search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள்"

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி டோல்கேட் சந்திப்பு பகுதியில், போலீஸ்காரர் ராஜ சேகர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அப்பகுதி மீன் கடை அருகில் 2 திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    போலீஸ்காரர் ராஜ சேகர். தகவல் அறிந்து அங்கே சென்று இருவரையும் விசாரித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் கல்லாலும் தாக்க முயன்றனர். அந்த நேரத்தில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 திருநங்கைகளையும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்ட திருநங்கைகள் தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி தப்பி சென்று விட்டனர். திருநங்கைகள் தாக்கியதில் காயம்அடைந்த போலீஸ்காரர் ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
    • ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எல்சால்வடார்:

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

    72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

    மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

    உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.

    இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

    • ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும்.
    • அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ 1000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத பலர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதற்கிடையே திருநங்கைகள் பலரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் திருநங்கைகள் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் உள்ள திருநங்கை விழிகள் அமைப்பு சென்னை மாவட்ட கலெக்டர் ராஸ்மி சித்தார்த்தை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியான துர்கா ஸ்ரீ இதுதொடர்பாக கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும். திருநங்கைகள் பலர் தற்போது பலரிடமும் கையேந்தி காசு வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் திருநங்கைகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 4000 திருநங்கைகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டுள்ளோம். அவரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார்.

    சென்னை தண்டையார்பேட்டையில் 688 திருநங்கைகள் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 13 பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைத்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 21 வயதுக்கும் குறைவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    திருநங்கைகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் துர்க்கா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது திருநங்கைகள் உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தாலேயே பொது இடங்களில் கையேந்துவது. பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இன்று திருநங்கைகள் பலர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் மூலம் அனைத்து திருநங்கைகளும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் அதற்காகவே எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கைகள் கூறும்போது, இ சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கும்போது ஆண், பெண் என்கிற பகுதி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதற்கு எங்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது மூன்றாம் பாலினத்தவர் என்ற பகுதியும் இருப்பதாக கூறியுள்ளனர்.

    • திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
    • தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அதன்படி நர்சிங் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் ஒரு இடமும், ஜெனரல் நர்சிங் படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியே செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு. செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் அவர் பேசியாவது.-

    விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள 274 திருநங்கை களில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 2021 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் சுயதொழில் மானியமும், தலா ரூ.4 ஆயிரம் வீதம் 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கை களுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கை களின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதி யத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கை களாகும். எனவே, திருநங்கை கள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, நங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் டவுன் போலீஸ் சப்- டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக சில திருநங்கை கள் குற்ற செயல்களிலும், சிலா் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து அதிகரித்தது.

    இதனை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். இதன்பேரில் ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். பயிற்சி ஏ.எஸ்.பி. ஷ ஹ்னாஸ் முன்னிலை வகி த்தார். இதில் திருநங்கைகள் சிலர் குற்ற செயல்களிலும், சட்ட விரோத செய ல்களிலும் ஈடுபடுகின்றனர். இனி திருநங்கைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தி னா்.

    மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அசோக், ஒருங்கி ணைப்பாளர் சந்தாதேவி ஆகியோர் பங்கேற்று திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து போலீசார் திருநங்கைகளிடம் அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண ப்படும் என உறுதியளி த்தனா்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, சண்முகம் மற்றும் திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • யாராவது என்னை போடா வாடா என்று கூப்பிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்னொரு முறை கூப்பிடு என்று திரும்பத் திரும்ப கூப்பிட சொல்வேன்.
    • ஹார்மோன் மாற்றத்திற்காக அதற்குரிய ஊசியை ரத்தப் பரிசோதனை செய்து எடுத்துக் கொண்டு வருகிறேன்.

    சமூகத்தில் ஆணாகப் பிறந்து பாலினங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள்.

    பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்கள் திருநம்பிகள்.

    திருநங்கைகள் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. அப்படி தமிழகத்தில் சுமார் 2000 திருநம்பிகள் உள்ளனர். சென்னையில் 200-ல் இருந்து 250 வரை திருநம்பிகள் உள்ளனர். போலீசாக, வக்கீலாக, சர்வேயர் ஆக, சுங்க இலாகா, என்ஜினீயர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நாங்களாக மாறவில்லை. எங்கள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே எங்களுக்குள் இந்த ஹார்மோன் வளரத் தொடங்கிவிட்டது. சமூகமும் பெற்றோரும் எங்களை ஒதுக்குவதால் நாங்கள் தனிமையில் தவிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்கின்றனர்.

    இப்படி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சென்னையைச் சேர்ந்த திருநம்பி கூறியதாவது:-

    எனது தற்போதைய பெயர் அருண் கார்த்திக் (வயது 28) சொந்த ஊர் மதுரை. நான் என்ஜினீயராக அம்பத்தூரில் ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். நான் பெண்ணாக பிறந்திருந்தாலும் சின்ன வயதிலிருந்தே பையன் போலவே எனக்குள் எண்ணம் உருவானது. ஒரு கட்டத்தில் பையனை பார்த்தால் இவன் எவ்வளவு சுதந்திரமாக அலைகிறான் முடியை எவ்வளவு அழகாக ஸ்டைலாக கட் பண்ணி உள்ளான் என்று பொறாமையாக இருக்கும். பெண்களைப் பார்த்தால் எனக்கு அவர்கள் லைப் பார்ட்னர் ஆகத்தான் தெரியும். மேக்கப் கூட பிடிக்காது. சுடிதார் போட பிடிக்காது. சேலை கட்ட பிடிக்காது. பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு ஒரு இளைஞனாக ஜாலியாக சுற்றித் திரியத்தான் ஆசையாக இருந்தது.

    எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். வயதுக்கு வந்ததும் சடங்கு சம்பிரதாயம் செய்த போது நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அப்படி இப்படி என்று சொல்லி ஒரு மணி நேரம் கூட என்னால் அதில் இருக்க முடியவில்லை. என்னை அறியாமலேயே அந்த சமயத்தில் கோபம் கோபமாய் வந்தது. தூக்கம் இல்லாமல் தவித்தேன்.

    யாராவது என்னை போடா வாடா என்று கூப்பிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்னொரு முறை கூப்பிடு என்று திரும்பத் திரும்ப கூப்பிட சொல்வேன்.

    இந்தச் சூழ்நிலையில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆணாக வாழ்ந்து வரும் என்னால் இன்னொரு பையனை திருமணம் செய்து கொள்ள முடியாது. அந்தப் பையனின் வாழ்க்கையை நான் கெடுக்க நினைக்கவில்லை. இதை என் வீட்டில் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. திருமணம் முடிந்தால் சரியாகி விடும் என்று என்னை சமாதானம் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.

    அதற்குப் பின் வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். அதன் பின்பும் நான் பலமுறை யோசித்தேன் தனியாக சென்று எப்படி வாழ்வது என்ன செய்வது என எனக்கு நானே கேள்வி எழுப்பிக்கொண்டேன். அதன் பின்பு இன்டர்நெட்டை பார்த்து எனக்கான விடையைத் தேடிக் கொண்டேன். உடனடியாக சென்னை வந்து இங்குள்ள திருநம்பிகளுடன் சேர்ந்தேன். தினமும் 200 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். உணவு டெலிவரிபாயாக வேலை பார்த்தேன். அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிட்டு வந்தேன். வாழ்வது ஒரு தடவை. அதை நாம் விரும்பியபடி நல்லபடியாக வாழ்வோம் என்று நினைத்து ஆபரேஷன் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினேன். முதலில் மார்பக அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றினேன் முதலில் எனக்கு அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து பலன் கிடைத்தது.

    ஹார்மோன் மாற்றத்திற்காக அதற்குரிய ஊசியை ரத்தப் பரிசோதனை செய்து எடுத்துக் கொண்டு வருகிறேன். 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து ஊசி போட்டு வருகிறேன். 45 வயது முதல் 55 வயது வரை இந்த ஊசியினை போட வேண்டும். கர்ப்பப்பையையும் எடுத்து ஆணுக்கான ஹார்மோன் உடலில் மாறத் தொடங்கியது. அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எனது குரல் மாறிவிட்டது. மீசை வளர்ந்தது. தாடி வளர்ந்தது.

    எனது தலை முடியை ஒரு நல்ல இளைஞனைப் போல கட் பண்ணி கொண்டேன். வெளியில் செல்லும்போது இந்தத் தோற்றத்தை பார்த்து தம்பி, சார், வாடா என்று அழைக்கும் போது உலகத்தை ஜெயித்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குள் மகிழ்ச்சியில் துள்ளியது.

    எல்லா ஆண்களைப் போல சரளமாக ஜாலியாக ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்கு போய் வருகிறேன். ஒரே கவலை பெற்றோர் என்னிடம் பேசுவதில்லை. தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை. நாங்களாய் தேடிக் கொண்டதில்லை. எனவே சமூகம் எங்களை ஒதுக்க கூடாது. திருநங்கைகள், திருநம்பிகளை திருநர் என்று அழைக்க வேண்டும்.

    திருநங்கைகள், திருநம்பிகளுக்காக குரல் கொடுப்பதற்காக அரசு அமைத்துள்ள நல வாரியத்தில் தோழி அமைப்பை சேர்ந்த சுதாவுடன் நானும் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சமூகத்துக்காக நான் இதன் மூலம் பல்வேறு பணிகளை அவர்களுக்காக செய்து வருகிறேன். எனக்கும் திருமணம் செய்ய ஆசை. விரைவில் அது நடக்கும். ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பேன். என்னை போல் தமிழகத்திலும் சென்னையிலும் பல திருநம்பிகள் வாழ்ந்து வென்று காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் நடை போட்டு வருகிறோம் என்றார்.

    • தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
    • தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது.

    அப்போது கோவில் பூசாரி கையினால் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்ட ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்சியுடன் இருந்தனர்.

    நேற்று காலை தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

    தங்க தாலி கட்டிய திருநங்கைகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 27 பவுன் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொண்டனர்.

    இதே போல் வெள்ளியிலான தாலியை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டனர். தாலியை காணிக்கையாக செலுத்துவதால் கூத்தாண்டவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என திருநங்கைகள் தெரிவித்தனர்.

    • சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கூவாகத்தில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

    மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதில் திருநங்கைகளுக்கு மண முடித்தல், தேரோட்டம், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து திருநங்கைகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையிலும், விழுப்புரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி இன்று காலை 2 சுற்று போட்டிகள் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பு சார்பில் நேற்று விழுப்புரத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது.

    இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.

    இவர்களில் நடை, உடை, பாவனை அடிப்படையிலும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் மிஸ் திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை வைசு 2-வது இடத்தையும், தூத்துக்குடி பியூலா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் பிரித்விராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் இறுதி அழகிப்போட்டி விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் திருநங்கைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை தேரோட்டமும் அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதலும் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூவாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    • திருநங்கைகள் வாய்ப்பு கிடைத்தால் சாதித்து காட்டுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக போலீசாக, வக்கீலாக, டாக்டராக, என்ஜினீயர்களாக உருவாகியுள்ளனர்.
    • தவறான பாதையில் சென்ற 10 திருநங்கைகளை நல்வழிப்படுத்தி படிக்க வைத்து வங்கியில் மேலாளராக ஐ.டி. கம்பெனிகளில் என்ஜினீயர்களாக உருவாக்கியுள்ளேன்.

    மனிதனாக பிறந்தும் மனிதர்களுடன் சேர்த்துக் கொள்ள தயங்கும் சபிக்கப்பட்ட சமூகமாக உள்ளது திருநங்கையர்கள் சமூகம். எல்லோரும் போல் ஒரு தாயால் 10 மாதம் சுமந்து பெற்றெடுக்கப்பட்டு வளர்ந்த நாட்களில் பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பெற்றோர் முதல் உற்றார், உறவினர்கள் என்று எல்லோராலும் ஒதுக்கப்பட்டு மனம் வருந்தி குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் திருநங்கையர்கள்.

    கண்ணில் பார்த்திராத திருநங்கை வேடம் பூண்ட அர்ஜூனனை போற்றி புகழும் இந்த சமூகம் கண் எதிரில் வாழும் திருநங்கைகளை நம்மை போல் உள்ளவர்கள் தான் என்று ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. வீட்டை விட்டு ஊரை விட்டு துரத்தப்பட்டு வந்த இந்த சமூகம் இப்போது அனைத்து துறைகளிலும் கால் எடுத்து வைத்து சாதனை புரிந்து வருகிறது.

    திருநங்கைகள் வாய்ப்பு கிடைத்தால் சாதித்து காட்டுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக போலீசாக, வக்கீலாக, டாக்டராக, என்ஜினீயர்களாக உருவாகி இந்த சமூகத்தை அனைவரின் தவறான பார்வையில் இருந்தும் நீக்கி வரலாறு படைத்து வருகிறார்கள். பெருமை சேர்த்த திருநங்கைகளின் சாதனைகளை பார்ப்போம்.

    புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரியும் தீபிகா என்ற திருநங்கை கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம். சிறிய வயதில் தாயை இழந்து விட்டேன். எனக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். அப்பா கூலி வேலை செய்தார். பள்ளி படிப்பை எங்கள் ஊரில் முடித்தேன். எனக்கு சிறிய வயதில் இருந்தே காவலர் உடை அணிந்து போலீசாக பணியாற்ற வேண்டும் என்று தீராத ஆசை.

    இந்த நிலையில் பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு 2010-ம் ஆண்டு சென்னை வந்தேன். மூன்று நாட்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தங்கியிருந்தேன். அப்போது சத்யா என்ற திருநங்கையிடம் எனது நிலையை கூறினேன். அவருடன் சில காலங்கள் தங்கி இருந்தேன். அவர்களுக்கும் சரி, என்னோடு இருந்த திருநங்கைகளுக்கும் சரி எனது எதிர்கால கனவான போலீஸ் வேலை பிடிக்கவில்லை. எனது கனவை சிதைக்கும் நோக்கில் கடுஞ்சொற்களால் என்னை வசைபாடினர். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்களிடமிருந்து வெளியேறினேன்.

    அதன் பின்பு அஸ்வினி என்ற திருநங்கை எனக்கு உதவி செய்து தோழி அமைப்பை சேர்ந்த சுதா, சகோதர அமைப்பை சேர்ந்த ஜெயா சுதா அம்மா ஆகியோரின் உதவியுடன் போலீஸ் வேலைக்கு தயாரானேன். மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியை கண்டேன். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஊரடங்கால் எனது கனவு சிதைந்தது. எனது நிலையை கேள்விப்பட்டு அப்போதைய சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு பேரூதவி செய்தார். உடல் தகுதிக்காக ஊட்டச்சத்து முதல் தேர்வுக்கான புத்தகங்களையும் வாங்கி கொடுத்தார். இது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

    பின்பு இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் எனக்கு ஊட்டச்சத்து முதல் சத்தான உணவுகளை வழங்கி ஊக்கமளித்தார். நான்காவது முறை தேர்வு எழுதி ஜெயித்துக்காட்டி போலீசுக்கு தேர்வானேன். பயிற்சிக்காக திருச்சி செல்ல வேண்டிய சூழ்நிலை. எனது கையில் பணம் இல்லை. உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரன் ஆகியோர் உதவியுடன் போலீஸ் பயிற்சிக்காக சென்றேன்.

    அங்கும் உயர் அதிகாரிகள் என்னை தனது பிள்ளையை போல் அரவணைத்து ஊக்கப்படுத்தி நல்ல முறையில் பயிற்சியை நிறைவு செய்ய வைத்தார்கள். நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற அனைவரும் தாய் தந்தையுடன் சான்றிதழை பெற்றார்கள். தாய்ப் பாசத்தால் இயக்கத்தில் இருந்த என்னை அதிகாரிகள் ஆறுதல் படுத்தி வழி அனுப்பினார்கள்.

    முதலில் கண்ணகி நகரில் போலீஸ் பணியை தொடங்கினேன். அதன் பின்பு தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றினேன். இன்று முதல் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றுகிறேன்.

    இந்தத் திருநங்கைகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த சமூகத்தின் மீது உள்ள தவறான சொல்லை நீக்கி நாங்களும் சாதனையாளர்களே என்று நிரூபிப்போம் என்றார்.

    முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யா கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் பரமக்குடி. எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள் உள்ளனர். அப்பா அரசு வேலையில் இருந்தார். நடுத்தர குடும்பம். பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் குடும்பத்தில் இருந்து விலகி திருநங்கைகளுடன் செங்கல்பட்டு நடராஜபுரத்தில் வாழ்ந்து வருகிறேன். எங்களது சமூகத்தை கவுரவப்படுத்தும் எண்ணத்தில் பட்டப்படிப்பு முடித்து சேலம் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தேன். ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தேன். அதன் பின்பு இங்கிருந்த படி பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் டாக்குமெண்ட் பண்ணி கொடுத்து வருகிறேன். எங்களை சிலர் தெய்வமாக பார்க்கிறார்கள். அவ்வாறு பார்க்க வேண்டாம். சக மனிதர்களாக பார்த்தாலே போதும். நான் வழக்கறிஞர் ஆகி திருநங்கைகளுக்காக நர்சிங் கவுன்சிலில் திருநங்கைகளுக்கு என்று ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் வாங்கி கொடுத்தேன்.

    திருநங்கைகளுக்கு சொல்லிக் கொள்வது விடாமுயற்சி தன்னம்பிக்கையுடன் நமக்கென்று எந்த தடை வந்தாலும் அதை உடைத்து எறிந்து தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் எங்கள் மீது கருணை காட்டி எங்களுக்கும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு வழக்கறிஞர் பதவியை வழங்கினால் சிறப்பாக செயல்படுவதுடன் எங்களது சமூகமும் பெருமை அடையும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணிபுரியும் செல்வி கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி. பள்ளி படிப்பு முடிந்ததும் ஊரிலிருந்து வந்து அரசு இடஒதுக்கீட்டில் படித்து பிசியோதெரபி டாக்டர் ஆனேன். சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே முதலில் பணிபுரிந்து பின்பு திருநங்கை ரோஸ், தியாகராஜன் ஆகியோர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணி அமர்த்தப்பட்டேன். திருநங்கையாக பல தடைகளையும், அவமானங்களையும் வீடு கிடைக்காமலும் கஷ்டப்பட்ட நான் இப்போது ஏராளமானோருக்கு மனோதத்துவ பயிற்சி கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறேன்.

    தவறான பாதையில் சென்ற 10 திருநங்கைகளை நல்வழிப்படுத்தி படிக்க வைத்து வங்கியில் மேலாளராக ஐ.டி. கம்பெனிகளில் என்ஜினீயர்களாக உருவாக்கியுள்ளேன். டாக்டராவதற்கு முன்பு செக்யூரிட்டி வேலை செய்து சில திருநங்கைகளை காப்பாற்றினேன். பாலியல் தொழிலுக்கு போகாமல் உழைத்து தான் வாழ வேண்டும் என்பதை திருநங்கைகளுக்கு வலியுறுத்தி வருகிறேன். பரதத்தின் மீது எனக்கு நேசம் அதிகம். நன்றாக பரதம் கற்றுக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு எங்களது அரங்கேற்றம் நடந்தது. இவ்வாறு அனைத்து துறைகளிலும் நாங்கள் சாதித்து வருகிறோம் என்றார்.

    தானியா ராதாகிருஷ்ணன் என்ற திருநங்கை கூறியதாவது:-


         தானியா

    எனது சொந்த ஊர் கோவை. நான் 2012- ல் பள்ளி படிப்பை முடித்து பின்பு எம்.பி.ஏ., பி.டெக்., முடித்து எம்.எஸ்.டபிள்யூ படித்து வருகிறேன். நான் தற்போது பிளிப்கார்ட் கம்பெனியில் நிர்வாக மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்ற தவறான பிம்பம் உள்ளது. இதை கண்டிப்பாக மாற்றி காட்ட வேண்டும். எங்களாலும் சாதிக்க முடியும் என்பதற்காகவே தன்னம்பிக்கையுடன் படித்து இன்று நான் நல்ல வேலையில் உள்ளேன். கம்பெனியில் எனது வேலையின் திறமையை பார்த்து சக ஊழியர்கள் பாராட்டி என்னை பெருமைப்படுத்துவர்.

    என்னுடன் 400 பேர் வேலை பார்த்தால் அவர்களுக்கு எங்கள் மீது உள்ள தவறான பிம்பம் போய் விடுகிறது. ஆயிரம் பேர் என்னை அறிந்தால் அந்த ஆயிரம் பேருக்கும் தவறான எண்ணம் போய் எங்கள் மீது ஒரு நல்ல நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் எங்கள் அம்மாவே என்னை பார்த்து தவறான கேள்வியை கேட்க வைத்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். எங்களுக்கும் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மேலும் மேலும் வளர்ந்து சாதனை படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருநங்கைகளுக்கான தோழி அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா கூறியதாவது:-


    சுதா

     திருநங்கை சமுதாயத்தின் மீது இருந்த ஏளனப் பார்வையை போக்கி வருகிறோம். இதற்காக எங்கள் சமூகத்தினரை பல்வேறு துறைகளில் சாதனை படைக்க ஊன்று கோலாக இருக்கிறோம். கல்வி, வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்க எங்கள் மீதுள்ள தவறான எண்ணத்தை போக்கி சாதனை படைத்து பெருமை சேர்த்து வருகிறோம்.

    முதலமைச்சரும் எங்களுக்கு நல்ல பேரூதவி செய்து வருகிறார். திருநங்கைகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து வீறு நடைபோடுவதே எங்கள் இலக்கு என்றார்.

    • கஞ்சா விற்பதாக கூறி மிரட்டுகின்றனர்
    • வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    வீர மார்த்தாண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் சிறு, குறு தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் எங்கள் பகுதிக்கு கடந்த 28-ந்தேதி மாலை மது விலக்கு பிரிவு போலீசார் என கூறி 2 பேர் வந்தனர். அவர்கள் எங்களிடம் கஞ்சா மற்றும் மது வியாபாரம் செய்வதாக கூறி எங்களை மிரட்டினர். ஆதலால் திருநங்கைகளுக்கு அவப்பெயர் ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×