search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்- திருவள்ளூர் தொகுதிக்கு மல்லு கட்டும் 6 பேர்
    X

    பாராளுமன்ற தேர்தல்- திருவள்ளூர் தொகுதிக்கு மல்லு கட்டும் 6 பேர்

    • விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
    • 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.

    மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.

    திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்

    நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.

    மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்

    திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.

    உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    Next Story
    ×