என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்
    X

    புதுச்சேரியில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

    • பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    • தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4 திருநங்கைகள் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று காலை சென்றனர்.

    அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் உங்களுக்கு என்ன இங்கு வேலை? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.

    அதற்கு திருநங்கைகள் அரசு அனுமதியுடன் தான் பரிசோதனைக்காக வந்து இருக்கிறோம் என பதில் அளித்துள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனைக்குப்பிறகு வெளியே வந்த திருநங்கைகளிடம் 4 பேர் தகராறு செய்து ஸ்கூட்டர் சாவியை பறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட திருநங்கைகள் இதுபற்றி கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகேவுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திருநங்கைகள் தலைவி ஷீத்தல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தரக்குறைவாக திட்டி தாக்க முயன்ற பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இரவு 10 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. அதன்பின்னர் கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் அங்கு வந்து சமரச பேச்சு நடத்தினார். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு திருநங்கைகள் கலைந்து சென்றனர்.

    திருநங்கைகள் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

    Next Story
    ×