search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Police"

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் பகுதியில் கண்காணிப்பு மையம் திறக்க பட்டது.
    • போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்டது.

    சீர்காழி:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் மூன்று சாலை சந்திப்பில் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் ஓலிப்பெருக்கியுடன் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    விழாவிற்கு போக்குவரத்து காவல் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமை வகித்தார்.

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பங்கேற்று கண்காணிப்பு மையத்தினை திறந்து வைத்தார்.

    இதில் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.

    • பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது.
    • கயிறு கட்டிய இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பழனி:

    பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் மாலைநேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஆர்.எப். ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை யோர ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆர்.எப். ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த கயிறு கட்டி இடம் கொடுக்க ப்பட்டது. அந்த இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கடந்து ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூரின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை.
    • போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சந்திப்புகளில் நின்று கொண்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, வேகமாக செல்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு அபராதம் வசூலிக்கின்றனர்.

    வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்துகின்றனர்.

    போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. அவர்களிடம் 'கூகுள் பே' மூலம் பணத்தை செலுத்துமாறு போலீசார் வசூலித்து வருகின்றனர்.

    ஆனால் அதற்குரிய ரசீது வழங்குவதில்லை. அந்த பணத்தை போலீசார் தங்களது உறவினர்களின் 'கூகுள் பே' செல்போன் நம்பரில் பெற்று மோசடி செய்வது தற்போது அம்பலமாகியுள்ளது.

    சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மே மாதம் 9-ந்தேதி தனது குடும்பத்துடன் காரில் புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னலை மீறிவிட்டதாக அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கூகுள் பே மூலம் ரூ.500 வசூலித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படவில்லை

    இதனால் சந்தேகம் அடைந்த முரளிதரன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட கூகுள் பே எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து போலீஸ்காரர் வசூலித்த அபராத பணம் தனிப்பட்ட நபருக்கு சென்றது தெரியவந்தது.

    அந்த போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான புதுவை சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    இதே போல் மேலும் பல சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் சிலர் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பணம் வசூலித்த போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    • ஓட்டிகளுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகம், விலையில்லா பெட்ரோல், வெள்ளி நாணயம் ஆகியவற்றை வழங்கி பாராட்டி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.
    • விபத்தில்லா தஞ்சை மாநகரத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நூதன முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து காவல்பிரிவு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாகவும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் , அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்துபோலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து பிரிவு பெண் காவலர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த பெண்களை தடுத்து நிறுத்தி சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து வந்தமைக்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண சேலைகளை வழங்கி பாராட்டினார்கள்.

    அப்போது போக்குவரத்து இன்ஸ்பெக்ர் ரவிச்சந்திரன், பேசும்போது விபத்தில்லா தஞ்சை மாநகரத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் , நூதன முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்து வருபவர்கள், நான்கு சக்கர வாகனங்கள் இயக்கும்போது சீட்பெல்ட் அணிபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகம், விலையில்லா பெட்ரோல், வெள்ளி நாணயம் ஆகியவற்றை வழங்கி பாராட்டி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இம்முறை தலைகவசம் அணிந்து வந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் தஞ்சை போக்குவரத்து காவல் பிரிவு பெண் காவலர்கள் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண சேலைகளை ஊக்கப்பரிசாக வழங்கி பாராட்டியுள்ளோம்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் 

    • மோட்டார் சைக்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டி இனிப்பு வழங்கினார்.
    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி மோட்டார் சைக்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி இனிப்பு வழங்கினார். தொடர்ந்துஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கார் ஓட்டும் டிரைவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கார்களை ஓட்ட வேண்டும். சிக்னல்களில் நின்று பார்த்து செல்ல வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. இருசக்கர வாகனங்களில் 2 பேர்களுக்கு மேல் செல்லக்கூடாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, சிவக்குமார், ரமேஷ், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
    • போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது.
    • பணியில் உள்ள போலீசாருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப ட்டது. இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் திருநாவு க்கரசு கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால், வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய பணியில் உள்ள போலீசா ருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வை தடுக்கும் வகையில் அவர்களுக்கு காலை,மாலை, இரு வேளைகளிலும் மோர் மற்றும் பழச்சாறு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில்,பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா அறிவுறுத்தலின்படி போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப டுகிறது. தினமும் காலை 11 மணிக்கு மோர் அல்லது பழச்சாறு, அதேபோல மாலை 3 மணிக்கு பழச்சாறு அல்லது மோர் வழங்கப்படு கிறது.இந்த மோர் வழங்கும் பணி மே மாதம் வெப்பம் தணியும் வரை கொடுக்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வெயிலில் நின்று போக்குவரது காவல் துறையிருக்கு இயற்கை குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
    • போலீசாருக்கு தர்பூசணி பழச்சாறு நீர்மோர் ஆகியவற்றை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், உடல் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை காலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் திட்டத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகே நடைபெற்றது.

    தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போக்குவரத்து காவலர்கள் அனைவருக்கும் தர்பூசணி பழச்சாறு , கிர்ணி பழச்சாறு , நீர்மோர் ஆகியவற்றை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் .

    அப்போது அவர் பேசுகையில், கடும் வெயில் காலங்களில் நகரின் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போக்குவரத்து காவலர்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கோடை காலம் முழுவதும் இரசாயன குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை குளிர்பானங்களான ஆப்பிள் பழச்சாறு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி கிர்ணி, எலுமிச்சை, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, தர்பூசணி பழச்சாறு, கிர்ணி பழச்சாறுகள், இளநீர், நீர்மோர் உள்ளிட்டவை கோடை காலம் முடியும் வரை தினமும் சுழற்சி முறையில் தஞ்சை நகர போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்படும் என்றார் . இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளி ட்டோர் செய்திருந்தனர்.  

    அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

    எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

    அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    ×