களுக்காக தி.மு.க. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பாக மகாலட்சுமி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்கள் வாழ்வில் வளம் சேர்க்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரத்துக்கு நேரம்நிறம் மாறும் பச்சோந்தி ஆவார். அவர் எல்லோருக்கும் துரோகம் செய்தவர். மோடி தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டுக்கு வந்து கூளை கும்பிடு போடுவார் அவரை நம்பா தீர்கள் என்றார்.






